அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா, நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப் பணித்தீரே! நான் என் வேலைகளை விரும்பவும், அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு வேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும், பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன் உழைப்பேனாக.
எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின் பயனால் என் வீடும், எமது தொழிலும், பொது மக்களும் பயனடையச் செய்தருளும்.
தொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே! உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே! உமது தொழிலை நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக் காப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக் கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும் காப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால் நிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின் திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே இயேசுவிடம் மன்றாடுவீராக.
ஆமென்.
நல்ல இயேசுவே, என் இரட்சகரே! தேவரீர் ஒரு தொழிலாளியாய் இருக்க திருவுளம் கொண்டமையால், என் ஆண்டவரும் மாதிரியுமாகிய உம்மை நான் அணுகி வருகிறேன்.
நாசரேத்தூரில் அந்த எளிய தொழிற்சாலையில், சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவராய், தூய்மை, வாய்மை, நேர்மை, மேரை மரியாதை நிறைந்தவராய் வாழ்ந்தீர், உமது தொழில் முயற்சிகளில் பரிகார உணர்ச்சி ததும்பி நின்றது. கடின பிரயாசையான உம் வேலைகளை செபத்தினாலும், கீழ்படிதலினாலும் நீர் அர்ச்சித்தீர்.
ஓ இயேசுவே! தெய்வீகத் தொழிலாளியே, நானும் இப்படி இருக்க எனக்கு வரமருளும்.
உம்முடைய திருவருளின் உதவியினாலும், வேலையாட்கள், தொழில் பயிலுவோர்களின் பாதுகாவலர்களாகிய தேவதாயார், சூசையப்பர் இவர்களுடைய ஆசீர்வாதத்தின் பலனாலும் இன்னும் அதிகமதிகமாய் நானும் தேவரீரைப் போல் வாழ்ந்து, உழைப்பேனாக. என் திவ்விய இரட்சகரே, கடும் பிரயாசைகள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை நான் முடித்தபின், உமது நித்திய இளைப்பாற்றியை எனக்குக் கட்டளையிட்டருளும்.
ஆமென்.