ஆத்துமத்தின் அழிவாகிய பாவமும் பாவப் பழக்கமும்!

ஆத்துமம் மாறாத கடவுளுக்கென்று படைக்கப்பட்டது. அது அவரைக் கண்டடைந்து அவரோடு ஒன்றித்து ஐக்கியப்பட்டால் திருப்தியடையும். வேறொன்றையும் தேடாது. நமது ஆத்துமம் இந்த சரீரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இப்படியிருக்க, பழக்கத்தால் வரும் எண்ணற்ற பாவங்களின் பளுவால், வழக்கமாய்ப் பாவத்தில் ஜீவிக்கும் பாவி இதை அதிக பாரமுள்ளதாக்குவான் என்றால் அவன் கதி என்ன ஆகும்? அவன் இரட்சிக்கப்படுவது மிகவும் அரிதாகும்.

கெட்ட பழக்கம் புத்தியைக் குருடாக்கும். பாவம் அதிகரிக்க, குருட்டுத்தனமும் அதிகரிக்கும். ஆத்துமம் கடவுளை விட்டு எவ்வளவு தூரம் விலகுமோ அவ்வளவுக்கு அது அதிகக் குருடாகும். இதன்பின் பாவிகள் மேலும் மேலும் பாவம் செய்வதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாது. அவர்கள் பேசுவதும், நினைப்பதும் பாவத்தைப் பற்றியே! இதன் நிமித்தம் இவர்களுக்கு ஆரம்பத்தில் அச்சத்தையும், நடுக்கத்தையும் உண்டாக்கிய அந்தப் பாவம், தொடர்ந்து செய்யப்படுவதால் எந்த பயத்தையும் உண்டாக்குவதேயில்லை.

பாவப் பழக்கமுள்ளவன் பாவச் சமயமில்லாத வேளையில் கூட சந்தோஷம் ஒன்றும் அடையா திருந்தாலும் கெட்ட நினைவுகளை நினைத்துக் கொண்டேயிருப்பான். அவனது சம்மதமில்லாமலே பாவப் பழக்கம் அவனைத் தீமைகளுக்குள் இழுத்துக்கொண்டு போய்த் தள்ளும். அவன் நரகத்தில்தான் தன் கண்களைத் திறப்பான். அங்கே கண்ணைத் திறப்பதில் என்ன பயன்? தன் மூடத் தனத்தை அறிந்து அதிக கசப்போடும், துயரத்தோடும் அவன் கண்ணீர் சிந்த மட்டுமே அது உதவும்.

1. பாவப் பழக்கத்தால் வரும் இருதயக் கடினம்

பாவப் பழக்கம் இருதயத்தைக் கடினப்படுத்துகிறது. அதுவரை ஆண்டவர் அளித்த வரப் பிரசாதங்கள் மட்டில் நன்றியற்றவர்களாய் இருந்ததற்குத் தண்டனையாக அவர் தமது வரப்பிரசாதங் களைத் தராமல் நிறுத்தி விடுவதால் இருதயம் கல்லைப் போலக் கடினமாகி விடுகிறது. துர்ப்பழக்க மானது கொஞ்சம் கொஞ்சமாய் மனசாட்சியின் உறுத்தலையும் அழித்து விடும். ஆண்டவர் அவனைத் தண்டித்த போதிலும் அவன் மனந்திரும்பாதிருப்பது ஆச்சரியமல்ல. சில விசேஷ வரத்தால் ஒரு வேளை கடினப்பாவி மனந்திரும்பக்கூடும், என்றாலும் அது விதிவிலக்கு மட்டுமே!

நீ ஆன்ம குணமடைய விரும்பினால் அதற்கு மருந்து உண்டு. தேவ வரப்பிரசாதம் புதுமை செய்யும் என்று நீ எதிர்பார்க்காமல் தேவ உதவியைக் கொண்டு உன்னையே எதிர்த்துப் போ ஆபத்தான பாவச் சமயத்தினின்று விலகி ஓட வேண்டும்; தீய நண்பர்களை விலக்க வேண்டும்; சோதனை நேரத்தில் தேவ உதவியை மன்றாடி அதை வெல்ல வேண்டும். இது தவிர இதற்கேற்ற வழி களையும் நீ பயன்படுத்த வேண்டும். அதாவது அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்தல், தேவ நற்கருணை அடிக்கடி உட்கொள்ளுதல், தினமும் ஞான வாசகம்,தேவமாதாவின் மீது பக்தி, நீ திரும்ப பாவத்தில் விழாதபடி அவர்கள் உனக்கு உதவி செய்யும்படி அடிக்கடி அவர்களை மன்றாடுதல் ஆகியவை : ஆண்டவர் உன்னை அழைக்கும் சத்தத்தைக் கேள். நீ உன் ஆத்துமத்தில் செத்துக் கிடக்கிறாய். உன் பாவப் பழக்கமாகிய வாழ்வின் இருள் நிறைந்த கல்லறையில் நின்று வெளியே வா என்கிறார் அவர். தாமதமின்றி வெளியே வந்து. உன்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடு. இதுவே உனக்குக் கடைசி அழைப்பாயிருக்கக் கூடுமென்று அஞ்சி நடுங்கும். இவற்றில் நிலையாயிருந்தால் பாவத்தினின்று விடுதலை அடைவாய்.

