குறிப்பு: இந்த ஜெபங்கள் வழக்கமான மாதாவின் ஏழு வியாகுல மன்றாட்டுக்களிலிருந்து வேறுபட்டவை.
முதல் வியாகுலம்.
வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மாமரியே, உம்முடைய நேச குமாரன் புனித வியாழனன்று உம்மிடம் விடை பெற்றுக்கொண்டபோது உம்முடைய ஆத்துமத்தைக் குத்தித் துளைத்த கொடூர வேதனையை உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். வேதனையின் வாள் எப்படி உம்முடைய ஆத்துமத்தை ஊடுருவியது என்பதையும், அந்நேரத்தில் எத்தகைய சுட்டெரிக்கும் கண்ணீர்த் துளிகளை நீர் சிந்தினீர் என்பதையும் நினைவுகூர்ந்தருளும். அடியேன் என் நண்பர்களிடம் விடைபெறும்போதும், மரணத்தின் கசப்பில் என் சரீரம் என் ஆத்துமத்திலிருந்து பிரிக்கப்பட இருக்கும் போதும், எதிரியானவன் என் மேல் எந்த அதிகாரமும் கொண்டிராதபடி, மகா பரிசுத்த மரியாயே, எனக்கு உதவியருளும். 1 அருள்.
ஆமென்.
இரண்டாம் வியாகுலம்.
வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மாமரியே, உம்முடைய நேச திருக்குமாரன் அவமானமுள்ள விதத்தில் காட்டிக் கொடுக்கப்பட்டாரென்றும், யூதர்களால் கைது செய்யப்பட்டு, கட்டப்படவும், அடிக்கப்படவும், தள்ளப்படவும், அதன்பின் முதலில் அன்னாஸிடமும், பிறகு கைப்பாஸிடமும் இழுத்துச் செல்லப்படவும் தம்மைக் கையளித்தார் என்றும், அங்கே ஓநாய்களுக்கு மத்தியில் அகப்பட்ட செம்மறிப்புருவையைப் போல், ஒரு கைதியாக்கப்பட்டு, பொய்சாட்சிகளால் குற்றஞ்சாட்டப்பட்டார் என்றும் அர்ச்சியசிஷ்ட அருளப்பர் உமக்குச் செய்தி கொண்டு வந்த போது, தேவரீருடைய ஆத்துமத்தைக் குத்தித் துளைத்த கொடூர வேதனையை உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். மரியாயே, எத்தகைய வேதனையின் வாள் அப்போது உம் ஆத்துமத்தை வாதித்தது என்பதையும், எத்தகைய சுட்டெரிக்கும் கண்ணீர்த்துளிகளை நீர் சிந்தினீர் என்பதையும் நினைவுகூர்ந்தருளும். மரியாயே, என் கடைசி வேளையில், என் இருதயம் கவலையாலும், வேதனையாலும் நிறைந்திருக்கும்போது, உம்முடைய பிரசன்னத்தால் என்னைப் பலப்படுத்தித் தேற்ற வேண்டுமென்றும், அதைரியத்தினுள் விழுந்து விடாதபடி தேவரீர் என்னைப் பாதுகாக்க வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறேன். 1 அரு.
ஆமென்.
மூன்றாம் வியாகுலம்.
வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மரியாயே, புனித வெள்ளியன்று பிலாத்து உமது பிரிய குமாரனை ஜனங்களுக்கு முன்பாக அழைப்பித்து, ''இதோ மனிதன் பாருங்கள்!'' என்று கூறியதைத் துயரமிக்க உம்முடைய சொந்தக் கண்களால் கண்டபோது உம்முடைய ஆத்துமத்தை ஊடுருவிய கொடிய வேதனையை அடியேன் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். நீர் ஒருபோதும் இந்த விதமாய் அவரை அறிந்திராத அளவுக்கு மிகக் கொடூரமான முறையில் உருக்குலைக்கப்பட்டவராக உமது மகா மதுரம் பொருந்திய திருக்குழந்தையானவரைக் கண்டபோது, உமது மென்மையுள்ள இருதயம் அனுபவித்த துன்பத்தை நினைவு கூர்ந்தருளும். தாய்மார்களில் உத்தம தாயான மரியாயே, சம்மனசுக்கொத்த அவருடைய திருமுகம் இவ்வளவு அச்சத்திற்குரிய விதமாய் உருக்குலைந்து, இரத்தத்தாலும் எச்சிலாலும் மூடப்பட்டிருப்பதையும், அவருடைய திருச்சிரசு முள்முடி சூட்டப்பட்டிருப்பதையும், அவருடைய திருச் சரீரம் முழுவதும் ஒரு மனிதன் என்று இனியும் சொல்ல முடியாத அளவுக்கு காயப்படுத்தப்பட்டிருந்ததையும் கண்டபோது, தேவரீர் என்னவெல்லாம் நினைத்திருப்பீர்! மரியாயே, பேசும்! யூதர்கள் வெறிகொண்டவர்களைப் போல, "அவனைச் சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்" என்று கூச்சலிட்டதையும், அதன்பின் பிலாத்து இட்ட அந்த மகா பாதகமான தீர்ப்பையும் கேட்டபோது, உமது மாசற்ற இருதயம் எப்பேர்ப்பட்ட துன்பம் அனுபவித்தது என்று எனக்குச் சொல்லும்! உமது தாய்க்குரிய இருதயத்தைக் கிழித்த இந்த மகா கசப்பான தாக்குதல்களைப் பார்த்து, அடியேன் என் ஜீவியத்தின் கணக்கை ஒப்புவிக்கும்படி கண்டிப்புள்ள நடுவருக்கு முன்பாக அழைக்கப்படும் வேளையில், அவர் எனக்கு சாதகமாகத் தீர்ப்பிடும்படியாக, என் அற்பமான நற்செயல்களோடு உம்முடைய மகா உத்தமமான பேறுபலன்களையும் ஒன்றிணைக்கும்படியாக அடியேன் உம்மை இரந்து மன்றாடுகிறேன். 1 அரு.
