உலகின் இயக்கமும் எங்கள் மூச்சுக்காற்றுமான பரிசுத்த ஆவியே! கர்ஜிக்கும் சிங்கம் போலவும், கவரும் கழுகு போலவும், வேட்டையாடும் வேங்கை போலவும், எம்மிடையே கலகத்தையும், குழப்பங்களையும் விளை விக்கும் சாத்தானின் சதித்திட்டங்கள் அனைத்தையும் உமது அக்னி நாவுகளால் அழித்தொழிப்பீராக. எம் மக்கள் துன்பங்களினால் சோர்ந்து போகும் போதும், வறுமையினால் வதைபடும் போதும், வாழ்வில் நெருக்கடிக்கு உள்ளாகும் போதும் உம்மை பற்றி பிடிப்பதற்குப் பதிலாக, மாற்றானின் மாய தந்திரங்களையும், மந்திர வித்தைகளையும் நம்பி பலி கொடுக்கவும், படையல் வைக்கவும் துணிந்து வருகின்றனர்.
எங்களது இத்தகைய இழிசெயலால் உமக்கு நாங்கள் வருத்தமும், துன்பமும் உண்டாக்குகின்றோம். சோதனை என்பது விசுவாச உறுதிப்பாடு என்பதை நாங்கள் உணராமல் இருப்பதால் இத்தகைய தவறுகளை செய்கின்றோம். உம்மை நம்பியவர்கள் ஒருபோதும் கைவிடப்பட்ட தில்லை, என்பதை உணர எங்களது ஞானக்கண்கள் தவறி விட்டன. நாங்கள் எங்கள் ஊனக்கண்களால் காண்பதால் தீயச்சக்திகளின் மீது நம்பிக்கை கொள்கிறோம். எங்களது ஆன்ம கதவுகளைத் திறந்து எங்களை ஞானத்தின் ஒளியில் வழிநடத்தும். எங்களின் ஆற்றலும், அருட் காவலுமானவரே! நாங்கள் புறாவைப் போல கபடமற்றவர் களாகவும், அன்னப் பறவை போலஞானம் ! பெற்றவர்களாகவும் இருந்து தீமையை பின் தொடர்ந்து செல்லாமல் நன்மை யின் வழியில் நடந்து இறைமக்களின் உன்னத சாட்சிகளாக விளங்குமாறு உமது அருளை எம்மீது பொழிந்தருளும்.
நெருக்கடியும், துன்பமும் எங்களை வேதனைக்கு உள்ளாக்கும்போது உமது பரிசுத்த நாமத்தை கூவியழைத்து, உமது இறக்கையின் நிழலில் இளைப்பாறும் எண்ணத்தை எங்களுக்குத் தந்தருளும். ஒருபோதும் உமது பரிசுத்த உள்ளத்துக்கு கேடு விளைவிக்காமல், மகிழ்ச்சியூட்டும் மனதை எங்களுக்குத் தாரும். கலங்கரை சுடரே! அருள் ஒளியே! இருளடைந்திருக்கும் எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி பாய்ச்சி, தூய்மை அடையச் செய்தருளும். நாங்கள் மறந்தும் கூட மாற்றானின் பாதையில் பயணம் செய்யாமல் உம்மோடு இணைந்து எங்கள் செயல்திட்டங்களை அமைத்திட அருள்புரியும்.
எந்தச் சூழ்நிலையிலும் சாத்தான் எங்களை வஞ்சனை செய்துவிடாமல் இருக்க நிழல் போல் எம்மைத் தொடர்ந்து வாரும். ஏனெனில், உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்குப் பயமில்லை. அனைத்து விதமான சோதனை இருளிலிருந்தும் எம்மை விடுவியும். இடைவிடா உமது பரிசுத்த ஒளியால் எம்மை நிரப்பி, வாதை எங்கள் கூடாரத்தை அணுகாமல் காத்தருளும்.
ஆமென்.
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே.
உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவித் தூய்மையாக்கும் இந்த வேளையிலே.
பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்றவாரும் இந்த வேளையிலே.
சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே.
நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே.
ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே.
ஆமென்.