2. பாவிகளின் ஆன்மாக்கள் விக்கிரகங்களை வழிபடுபவை!

அஞ்ஞான தெய்வங்களைத் தொழுவதுதான் விக்கிரக வழிபாடு என்று அநேகர் நினைத்துக் கொண்டு, தாங்கள் ஒரே சர்வேசுரனை விசுவசித்து ஆராதிப்பதாக எண்ணுகிறார்கள். ஆனால் அர்ச். சின்னப்பர் பொருளாசையை விக்கிரக வழிபாடு என்றார் என்பதை நினைவில் வையுங்கள். ஒருவன்எதன் மீது இச்சை கொள்கிறானோ அதை ஆராதிக்கிறான். அது அவனுக்கு தெய்வமாகிறது. "இருத யத்தில் இருக்கும் ஓர் துர்க்குணம் பீடத்தின் மேலிருக்கும் ஓர் விக்கிரகம் போலாம்'' என்கிறது வேதாகமம். இதனாலேயே அர்ச். அவிலா தெரேசம்மாள்: " நீ இன்ப சுகங்களை நேசித்தால், அவை உனக்குத் தெய்வங்கள் ஆகின்றன'' என்கிறாள். மனிதன் ஆண்டவருக்கு மேலாக எதைத் தெரிந்து கொள்வானோ, அதை தெய்வமாக்குகிறான் என்று அர்ச். சிப்ரியன் கூறுகிறார். ஆத்துமம் பாவத்திற்குச் சம்மதிக்கும் போது அது ஆண்டவரைப் பார்த்து : 'ஆண்டவரே! என்னை விட்டு விலகிச் செல்லும்" என்கிறது. தீயவர்கள் ஆண்டவரைப் பார்த்து எங்களை விட்டுப் போய்விடும் என்றார்கள் (யோபு 21:14). இப்படி வார்த்தையினாலல்ல, தன் செயலாலேயே ஆத்துமம் இப்படி உரைக்கிறது" என்கிறார் அர்ச். கிரகோரியார். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பதும், தன்னுடையவும் பிறருடையவும் ஆத்தும் இரட்சணியத்திற்குத் தேவைப்படும் அளவுக்கு மட்டும் உலகப் பொருட் களைப் பயன்படுத்துவதும் மீட்படைய அவசியம். தேவசிநேகமின்றி இரட்சணியமில்லை.

3. ஆத்துமத்தை இருளடையச் செய்யும் மோக பாவம்!

மோக பாவியின் ஆத்துமத்தில் நரக இருள் அடர்ந்திருக்கிறது என்று மன்ரேசா கூறுகிறது. இதன் காரணமாக, அவன் தன் பாவத்தின் கனாகனத்தைக் காண முடியாதவனாக இருப்பான். அவனது ஆத்துமத்தின் கண்களாகிய மனதையும் புத்தியையும் இருள் சூழ்ந்திருப்பதால், தான் இருக்கும் பயங்கர ஆன்ம நிலையை அவன் உணராதிருப்பான். எந்த விதமான மன உறுத்தலுமின்றி அவன் தன் பாவத்தைத் தண்ணீரைப் போலப் பருகுவான்; பெரும்பாலும் மோக பாவி வழக்கப் பாவத்தில் சிக்கியவனாக இருப்பான்; அதிலிருந்து வெளியே வரவிரும்ப மாட்டான். அப்படியே விரும்பி, நல்ல பிரதிக்கினை செய்தாலும், முதல் சோதனையில் மிக எளிதாகப் பாவத்தில் தவறி விழுவான்.

மோக பாவி பெரும்பாலும் பகிரங்கப் பாவியாக இருந்தாலும், தன் பாவத்தைக் குறித்து வெட்கப் படமாட்டான்; உண்மையில் தங்கள் மோக பாவத்தைக் குறித்துப் பெருமை பாராட்டும் பாவிகளும் கூட ஏராளமாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கடமைகளில் தவறுவார்கள்; தங்கள் மனைவி, குழந்தைகளைக் கைவிடுவார்கள். உண்மையில் இது கடவுளுக்கு மிக அருவருப்பூட்டும் பாவமாகும்.

மோக பாவி உண்மையாகவே மனந்திரும்ப விரும்பினால், அவன் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்; அடிக்கடி, அல்லது குறைந்தபட்சம் ஞாயிறன்றாவது முழுப் பூசை கண்டு நன்மை வாங்குவதுடன் தினமும் பல முறை ஞான நன்மை அருந்தும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்; தியானத்திற்கும் ஜெபமாலைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும்; பாவ சந்தர்ப்பங்களைக் மிகக் கண்டிப்பாக விலக்கியே தீர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளின் வரப்பிர சாதத்தையும், அமலோற்பவத் தாயாரின் உதவியையும் இடைவிடாமல் இரந்து மன்றாடுவதில் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். கற்பென்னும் புண்ணியத்தை ஏக்கத்தோடு தேடவும், அதை நேசிக்கவும் வேண்டும். உங்கள் பாவம் புரையோடிப் போனதாக இருந்தாலும், அவநம்பிக்கைக்கு இடம் தராதீர்கள்; ஏனெனில் உங்கள் பாவத்தை விட, தேவசிநேகம் எவ்வளவோ மேலானது! எனவே கடவுளை இனி பாவத்தால் நோகச் செய்வதில்லை என்னும் பிரதிக்கினையோடு உங்கள் பாவத்தை எதிர்த்துப் போராடுவீர்கள் என்றால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் ! தாழ்ச்சியோடும், நொறுங்கிய உள்ளத்தோடும் தம்மைத் தேடும் ஆத்துமங்களை ஆண்டவர் கைவிடுவதில்லை, தேவ அன்னையும் அவர்களைப் புறக்கணிப்பதில்லை! மோட்சத்தில் தேவதூதர்களும், அர்ச்சியசிஷ்டவர்களும், பூமியில் குருக்களும், துறவறத்தாரும், நல்ல மனிதர்களும் அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.

