வேளாங்கண்ணி மாதா செபம்.

மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்பகிறேன்.

துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசேஷ உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.

(இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்)

தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான்செய்யும் இந்நாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நாளையும் இப்போது நான் சொல்லப் போகும் அருள் நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.

கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே! அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும்.

நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்பக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து தந்தருளும் தாயே!

ஆமென்.