இறைமகன் இயேசு விண்ணேற்பு அடைந்த நாள் முதல், அன்னை மரியாவின் தலைமையில் இயேசுவின் சீடர்கள் அனைவரும் உணவு அறையில் ஒன்று கூடியிருந்து பரிசுத்த ஆவியின் வருகைக்காகச் செபித்தனர். அக்காட்சியை நம் மனக் கண்முன் கொண்டு வருவோம்.
திருச்சபையின் அனைத்து நலன்களுக்காகவும் பரிசுத்த ஆவியாரிடம் செபிப்போமாக, பரிசுத்த ஆவியே, உம் பரிசுத்த ஆலயமாகிய திருச்சபைமீது இறங்கி, உமது பேரருளை நிறைவாகப் பொழிந்து அதனைத் தூய்மைப்படுத்தும். திருச்சபை உமது மகிமையையும், பெருமைகளையும் பிரதிபலிக்க அருள்புரியும்.
உன்னத பரிசுத்த ஆவியானவரே, உமது வருகையால் திருச்சபையில் திரு நிலைப்படுத்தப்பட்ட உம் பணியாளர்களாகிய எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரையும் உமது அருள் வரங்களால் நிரப்பும்.
உண்மையின் ஆவியே, உலக மக்கள் அனைவரும் மூவொரு கடவுள் விசுவாசத்தில் நிலைத்து நின்று உன்னதக் கடவுளின் சாட்சிகளாகத் திகழுமாறு உமது அருள் ஒளியை அனைவர் மீதும் வீசியருளும். திருச்சபையின் ஆன்மாவும், வழிகாட்டியும், ஆளுநருமான பரிசுத்த ஆவியே, விண்ணுலக அறிவிலும், தளராத விசுவாசத்திலும், தூய்மையான வழிகளிலும் எங்கள் ஆன்மாக்களை அன்றாடம் வழிநடத்துவீராக.
நம் ஆன்ம வாழ்வின் அனைத்து நலன்களுக்காகவும் பரிசுத்த ஆவியாரிடம் செபிப்போமாக, பரிசுத்த ஆவியே! அருள் ஒளியே! அனைத்தையும் இயக்கும் இயக்க ஆற்றலே! வாழ்வோரின் நம்பிக்கையே! உமது அருள் ஒளியால் எங்கள் இதயங்களை நிரப்பும். எங்கள் ஆன்மாக்களின் பாவ அழுக்குகளை உமது அன்புத் தீயால் சுத்திகரித்தருளும்.
பழைய உயிரற்ற வாழ்க்கை நிலையிலிருந்து எங்களுக்கு புதுப் பிறப்பு அளித்தருளும். வெறும் மனிதகுல புகழ்ச்சிக்கும், இவ்வுலக பெருமைகளுக்கும் ஆசை கொள்ளாமல் தாழ்ச்சியுடனும், தன்னடக்கத்துடனும் நடந்து, மூவொரு இறைவனின் உன்னத சாட்சிகளாய் நாங்கள் வாழ உமது தெய்வீக ஆற்றலை எமக்கருளி அனுதினமும் எம்மை வழிநடத்தும். இவ்வுலக செல்வங்களின்மீது நாங்கள் மயக்கம் கொள்ளாமல், விண்ணக வாழ்வின் மேன்மையை அடைய இம்மண்ணக வாழ்வில் அருள் செல்வம் சேர்க்கும் ஆற்றலை எமக்கு அருள்வீராக.
அச்சத்தினால் அலைக்கழிக்கப்பட்ட இயேசுவின் சீடர்களை உமது வருகையால் திடப்படுத்திய பரிசுத்த ஆவியே! உம் அருளை நாடி நிற்கும் எம்மீது இரக்கம் கொள்ளும். பட்டம், பதவிகளில் நாங்கள் மயக்கம் கொண்டு ஆன்மீகக் கடமைகளையும், பொறுப்புகளையும் மறந்து பொறுப்பற்றவர்களாய் வாழாமல் நாங்கள் இறை ஊழியர்களாய் மாறி, புனித வாழ்வு வாழ உமது ஆவியின் கொடைகளை எமக்கு அருள்வீராக.
பரிசுத்த ஆவியே! எளியோரின் ஆறுதலே! பலவீனர்களின் பலமே! தூய்மையின் துணையாளரே! நாங்கள் எளிமையிலும், தூய்மையிலும், வாய்மையிலும் வழுவாது என்றும் உம் அன்பில் நிலைத்திருந்து உமது வழிகாட்டுதலின்படி நடக்கும் நல்ல மனதை எமக்கு அருளும்.
என்றும் வற்றாத அன்பே! அணையாத சுடரே! விண்ணுலகில் உள்ள புனிதர்களின் இறையன்பு எம் ஆன்மாவையும் ஆட்கொள்வதாக. இவ்வுலகில் உம்மை அதிகதிகமாக அன்பு செய்து, விண்ணுலகிலும் உம்மை என்றென்றும் அன்பு செய்யும் தகுதி பெறுவேனாக.