4. இறுதித் தீர்ப்பு ஒருபோதும் மாற்றப்பட இயலாதது!

ஒரு முறை பிறந்து, ஒரு முறை இறக்கவும், ஒரே முறையில் நித்தியத்திற்கும் தீர்ப்பிடப்படவும் நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம். இந்த இறுதித் தீர்ப்பு ஒருபோதும் மாற்றப்பட இயலாதது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். இங்கே மறு மதிப்பீடு என்பது இல்லை! ஒவ்வொரு நாளும் மனதுக்குள் உன் நித்திய நடுவருக்கு முன்பாக உன்னை நிறுத்தி, உன் செயல்களுக் கேற்ப அவர் உன்னைத் தீர்ப்பிடுவதாக ரூபிகரம் செய்! உன்னை இழுத்துக்கொண்டு போகப் பசாசுக்கள் அக்கினியாலான சங்கிலிகளோடு காத்திருப்பதை நினைத்துப் பார்! நீ ஏன் அஞ்சி நடுங்க வேண்டும் என்பது புரியும். நீதியின் தேவனோ தமது பக்திச் சுவாலகர்களிடமும் குற்றங் காண்கிறவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உன் தீர்வையின் நேரத்தில் நம்பிக்கையோடும், தைரியத்தோடும் அவர் முன் நிற்க நீ விரும்பினால், இப்போதே உன் ஆத்துமத்தைப் பாவசங்கீர்த்தன் தேவத்திரவிய அனுமா னத்தால் சுத்திகரித்து, தேவ நற்கருணையும், திவ்விய பலிபூசையும், ஜெபமாலையும், இவை போன்ற சகல தேவ காரியங்களும் கொண்டு வரும் வரப்பிரசாதங்களையும், பேறுபலன்களையும் கொண்டு அதை அலங்கரித்து வைத்திரு. இதையே எப்போதும் உன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிரு.

தனித் தீர்வை பற்றிய நினைவு தரும் நடுக்கம்!

மனிதன் இறந்தவுடன், இறந்த இடத்திலேயே சேசுநாதர் அவனது ஆன்மாவுக்குத் தோன்றி, அவனது பாவ புண்ணியங்களின் அடிப்படையில், மோட்சம் அல்லது உத்தரிக்கிற ஸ்தலம் அல்லது நரகத்திற்குச் செல்ல அவனைத் தனிப்பட்ட முறையில் தீர்ப்பிடுகிறார் என்பது கத்தோலிக்க விசுவாசம். இதுவே தனித் தீர்வை எனப்படுகிறது. 

அர்ச்சியசிஷ்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் மரண நேரத்தையும், நீதிபரரான கடவுளுக்கு முன்பாகத் தாங்கள் தன்னந்தனியாக நிற்க நேரும் தனித் தீர்வையையும் பற்றி நினைத்த போதெல்லாம் நடுங்கினார்கள்.

அர்ச்சியசிஷ்டவராய் வாழ்ந்த அர்ச். அவெல்லினோ பிலவேந்திரர், இந்த நினைவு தம்மைத் தாக்கும்போதெல்லாம், ''ஆண்டவரே, மறுவுலகத்தில் எனக்கு என்ன நடக்குமோ? நான் இரட்சிக்கப்படுவேனா? அல்லது நரகத்திற்கு உள்ளாவேனா?" என்று மகா நடுக்கத்தோடு சொல்வது வழக்கம்.

அர்ச். லூயிஸ் பெர்ட்ராண்ட் இரவில் இந்த நினைவு வந்தவுடன், உறங்க முடியாமல் நடுங்கியபடி "ஆ! நித்திய கேட்டிற்கு நீ ஆளாக மாட்டாயென்று எப்படித் தெரியும்?' என்பார். 

ஸ்பெயின் நாட்டு அப்போஸ்தலராகிய வணக்கத்திற்குரிய அவிலா என்னும் குருவானவர் தமக்கு சாவு சமீபித்திருப்பதாக அறிந்தவுடன் இந்த பயத்தினாலேயே "ஆ! என் ஆண்டவரே, நான் மரணத்திற்கு நன்றாய் ஆயத்தம் செய்ய இன்னும் கொஞ்சம் காலம் கிடைத்தால் நலமாயிருக்குமே!" என்று கூக்குரலிட்டார்.

மடாதிபதியான அகாத்தோ அநேக வருடங்களைத் தவ வாழ்வில் கழித்த பின்பும், தமது மரண நேரத்தில் "ஆ எனக்கு என்ன நடக்குமோ? சர்வேசுரனுடைய தீர்வையை யார் அறியக்கூடும்?" என்று கூறக் காரணமாக இருந்தது இந்த பயம்தான். 

