தேவமாதா மோட்சத்துக்கு அழைத்துக் கொள்ளப்பட்டதின் பேரில் ஜெபம்.

(திருப்பலி நேரத்தில் சொல்லத்தக்கது).

மகா மகிமைப் பிரதாபத்தோடு பரலோகத்துக்கு எழுந்தருளின பரிசுத்த  தேவமாதாவே! நீர் சரீரத்தோடு வான மண்டலங்களைக் கிழித்தேறின மகிமை, உமது சுகிர்தங்களுக்கு ஏற்ற வெகுமானந்தானே! அதேனெனில், மண்ணால் உண்டாக்கப்பட்ட சரீரம்  மண்ணாய்ப் போக வேண்டுமென்று ஆதாம்  செய்த பாவத்துக்கு ஆக்கினையாகக்  கட்டளையிருந்தாலும், உம்மிடத்தில்  அப்படிப்பட்ட பாவத்தின் அடையாள முதலாய் காணாததினால் அதற்குள்ள ஆக்கினையும்  காணவில்லையே! அதனால் ஆண்டவர், தாம் மரித்தோரிடத்தில் நின்று எழுந்தருளினது போல உம்மையும் உயிரோடு எழுந்திருக்கப் பண்ணினார். தம்முடைய சரீரம் அழியாமல்  இருக்கப் பண்ணித் தம்முடைய திருத்தேகம்  நாலு வரப்பிரசாதங்களினால்  அலங்கரிக்கப்பட்டது போல, அவ்வலங்காரத்தை உமது சரீரத்துக்கும் கொடுத்தார்.

கடைசியாய் அவர் தாமே சரீரத்தோடு வானத்துக்கு ஏறினது போல, உம்மையும்  அந்தப்படி ஆத்ம சரீரத்தோடு ஏறப் பண்ணினாரே! நீர் பரலோகத்துக்கு  ஏறினபோது சந்திரன் உம்முடைய பாதத்தைத் தாங்க, சூரியன் உம்முடைய உடலில்  போர்வையாய்ப்படிய, தாரகைக்  கணங்கள்  உமது சிரசில் மகுடமாய் விளங்க, தூதர்கள்  ஸ்துதியங்கள் பாட,  பர மண்டலத்தில்  சேர்ந்த உடனே, பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்துவால் நித்திய பரலோக ராஜேஸ்வரியாக முடிசூட்டப்பட்டீரே!

ஆ! இவ்வித வெகுமான மகிமையோடு பரலோகத்துக்கு எழுந்தருளிய உம்மைக் கண்ட அடியேன், இன்று தானே உம்மோடே பறந்து வரத்தக்க ஆசையோடு இருக்கிறேன். ஆனாலும், இந்த மண் சரீரபாரத்தோடு இப்படிப்பட்ட நன்மை பெற நான் பாத்திரமாகாதபடியால் இன்று உம்மோடு என்னுடைய நினைவைப் பரலோகத்துக்கு  உயர்த்தி, இவ்வுலகத்தை மறந்து நடக்கப்  பண்ணியருளும். அப்படியே சாகுந்தனையும் உம்முடைய சலுகையால் நான் நடந்து உமக்குப் பணி செய்து, என்னாத்துமம் பரலோகத்தில் சேர்ந்து எக்காலமும் உம்மைக் கண்டு ஸ்துதித்து மோட்ச ஆனந்தம் அனுபவிக்கும்படி கிருபை பண்ணியருளும்.

ஆமென்.