ஆமென்.
நான்காம் வியாகுலம்.
வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மரியாயே, ஓர் இளம் செம்மறிப்புருவையைப் போல் உம்முடைய மாசற்ற திருக்குழந்தையானவர், தாம் கொல்லப்பட வேண்டியிருந்த கொல்கொதாவுக்குச் செல்லும் பாதையில், முற்றிலும் சோர்ந்து போனவராகவும், பாரமான சிலுவை சுமத்தப்பட்டவராகவும் உம்மை எதிர்கொண்டு வருகிறதைக் கண்டபோது உமது ஆத்துமத்தைக் குத்திக் கிழித்த கொடூர வேதனையை அடியேன் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். ஓ அளவற்ற வியாகுலத்தால் நிறைந்த திருமாதாவே, தமது கொடிய பாரத்தின் கீழ் அவர் அமிழ்ந்து போகிறதையும், கொலைஞர்களால் தள்ளப்பட்டும், அடிக்கப்பட்டும் முன்னேறிச் செல்ல தூண்டப்படுவதையும் காண்பது உமக்கு எப்பேர்ப்பட்ட கொடிய வேதசாட்சியமாக இருந்தது. ஓ பரிசுத்த கன்னிகையே, உம்முடைய ஆராதனைக்குரிய திவ்விய பாலன் தமது பாரமான சிலுவையைச் சுமந்து வருகிற துயரமான காட்சியால் முழுவதுமாகக் குத்தித் துளைக்கப்பட்ட உம்முடைய தாய்க்குரிய இருதயத்தின் வழியாக, என் கடைசி அவஸ்தையில் உம்முடைய திருமுக ஒளியால் நான் தேற்றப்படவும், பலப்படுத்தப்படவும் தக்கதாக, உம்முடைய இரக்கமுள்ள கண்களை என்னை நோக்கித் திருப்புமாறு உம்மை இரந்து மன்றாடுகிறேன். 1 அரு.
ஆமென்.
ஐந்தாம் வியாகுலம்.
வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மரியாயே, உமது நேசப் பிரிய குமாரன் மிகவும் மனிதத்தன்மையற்ற விதமாக, தமது திருக்கரங்களையும், திருப்பாதங்களையும் துளைத்த பெரிய ஆணிகளால் சிலுவையில் அறையுண்ட சத்தத்தைத் தேவரீர் கேட்டபோது, உம்முடைய ஆத்துமத்தை நசுக்கி வாதித்த மகா கொடிய வேதனையை அடியேன் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். ஓ மிகுந்த நேசமும், அளவற்ற வியாகுலமும் நிறைந்த மாதாவே, அந்நேரத்தில், சுத்தியலின் ஒவ்வொரு அடியும் உம்முடைய மென்மையான இருதயத்தை எவ்வளவு கொடூரமாக வாதித்திருக்கும்! உம்முடைய மாசற்ற இருதயம் எப்பேர்ப்பட்ட கொடிய காயங்களைப் பெற்றிருக்கும்! இந்த உமது துன்பங்களின் வழியாகவும், பரலோகத்தையும் கூட ஊடுருவிய உம்முடைய சுட்டெரிக்கும் கண்ணீர்கள், பெருமூச்சுகளின் வழியாகவும், அடியேன் மரண அவஸ்தைப்படும்போதும், மரணத்தின் அம்புகள் என் இருதயத்தைப் பிளக்கும்போதும் தேவரீர் என்னைக் கைவிடாதிருக்கும்படியாக உம்மை மன்றாடுகிறேன். 1 அரு.
ஆமென்.
ஆறாம் வியாகுலம்.
வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மரியாயே, கண்ணீரின் வற்றாத சுனையாக மாறியிருந்த உமது கண்களை உயர்த்தி, உம்முடைய நேச குமாரன் சொல்லிலடங்காத வாதைகளோடு சிலுவையில் தொங்குவதையும், அவருடைய எதிரிகள் கேலி பரிகாசத்தையும், தேவதூஷணங்களையும் கொண்டு அவர்மேல் வெற்றி பெறுவதாகத் தோன்றுவதையும் நீர் கண்டபோது உம்முடைய ஆத்துமத்தைக் குத்தி ஊடுருவிய கொடிய வேதனையை அடியேன் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். ''என் சர்வேசுரா, என் சர்வேசுரா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?'' என்ற வார்த்தைகளைக் கேட்டபோது, உம் இருதயம் எத்துணை கொடூரமாகக் கிழிக்கப்பட்டிருக்கும்! ஓ, கொடுமையாக வாதிக்கப்பட்ட பரிசுத்த அன்னையே, "எல்லாம் முடிந்தது!'' "பிதாவே, என் ஆத்துமத்தை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன்" என்று உமது திருச்சுதன் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டபோது, சிலுவையின் அடியில் எவ்வளவு ஆறுதலற்றவராய் நீர் நின்று கொண்டிருந்தீர் என்பதை நினைவுகூர்ந்தருளும். ஓ, உமது திருச்சுதனானவர் சிலுவையின் மீது மரித்தபோது, உம் தாய்க்குரிய இருதயத்தை வாதித்த கொடிய வாதையும், துயரமும் எவ்வளவு பயங்கரமானதாயிருந்தது! உமது நேச குமாரனின் கசப்பான திரு மரணத்தின் வழியாக, என் மரண வேளையில் தேவரீர் எனக்கு ஒத்தாசை செய்ய வேண்டுமென்றும், என் எளிய ஆத்துமத்தை உமது திருக்கரங்களில் எடுத்து, உமது தெய்வீகக் குமாரனிடம் அதை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அடியேன் உம்மை இரந்து மன்றாடுகிறேன். 1 அரு.
ஆமென்.
ஏழாம் வியாகுலம்.
வியாகுல மாதாவாகிய மகா பரிசுத்த மரியாயே, உமது திருக்குமாரனின் உயிரற்ற திரு இருதயம் ஓர் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்டபோது உமது ஆத்துமத்தை ஊடுருவக் குத்திய கொடூர வேதனையை அடியேன் உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். அந்நேரத்தில் உமது நேச இருதயம் முழுவதுமாகக் குத்தித் துளைக்கப்பட்டது! ஓ துக்கத்தால் தாக்கப்பட்ட மாதாவே, உம்முடைய திருச்சுதனின் மரித்த திருச்சரீரம் சிலுவையினின்று இறக்கப்பட்டு, உமது கன்னிமைக் கரங்களில் வளர்த்தப்பட்ட போதும், உமது கண்ணீர் வெள்ளத்தால் அது கழுவப்பட்ட போதும் நீர் அனுபவித்த சொல்லிலடங்காத வேதனையை யார் உணரக் கூடும்! அவருடைய திருக்கரங்களிலும், பாதங்களிலும் உண்டான பெரிய காயங்களைக் கண்டு நீர் எவ்வளவு பயங்கரமுள்ள துயரத்தில் அமிழ்த்தப்பட்டீர்! அவருடைய தெய்வீகத் திருவதனம் உம்மால் கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருக்கிறதைக் கண்டு, நீர் அனுபவிக்காத வேதனை என்னவுண்டு? உமது இருதயத்தில் விழுந்த வேதனைத் தாக்குதல்களால் கற்களும் இளகியிருக் காதோ! அவை பகுத்தறிவற்ற மிருகங்களையும் உம்பேரில் தயவு கொள்ளச் செய்திருக்காதோ! ஆகவே, ஓ மகா தயவிரக்கமுள்ள மாதாவே, இந்த உம்முடைய சகல துயரங்களின் வழியாகவும், என் இறுதி அவஸ்தையில் என் ஆத்துமத்தின் பேரில் நீர் தயவு காண்பிக்கவும், உமது கண்ணீர்களால் அதைச் சுத்திகரிக்கவும், உமது திருச்சுதனின் திருச்சரீரத்தை தேவரீர் முன்பு கைகளில் ஏந்தியிருந்தது போல, என் ஆத்துமத்தையும் ஏந்தி, அதை நித்திய மோட்ச ஆனந்த சந்தோஷத்திற்குள் நடத்திச் செல்ல வேண்டு மென்றும் உம்மை இரந்து மன்றாடிப் பிரார்த்திக்கிறேன். 1 அரு.
வியாகுலம் நிறைந்த மரியாயே, கிறிஸ்தவர்களின் திருமாதாவே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.
காணிக்கை ஜெபம்.
நித்திய பிதாவே, எங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்கு உதவியாகவும், பரிசுத்த தாய்த் திருச்சபையின் தேவைகளுக்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற்காகவும் சேசுக்கிறிஸ்து நாதருடைய திரு இரத்தத்தையும், திருப்பாடுகளையும், மரணத்தையும், மகா பரிசுத்த கன்னி மாமரியின் வியாகுலங்களையும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பரின் வியாகுலங்களையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
வியாகுலம் நிறைந்த கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
ஆமென்.