அர்ச். அர்சேனியும், மரண நேரத்தில் அஞ்சி நடுங்கினார். அவரது சீடர்கள் அவரிடம் இப்படி அவர் பயப்பட காரணமென்ன என்று கேட்க, "இந்தப் பயம் எனக்கிருப்பது இன்றல்ல, என் வாழ்நாள் முழுதுமே எனக்கிருந்து வந்தது" என்றார்.

இவர்களை விட இன்னும் அதிகமாய் பரிசுத்த யோபு நடுங்கினார். "கர்த்தர் என்னை நடுத்தீர்க்க வரும்போது என்ன செய்வேன்? அவர் பரிசோதிக்கும்போது என்ன பதில் சொல்வேன்?' என்றார் (யோபு 31:14).

கடைசி வரை கெட்ட வழியில் வாழ்பவன் நல்ல முடிவை அடைவது ஒருபோதும் சாத்தியமில்லை என்று நான் அனுபவத்தால் அறிந்து நிச்சயமாய் நம்புகிறேன்'' என்கிறார். "மரண நேரம் வரும் வரை பாவத்தில் ஜீவித்த நூறாயிரம் பேர்களுக்குள் மரணத் தறுவாயில் ஒருவன் முதலாய் தேவ இரக்கத்தை அடைந்து கொள்வது அரிது" என்று அர்ச். எரோனிமும் சொல்கிறார். 

செத்தவனை உயிர்ப்பிப்பதை விடவும் எப்பொழுதும் பாவப் பழக்கத்தில் ஜீவிப்பவர்களின் வாழ்வு நல்ல விதமாய் முடிவது பெரிய புதுமை என்று அர்ச். வின்சென்ட்ஃபெரர் சொல்கிறார்.

இவர்கள் பெரும் அர்ச்சியசிஷ்டவர்கள், தங்கள் ஆத்துமமாகிய ஆடையைக் கிறீஸ்துநாதரின் திரு இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக் கொண்டது மட்டுமின்றி, அவரது மகிழ்ச்சிக்கும் காரணமாக இருந்தவர்கள்; ஏராளமான ஆன்மாக்களை மீட்டுத் தங்கள் ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்தவர்கள்; வாழ்நாள் முழுவதும் கண்ணுங் கருத்துமாய்ப் பாவங்களை விலக்கியவர்கள்; ஒவ்வொரு இரவிலும் தங்கள் ஆத்துமத்தைத் தங்கள் எதிரில் நிறுத்தி, அதன் குற்றங்குறைகளை ஆராய்ந்து கடுமையாகத் தீர்ப்பிட்டவர்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக, சேசுநாதரைத் தங்கள் உயிருக்கும் மேலாக நேசித்தவர்கள். இவர்களே தங்கள் மரண நேரத்தையும், தனித் தீர்வையையும் நினைத்து நடுங்கினார்கள் என்றால், நாம் எந்த அளவுக்கு இது பற்றி அஞ்சி நடுங்க வேண்டும்!

''அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள்!'' என்று அப்போஸ்தலர் எச்சரிக் கிறார் (பிலி 2:12). ''நீதிமானே இரட்சணியமடைவது அரிதானால், தேவ துரோகிக்கும் பாவிக்கும் இடம் எங்கே?" என்று அர்ச். இராயப்பர் நம்மை வினவுகிறார் (1 இரா. 4:18).

உண்மை இப்படியிருக்க, கணக்கற்ற பெரும் பாவங்களைக் கட்டிக்கொண்ட அற்ப மனிதன் நடுங்காதிருப்பானா? இனி வீணாக்குவதற்கு நேரமில்லை! ஆத்துமம் இரட்சிக்கப்படுவது முக்கியம். நேரமிருக்கும்போதே பாவி தன் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும். சாவான பாவம் கண்ணியையும், வலையையும் போல் எதிர்பாராத நேரத்தில் அவனைச் சிக்க வைக்காதபடி அவன் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

அவன் தன்னை முழுவதும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, இனியாவது தன் மரண நேரத்தில் தனக்கு மன வேதனை தராமல் ஆறுதல் தரக்கூடிய முறையில் அவன் வாழத் தொடங்க வேண்டும்; அடிக்கடி தேவத்திரவிய அனுமானங்களைப் பெற வேண்டும்; ஆபத்தான பாவ சமயங்களை விட்டுவிலக வேண்டும் கடவுளுக்கு சித்தமானால் உலகத்தையுமே துறந்துவிட வேண்டும். உனது நித்திய இரட்சணியத்தை நிச்சயப்படுத்த வழி தேடு. இப்படி இதை நிச்சயப்படுத்துவதற்காக, நீ எவ்வித பரித்தியாகம் செய்தாலும், எதெதை விலக்கினாலும் அது அதிகமென்று சற்றும் எண்ணாதே.

