அர்ப்பண செபம்.

கருணையும், அன்பின் செல்வந்தரும், படைப்பின் ஆண்டவருமான இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் நினைத்து நான் உமக்கு நன்றி கூறுகிறேன். படைப்பு அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மை துதித்து ஆராதிக்கின்றேன்.

என் இயேசுவே, இன்று நான் காண்பதையும், கேட்பதையும், சிந்திப்பதையும், செயல்படுவதையும், எதிர் கொள்வதையும், அதற்கு ஏதுவான அனைத்தையும், என் இதயத்தைப் பாதிப்பவைகளையும் உலகமெங்கும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியோடு இணைத்து பரிசுத்த அன்னையின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக உமக்கு நான் காணிக்கை ஆக்குகிறேன்.

என் தாய், தந்தையினுடையவும், முன்னோர் களுடையவும், அனைத்துலக மக்களின் பாவ பரிகாரத் திற்காகவும், கொடும்பாவிகளின் மனமாற்றத்திற்காகவும், உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்களின் மீட்பிற்காகவும் இந்த அர்ப்பணத்தை நீர் ஏற்றருளும்.

உலக சமாதானத்திற்கும், மறைபரப்புப் பணியின் வெற்றிக்கும், இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுடையவும் குறிப்பாக, கடவுளை ஏற்றுக் கொள்ளாதவர்களுடையவும் மனமாற்றத்திற்காக இந்த அர்ப்பணத்தை நீர் ஏற்றருளும்.

ஏழைகளும், அனாதைகளும், கைவிடப்பட்டவர்களும், நோயாளிகளும், வாழும் அனைவரும் உமது திருவுளத்திற்கு ஏற்புடையவர்களாய் தங்கள் வாழ்க்கை துயரங்களையும், வேதனைகளையும் ஏற்றுக் கொள்ளும் சக்தியை பெற்றுக் கொள்ள நீர் இந்த அர்ப்பணத்தை ஏற்றருளும்.

அனைத்து மக்கள் சமூகமும் திருவார்த்தையால் வழிநடத்தப்படவும், இயேசுவை ஏக இரட்சகராக ஏற்று அறிக்கை செய்திடவும் நீர் இந்த அர்ப்பணத்தை ஏற்றருளும். நீர் எனக்கு தந்தவைகளும், தந்து கொண்டிருப்ப வைகளும், தர இருப்பவைகளுமான அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றியறிதலாக நீர் இந்த அர்ப்பணத்தை ஏற்றருளும்.

என் இயேசுவே, உம்மீது நம்பிக்கை கொண்ட எவருமே ஏமாந்ததில்லை. பாவியான என் மீது இரக்கமாயிரும். என பலவீனங்களை மன்னித்து, நீர் என்னை ஆசீர்வதித்தருளும். என் வாழ்வை உமக்கு காணிக்கையாக்குகிறேன். எஞ்சியிருக்கும் என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நீர் விரும்புவது போல கழித்திட உமது திவ்ய ஆசிர்வாதங்களை தாராளமாக என் மீது பொழிந்தருளும்.

என் பெற்றோரையும், சகோதர சகோதரிகளையும், உற்றார் உறவினர்களையும், உடன் பணியாளர்களையும், என்னை வெறுப்பவர்களையும், நான் உம்மிடம் பரிந்துரைப்பவர்களையும் நீர் ஆசீர்வதித்தருளும். அன்பு இதயமும், பரிசுத்தமான மனசாட்சியும் எனக்குத் தந்தருளும்.

பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரைக் கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறு என் பேச்சுக்களில் கவனத்தோடும், என் செயல்பாடுகளில் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். ஆன்ம பலத்தால் கோபத்தை அன்பாகப் பகிர்ந்திடவும், அன்பால் பழிவாங்கும் சிந்தனைகளை வெற்றி கொள்ளவும், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் சமாதானத்தை இழந்து விடாமல் உம்மையே அடைக்கலமாக்கி நான் வாழ எனக்கு உதவியருளும்.

என் இயேசுவே, உம்மை அன்பு செய்யவும், உம்மீதுள்ள அன்பின் பொருட்டு நீர் விரும்பும் எதையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளவும் எனக்கு ஆற்றல் தாரும். உமது அன்பிலிருந்து என்னை வேறுபடுத்துகின்ற எல்லாவிதமான ஊனுடல் பலவீனங்களை யும் , விசுவாசத்திற்கும் பரிசுத்தத்திற்கும் எதிராக வருகின்ற சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீக சக்தியை நீர் தந்தருளும்,

எனது அனைத்துச் செயல்களிலும் உமது அருளும், ஆசீரும் பொழிந்தருளும். அனைத்தையும் நன்றாக துவங்கவும், நன்றாக முடிக்கவும் எனக்கு ஆற்றல் தந்தருளும். மரணம் என்னை நெருங்குகையில் அந்த பலவீனமான நேரத்தில் வலுவான சோதனைகள் என்னை வேதனைப்படுத்தும்போது என் இயேசுவே, நீர் வந்து எனக்கு உதவிடவும், என் ஆன்மாவை ஏற்றுக் கொள்ளவும் வேண்டுகிறேன்.

ஆமென்.