பரலோக பூலோக இராக்கினியே! ஆரணியத்தின் ஓதையே! யாத்திரிகர்களின் பாதையே! அன்பான தாயே! நான் இந்த கண்ணீர் கணவாயிலே சஞ்சலமடைந்து, துயர்கொண்டு, அயர்வடைந்து, ஆதரவின்றி பரிதவிக்கின்றேன்.
ஐயோ! தாயே உலக மாய்கையானது என்னைக் கஸ்ரப்படுத்துகின்றதே! நாலு பக்கமும் தீமையும் துயரமும் வளைந்து என்னைப் பங்கப்படுத்துகிறதே! அரவின் வாய் தேரைபோல் நடுங்குகிறேனே! ஆலைவாய்க் கரும்புபோல் நெருக்கப்படுகின்றேனே! அன்னையில்லாப் பிள்ளைபோல் அந்தரிக்கின்றேனே!
புலியின் வாய்க் குட்டிபோல் பரிதவிக்கின்றேனே! அம்பு தைத்த மான்போல் அலறுகின்றேனே! அந்தர வழியில் அகப்பட்ட பாலன்போல் திகைக்கின்றேனே! அம்மா தாயே! தஞ்சமென்று அடைய இடமே இல்லையே, ஆதரவளிக்க மனிதரோ இல்லை, ஆறுதலுரைக்க அன்னையும் இல்லை, என் செய்வேன் தாயே!
நீர் கரடி, புலி வசிக்கும் இக்கானகத்துர்டே எழுந்தருளியிருந்து ஆதரவற்றவர்களையும், துன்ப துரிதங்களால் பீடிக்கப்படுகிறவர்களையும், கிலேசமுற்றவர்களையும் உமது சந்நிதிக்கு அழைக்கிறீர். உமது இன்ப தொனியைக் கேட்டு உமதண்டை ஓடிவந்து நிற்கிற உமது அடியானை(ளை)க் கிருபைக் கண்கொண்டு பாரும், என்மேல் அன்பு கூரும், உமது திருச்சுதன் எனக்கோரும், என் இடரைத் தீரும், எனக்குத் தேவையானவைகளைத் தாரும்.
மாமரியே! தயாபரியே! நானுமது சலுகையால் அடைந்ததும், அடைகிறதும், அடையப் போவதுமாகிய சகல இகபர நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லி என்னையும், எனக்கு சேர்ந்தவர்களையும், எனக்குள்ள யாவற்றையும் உமக்கு பாத காணிக்கையாக வைக்கிறேன்.
கடைசியாய் என் அன்புள்ள தாயாரே! நான் உமது இன்ப சந்நிதானத்தை விட்டுப்பிரிய இருக்கிறதினால் உமது பாதாரவிந்தத்தை முத்தி செய்து உமது ஆசீர்வாதத்தை கேட்கிறேன். அவ் ஆசீர்வாதம் என்மேலும் எனக்குள்ள யாவற்றின் மேலும் இருக்கக்கடவது. ஆமென்.