"நிர்ப்பாக்கிய மனிதா! பரமபிதா காலத்தையெல்லாம் உன் கையில் அடக்கி வைத்தது போல் ஏன் எதிர்காலத்தை நினைத்தபடி வாழ்கிறாய்?" என்று அர்ச். பெர்னார்ட் கேட்கிறார். ''உன்கையில் ஒரு மணி நேரம் இல்லாதிருக்க, ஒரு நாள் உயிரோடிருப்பதாக எப்படிக் கணக்கிட்டுக் கொள்கிறாய்?'' என்று அர்ச். அகுஸ்தீன் கேட்கிறார். ஆம், இன்னும் ஒரு மணி நேரம் உன் ஜீவிய காலம் நீடித்திருக்கும் என்பதே நிச்சயமில்லாதிருக்க, நாளைக்கும் நான் இருப்பேன் என்று எப்படி நிச்சயமாய் எண்ணு கிறாய்? இன்று நீ மரிக்க ஆயத்தமாயிராவிட்டால், உன் மரணம் துர்மரணமாயிருக்கக் கூடுமென்று அஞ்சக்கடவாய்" என்று அர்ச். தெரேசம்மாள் தீர்மானமாய் சொல்லியிருக்கிறாள்.

இதுவே மனித வாழ்விலெல்லாம் அதிமிக முக்கியத்துவம் உள்ள அலுவல் ஆகும். ஏனெனில், அது ஆத்தும் காரியம். அது போனால் எல்லாம் போய்விடும். ''நம் ஆத்தி மற்றெல்லாப் பொருட்களையும் விட மிக விலையேறப்பெற்றது'' என்கிறார் அர்ச். கிறீசோஸ்தோம். இந்தச் சத்தியத்தைக் கண்டறிவதற்கு சர்வேசுரன் தாமே நமது ஆத்துமங்களை இரட்சிப்பதற்காக தமது திருச்சுதனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்ததை நாம் அறிவதே போதுமானது.

நித்திய வார்த்தையானவர் தமது இரத்தத்தைச் சிந்தி அந்த ஆத்துமங்களை மீட்பதற்குப் பின்வாங்கவில்லை. ''பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் நீங்கள் (1 கொரி. 6). எனவே கடவுளின் விலைதான் மனிதனின் விலையாகவும் இருக்கிறது என்று திருச்சபைத் தந்தை ஒருவர் கூறுகிறார். மனிதனின் இரட்சணியம் மகத்தான விலை கொடுத்து வாங்கப்பட்டிருப்பதால், அவனது விலை சர்வேசுரனின் விலைக்குச் சமமானதென்று எண்ண வாய்ப்பளிக்கிறது. ஆத்துமமானது இவ்வளவு பெரிய விலை பெறுமானால் உலகத்திலுள்ள எந்தப் பொருளை ஈடாகப் பெற்றுக் கொண்டு அதை இழக்கக் கூடும்?

தன் ஆத்துமத்தை இழந்து போக நேரிடலாம் என்று அஞ்சி நடுங்காதவன் இரட்சிக்கப்பட மாட்டான். ஆகையால் நாம் கஷ்டப்பட்டு, நமக்குப் பலவந்தம் செய்தால்தான் நாம் இரட்சணிய மடைவோம். பரலோக இராச்சியம் பலவந்தப்படுகிறது. பலவந்தம் செய்வோரே அதைப் பறித்துக் கொள்கிறார்கள் (மத். 11:12). "இரட்சணியமடைய வேண்டுமானால் நமது மரணத் தறுவாயில், நமது வாழ்வு நமது கர்த்தராகிய சேசுக்கிறிஸ்துநாதருடைய வாழ்விற்கு ஒத்ததாயிருக்க வேண்டும்.

''இரட்சிக்கப்படக் குறிப்பிட்டவர்களை அவர் தமது திருச்சுதனின் சாயலுக்கு ஒத்தவர்களாக்கினார் (உரோ 8:29). ஆதலால், ஒரு புறத்தில் சகல பாவச் சமயங்களையும் நாம் நீக்க வேண்டும். மறுபுறத்தில், இரட்சணியம் அடைவதற்கேற்ற வழிகளையெல்லாம் உபயோகிக்கவும் வேண்டும். அர்ச். பெர்னார்து சொல்கிறபடி பரலோக இராச்சியம் சோம்பேறிகளுக்குக் கொடுக்கப்படாது.

மாமரியின் மீதான பக்தி, சேசுவைச் சென்றடையும் வழி!

சேசுவே இரட்சகர்! சேசுவே ஆண்டவர் ! சேசுவே சர்வேசுரன்! சகல சிருஷ்டிகளும் அவருக்காக, அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டுள்ளன. ''அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாக்கப்பட்ட தொழிய உண்டாக்கப்பட்டவைகளில் எதுவும் அவராலேயன்றி உண்டாக்கப்படவில்லை " (அரு.1:3).

அவரே நம் இரட்சகர்! ''நாம் பாவங்களுக்கு மரித்தவர்களாய் நீதிக்கு ஜீவிக்கும்படி, அவர் தாமே சிலுவை மரத்தின் மேல் தமது சரீரத்தில் நமது பாவங்களைச் சுமந்தார். அவருடைய காயங்களினால் நாம் குணமாக்கப் பட்டோம்!" (1இரா.2:24). நாம் இரட்சணியம் அடைய வேண்டியதற்கு வானத்தின் கீழ் (அவருடைய நாமமல்லாது) வேறே நாமம் மனுஷருக்குக் கொடுக்கப்படவில்லை (அப். நட. 4:12).

