வியாகுல மாதாவை நோக்கி ஜெபம்.

(அர்ச். ஜெர்ரூத்தம்மாள் இயற்றியது.)

ஓ பாக்கியவதியான கன்னி மரியாயே, சர்வேசுரனுடைய அமலோற்பவத் தாயாரே, தேவரீர் சேசுநாதருடைய அகோர துன்ப துயரங்களைக் கண்டு நேசத்தினுடையவும், துக்கத்தினுடையவும் வேதசாட்சியத்தைத் தாங்கினீரே! நீர் உமது எண்ணிலடங்காத கஸ்திகளின் மூலமாகவும், நித்தியப் பிதாவுக்கு அவருடைய ஏக பேறான திருச்சுதனை ஒரு தகனப் பலியாகவும், என் பாவங்களுக்கான பரிகாரப் பலியாகவும் ஒப்புக்கொடுத்ததன் மூலமாகவும், என் இரட்சணிய அலுவலில் நீர் சேசுவோடு ஒத்துழைத்தீர். பாவியாகிய என்னை மீட்டு இரட்சிப்பதற்காக, மெய்யான சர்வேசுரனும், மெய்யான மனிதரும், உம் திருவுதரத்தின் கனியுமான சேசுவையே இழந்து போகுமளவுக்கு உம்மைத் தூண்டிய வாக்குக் கெட்டாத நேசத்திற்காக அடியேன் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் உறுதியான பிரதிக்கினையோடு என் ஜீவியத்தைத் திருத்திக் கொள்ளவும், புதிய பாவங்களால் என் நேச இரட்சகரை இனி ஒருபோதும் நான் சிலுவையில் அறையாதிருக்கவும், அவருடைய வரப்பிரசாதத்தில் என் மரணம் வரைக்கும் நிலையாயிருந்து, அவருடைய சிலுவை யினுடையவும், திருப்பாடுகளுடையவும் பேறுபலன்களின் வழியாக நித்திய ஜீவியத்தை நான் பெற்றுக் கொள்ளவும் தக்கதாக, பிதாவிடமும், சுதனிடமும் உமது வியாகுலங்களின் தவறாத பரிந்து பேசுதலை எனக்காகப் பயன்படுத்தியருளும்.

ஆமென்.

நேசத்தினுடையவும், துயரத்தினுடையவும், இரக்கத்தினுடையவும் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.