⛪ கத்தோலிக்கப் பாரம்பரிய வியாக்கியானம். 1.

சிலுவை அடையாளம்.

சிலுவை அடையாளம் என்பது, கிறிஸ்தவர்கள் மூவொரு இறைவன் (திரியேக தேவனாம் பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்து) பெயரால் தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து கொண்டே வழிபடும் ஒரு பிரார்த்தனை ஆகும்.

இது, கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

பாரம்பரிய தமிழ் வடிவம்:
பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே, ஆமென்.

முந்தைய தமிழ் வடிவம்:
பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவின் நாமத்தினாலே, ஆமென்.

மத்திய தமிழ் வடிவம்:
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்.

புதிய தமிழ் வடிவம்:
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.

வழிபடும் முறை:
முதலில் கைகளைக் குவித்தவாறு பிராத்தனையை தொடங்க வேண்டும். பின்பு இடக்கையை நெஞ்சில் வைத்தவாறே, வலக்கையை நெற்றியில் வைத்து 'பிதாவுடையவும்' என்றும், பின்பு நெஞ்சுக்கு இறக்கி 'சுதனுடையவும்' என்றும், பிறகு இடப்பக்கத் தோளில் வைத்து 'இஸ்பிரீத்து' என்றும், பின்னர் வலப்பக்கத் தோளுக்கு கொண்டு சென்று 'சாந்துடையவும்' என்றும், அதன்பின் கைகளைக் குவித்து 'நாமத்தினாலே' என்றும், இறுதியாக தலை வணங்கி 'ஆமென்' என்றும் கூறவேண்டும்.

பொருள்:
பிதாவாகிய கடவுள், தன் ஒரே அன்பு மகன் சேசுக்கிறீஸ்துவை, கன்னி மரியாயின் வயிற்றில் இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால் கருவாக உருவாகச் செய்து, மனிதராக உலகை மீட்க அனுப்பினார் என்பதே சிலுவை அடையாளத்தின் பொருள். நெற்றி பிதாவின் விண்ணக மேன்மையையும், நெஞ்சம் சேசுவின் அன்பையும், தோள்கள் இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையையும் குறிக்கின்றன.

சிலுவை அடையாளத்தின் பயன்பாடு:
பின்வரும் தருணங்களில் சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படுகிறது:
திருப்பலி வழிபாட்டின் தொடக்கத்திலும், முடிவிலும், சில ஆராதனை முறைகளின் தொடக்கத்திலும், முடிவிலும், செபமாலை, சிலுவைப்பாதை உள்ளிட்ட பக்தி முயற்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும்,
பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே என்கிற வார்த்தைகள் முக்கியமும், அவசியமுமாயிருக்கின்றன. 

இந்த வார்த்தைகளை சரியாக உச்சரித்து அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளம் வரைந்தால் ஐம்பது நாள் பலனும், தீர்த்தத்தோடு சிலுவை வரைந்து சொன்னால் நூறு நாள் பலனும் உண்டு.

ஞானஸ்நானம் கொடுக்கும்போது, இப்போது சொன்ன வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்காமல் மாற்றினால் அது ஞானஸ்நானமாகாது. 

ஆகையால் சிலுவை வரையும்பொழுது "பிதாவுக்கும், சுதனுக்கும்...", மற்றதும் சொல்லாமல், "பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே" என்று அவசியமாய் சொல்ல வேண்டியது.

ஆமென் சேசு.
சர்வேசுரன், தமது திவ்விய குமாரனாகிய சேசுநாதருடைய திருநாமத்தைக் குறித்து, நாம் கேட்கிறதெல்லாம் கொடுப்பாரென்கிற உறுதியான நம்பிக்கையை காண்பிக்கிறதற்காக, ஆமென் சேசு என்று வேண்டிக்கொள்கிறோம்.