சேசுவே ஆண்டவர்! ஏனெனில் "இவரே காணப்படாதவராகிய சர்வேசுர னுடைய சாயலும், சகல சிருஷ்டிகளுக்கும் முந்தின பேறுமானவர். அதெப்படியென்றால், பரலோகத்திலும் பூலோகத்திலும் காணப்பட்டவைகளும், காணப்படாதவைகளுமான சகலமும் இவருக்குள் சிருஷ்டிக்கப்பட்டன.... இவரே எல்லோருக்கும் முந்தினவராயிருக்கிறார். இவருக் குள்ளே சகலமும் நிலைபெறுகின்றது" (கொலோ.1:15-17).

சேசுவே சர்வேசுரன்! அவரே தேவ வார்த்தையானவர். ''அந்த வார்த்தை சர்வேசுரனிடத் திலிருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார்" (அரு.1:1). "சுயஞ்சீவிய சர்வேசுர னுடைய குமாரனும்." (மத்.16:16), பாவங்களை மன்னிக்கிறவரும், வரப்பிரசாதங்களின் கருவூலமும், சிநேகத்தின் ஊற்றும், " மறைவாயிருக்கிறவைகளை வெளிப்படுத்துகிறவரும்" (மத் 13:35), " மனித னைத் தீர்வையிடும் அதிகாரத்தைப் பிதாவிடமிருந்து பெற்றிருக்கிறவரும்” (அரு. 5:27), "ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே இருக்கிறவரும்" (அரு. 8:58) அவரே. அவரே நம் இறுதிக்கதி!

எனவே, கிறீஸ்துநாதரைத் தன் இரட்சகராகவும், ஆண்டவராகவும், உன்னத சர்வேசுரனாக வும் ஏற்றுக்கொள்ளாதவன் எவனும் நித்தியத்திற்கும் இழக்கப்படும் ஆபத்திலிருக்கிறான்.

ஆனால் கத்தோலிக்கரிடையேயும் கூட அறியாமையில் மூழ்கியிருக்கிற அநேகர் கிறீஸ்து நாதரை விட்டுவிட்டு, தேவமாதா மீதும், அர்ச்சியசிஷ்டவர்கள் மீதும் உண்மையான அன்பில் லாமல், ஒரு முறையற்ற வெளியரங்க பக்தியை மட்டும் கொண்டிருக்கிறார்கள். திருநாட்களின் வெளிக் கொண்டாட்டங்கள், வரி வசூல், ஆடை அணிகலன்கள், குடிவெறி, உல்லாசம், சப்பரம், கும்பிடு சரணம் போன்ற வெளிக்காரியங்களில் மட்டுமே மூழ்கிக் கிடக்கிறார்கள். தேவமாதா மீதும், அர்ச்சியசிஷ்டவர்கள் மீதும் நாம் கொள்ளும் பக்தி (திவ்ய பலிபூசை, தேவ நற்கருணை, பாவசங்கீர்த்தனத்தின் வழியாக) நமதாண்டவராகிய சேசுவோடு நம்மை இணைக்காவிட்டால், நம் பக்தி உண்மையான கிறீஸ்தவ பக்தியல்ல. கிறீஸ்துநாதரை அறிந்து, நேசித்து, சேவிக்க எல்லா முயற்சியையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவமாதாவோ கிறீஸ்துநாதரை நாம் சென்றடையும் வழியாக இருக்கிறார்கள். மாதா பக்தி நம்மைக் கிறீஸ்துநாதரிடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை எனில், இந்த மகா உன்னத சிருஷ்டி யான திவ்ய கன்னிகை உலகிற்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் ஒருபோதும் நிறைவேற முடியாது. சேசுநாதர் மாமரியாகிய மரத்தில் கனிந்திருக்கிற கனியாயிருக்கிறார். இக்கனியைப் பெற்றுக் கொள்ளும் ஏக்கத்துடனேயே நாம் மாதாவை அணுகிச் செல்ல வேண்டும். ஆகையால் மாதா பக்தி யைப் பயன்படுத்தி, சேசுவைச்சென்றடைய நமக்கு உதவுமாறு மாதாவிடம் மன்றாடுவோமாக!

தேவத்திரவிய அனுமானங்களைத் தள்ளிப் போடாதீர்கள்!

ஞானஸ்நானம்: 

பிறந்தது முதல் ஞானஸ்நானம் பெறும் வரை உங்கள் குழந்தை ஜென்மப் பாவத்தால் பசாசின் அடிமையாகவும், கடவுளின் எதிரியாகவும் இருக்கிறது. குழந்தை பிறந்த அன்றே அதற்கு ஞானஸ்நானம் தர ஏற்பாடு செய்த நல்ல கத்தோலிக்கப் பெற்றோரை நீங்களும் கண்டுபாவியுங்கள்.

பாவசங்கீர்த்தனம், திவ்ய நற்கருணை: 

ஐந்து வயதுக் குழந்தை ஒன்று நரகத்தில் இருப்பதாக அர்ச். கிரகோரியார் கூறுகிறார். புத்தி விபரம் அறிந்தவுடன் குழந்தை பாவசங்கீர்த்தனம் செய்து தேவ மன்னிப்படைய அவனுக்கு உதவுங்கள். அவன் திவ்ய நன்மை உட்கொள்ளவும் உடனே ஆயத்தம் செய்யுங்கள்.

இவ்வாறு சேசுவின் அரவணைப்பிற்கும், நேசத்திற்கும் அவனை ஒப்புக்கொடுங்கள். அவனது புதுநன்மை நாளன்று அபத்தமான டிஜிட்டல் பேனர்கள், காதைக் கிழிக்கும் சினிமா பாடல்கள் இவைகளைத் தவிர்ப்பதில் எச்சரிக்கையாயிருங்கள். திவ்ய அன்பர் அவனிலும், அவன் திவ்ய அன்பரிலும் இளைப்பாறவிடுங்கள்.

அவஸ்தைப்பூசுதல்: 

இறந்து விடும் ஆபத்தில் இருக்கும் உறவினர் முதலில் தம் ஆன்ம மருத்துவராகிய குருவானவரை சந்திக்க சற்றும் தாமதியாமல் ஏற்பாடு செய்வது உங்கள் தலையாய கடமை. அதன்பின் உடலுக்கான மருத்துவரிடம் அவரைக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் உடலின் மரணத்தை விட, ஆயத்தமற்ற ஆத்தும் மரணம் அதிபயங்கரமானது!

நரகத்தின் அக்கினிப் பற்களிலிருந்து உங்கள் உறவினரைக் காப்பாற்ற எப்போதும் விழிப்பாயிருங்கள்! பாவசங்கீர்த்தனமும், அதைத் தொடர்ந்து வழங்கப்படும் அவஸ்தைப் பூசுதலும், அவஸ்தை நன்மையும், பரிபூரணப் பலனுள்ள இறுதி ஆசீர்வாதமும் நரகத்திலிருந்து மட்டுமின்றி உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்தும் கூட ஆன்மாவை விடுவிக்க வல்லவை!

ஏன் தேவன் மனிதன் ஆனார்?

பாவத்திலிருந்து மனிதர்களை மீட்டு பரலோகப் பேரின்ப வாழ்வை அவர்களுக்குக் கொடுக்க விரும்பிய சர்வ வல்லபக் கடவுள், எது செய்தாலும் அரையும் குறையுமாய்ச் செய்பவர் அல்ல. கரை காணாத தேவசிநேகத்தின் பெருங்கடலாகிய கர்த்தர் நம்மீது காட்டும் கருணைக்கும் அன்பிற்கும் அளவே இல்லை என்று காட்டவே தேவன் மனிதனானார்.

பாவம் கொடியது, அப்பாவத்தால் நீதியுள்ள தேவனுக்கு ஏற்படும் காயமும் நிந்தையும் கொடியது. தேவநீதியோ அளவற்றது. அதற்கு ஏற்பட்ட பங்கம் நீங்க வேண்டுமானால், அதற்கு உரிய பரிகாரமும் அளவற்றதாயிருக்க வேண்டும். அற்ப மனிதனுக்கோ அத்தகைய பரிகாரத் தைச் செய்ய வல்லமையில்லை! அதனால் தான் பரிசுத்த பரம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் இப்பரிகாரத்தைச் செய்ய முன் வந்தார். 

ஈன மனிதர்களாகிய நம் மனுஷீகம் தெய்வீகப் பேரின்பக் கடவுளின் தெய்வீகத்தில் அடங்கி, நித்திய சமாதான நிலையை அடைவதையே நாம் பரலோகப் பேரின்பம் என்கிறோம். அதாவது ஒரு விதத்தில் மனுஷீகம் தெய்வீகத்தில் பங்கடைய வேண்டும். இந்த உரிமையை மனிதர்களுக்குத் தர விரும்பிய தெய்வீகம் நமது மனுஷீகத்தோடு கலந்து கொள்ள விரும்பியது. மனிதன் தானாக மேலேறி தெய்வீகத்தோடு சமாதானமடைய முடியாது என்பதால், தேவனே கீழிறங்கி மனிதன் ஆனார்; மனுஷீகத்தை உயர்த்திப் புனிதப்படுத்தினார்; அதன் மீது தெய்வீக வரப்பிரசாதத்தைப் பொழிந்தார்; அதைத் தெய்வீகத்தில் பங்கடையவும் வைத்தார். இதற்காகத்தான் தேவன் மனிதனானார்.

இந்த உண்மையை அறிந்தபின், நம் உள்ளம் மகிழாமல் இருக்கக் கூடுமா? நெஞ்சம் நெகிழாமல் இருக்கலாகுமா? இருதயம் பூரித்துத் துடிக்காமல் இருக்க இயலுமா? எங்கும் பரந்து விரிந்து நிறைந்த சர்வேசுரன் நம்மைப் போன்ற ஏழை மனிதன் ஆனார் என்ற இந்த சத்தியம் எந்நாளும் நம் மனதில் இரைந்து, சப்தித்து ஒலிப்பதாக.

மனஸ்தாபப்படும் பாவியைக் கடவுள் மன்னிக்கிறார்!

"நீ அவரிடம் திரும்பி வருகையில் அவர் தமது முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார்'' என்கிறது வேதாகமம் (நாளாகமம் 30). "என்னருகில் திரும்பி வா, நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்'' (எரேமி. 3); என் பக்கமாய் நீ திரும்பினால், நானும் உன் பக்கமாய்த் திரும்புவேன் (சக்கரி. 1:3) என்கிறார் ஆண்டவர்.

''அவர் உங்களைக் காப்பாற்றுவதாலேயே மகிமையடைவார்'' (இசை.30). மன்னிப்பளிக்க எவ்வளவு காலம் தாமதிப்பார்? ஒரு நிமிடம் கூட அல்ல! "நீ அழும்போது அழுது கொண்டிருக்க விட மாட்டார். தடையின்றி உனக்கு இரக்கம் காண்பிப்பார்" (இசை. 30). பாவியே, நீ அதிக நேரம் கண்ணீர் சிந்த விட மாட்டார். நீ சிந்தும் முதலாவது கண்ணீர்த் துளியைக் கண்டவுடன் கர்த்தர் உன்மேல் இரக்கமா யிருப்பார். "உன் அழுகைச் சத்தம் அவர் காதில் விழுந்தவுடனே அவர் உனக்குப் பதில் உரைப்பார்" (இசை. 30).

ஆயினும் "சகலத்தையும் அளவோடும், எண்ணத்தோடும், நிறையோடும் குறிப்பிட்டிருக்கிறீர் (ஞான. 11:21) என்ற வேதாகம வாக்கியத்தின்படி, கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பூமியில் ஜீவிக்கும் நாட்கள் இத்தனை , அனுபவிக்கும் சுகம் இவ்வளவு, அவனுக்குத் தாம் அளிக்க நிச்சயிக்கும் சத்துவங்கள், நன்மைகள் இத்தனை என ஏற்கெனவே நியமித்திருப்பது போலவே, அவர் ஒவ்வொரு வருக்கும், மன்னிக்கும் பாவங்கள் இத்தனையென்றும் நியமித்திருக்கிறார்.

அந்தக் குறிக்கப்பட்ட தொகை நிரம்பியபின் அவர் மன்னிப்பதில்லை. அர்ச். அகுஸ்தீன் உரைப்பதாவது: ஒரு குறிக்கப்பட்ட காலம் வரை ஆண்டவர் அவனவன் மட்டில் இரக்கத்தோடு காத்திருப்பார். அந்தக் காலம் நிறைவேறின் பின்பு அவனுக்கு வேறு மன்னிப்புக் கொடுக்கப்பட இடமிராது என்பதை நாம் மறந்து போகலாகாது என்கிறார். செசரேயாவின் யுசேபியுஸ் என்பவரும் இவ்வாறே கூறுகிறார். "குறிக்கப்பட்ட ஓர் தொகை வரைக்கும் ஆண்டவர்காத்துக் கொண்டிருப்பார். அதற்குப் பின்கைநெகிழ்ந்து விடுவார்.''

எனவே மனந்திரும்புவதற்குக் காலம் தாழ்த்தாதீர்கள். பலர் ஏதாவது பொய்க் காரணங்கள் சொல்லிக்கொண்டு வருடக்கணக்கில் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் இருக்கிறார்கள். தங்கள் பங்குக்குரு நல்லவர் அல்ல என்பதால் பாவசங்கீர்த்தனம் செய்வதில்லை என்கிறார்கள். இவர்கள் வேறு நல்ல பாரம்பரியக் குருக்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்யலாமே! பலர் ''நான் கடவுளிடமே நேரடியாகப் பாவங்களைச் சொல்லிக் கொள்வேன்'' என்கிறார்கள்.

ஆனால் கிறிஸ்து நாதர் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைத் தம் குருக்களிடமே ஒப்படைத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா (அரு. 22:23)? உங்கள் வழக்கைக் குடியரசுத் தலைவர்தான் விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்துவீர்களா? வேலைக்காகப் பிரதமரிடம் விண்ணப்பிப்பீர்களா? இவற்றிற்குரிய அதிகாரிகளிடம் நீங்கள் செல்வதுதானே முறை? மேலும், கடவுளிடம் நேரடியாகப் பாவசங்கீர்த்தனம் செய்வதால் உங்கள் பாவங்கள் உறுதியாக மன்னிக்கப்பட்டன என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? பாவமன்னிப்பை முத்திரையிட்டு உறுதிப்படுத்துவது பாவசங்கீர்த்தனகுருவின் வேலை என்பது உங்களுக்குத் தெரியாதா?

எனவே கால தாமதத்தையும், பொய்க் காரணங்களையும் விலக்குங்கள். உங்கள் நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது என்பதால் உடனே பாவசங்கீர்த்தனத் தொட்டிக்கு விரைந்து செல்லுங்கள்! சாவான பாவத்தில் மரிப்பவர்களுக்கென நரக பயங்கரம் காத்துக் கொண் டிருக்கிறது. விழிப்பாயிருங்கள்! விரைவாக உங்கள் ஆத்துமத்தைக் காத்துக் கொள்ளுங்கள்.

ஐம்பத்து மூன்று மணிச் செபம் செய்து முடிக்கிற வகையாவது

அதிதூதரான அர்ச். மிக்கேலே, தேவதூதர்களான அர்ச். கபிரியேலே, இரஃபாயேலே, அப்போஸ்தலர்களான அர்ச். இராயப்பர், சின்னப்பரே, அருளப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத் திலே உங்கள் தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாத காணிக்கையாக வைத்து உங்களைப் பிராத்தித்துக்கொள்ளுகிறோம்.