வியாகுல மாதாவின் படத்திற்கு முன் சொல்லத்தகும் ஜெபம்.

என் ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துநாதரின் மிகுந்த நேசமுள்ள திருமாதாவே, மனஸ்தாபத்தினால் நொறுங்கிய உள்ளத்தோடு உம்மை நோக்கித் திரும்பும் எவனையும் தள்ளி விடாதவரும், துன்பப்படுவோரைத் தேற்ற மறுக்காதவருமாகிய தேவரீருடைய திருப்படத்தின் முன்பாக, நீசப் பாவியாகிய நான் ஆழ்ந்த பக்தியோடு வந்து, என் முழு பலத்தையும் கொண்டு உம்மை நேசிக்கவும், வாழ்த்தித் துதிக்கவும் வேண்டிய வரப்பிரசாதத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும்படியாக உம்மை இரந்து மன்றாடுகிறேன்.

ஓ மரியாயின் இரக்கமுள்ள திரு இருதயமே, மிக அநேக பாவிகள் ஏற்கெனவே உம்மிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுக் கொண்டது போலவே நானும் உம்மிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தயை செய்தருளும். ஏனெனில், ஓ மகா பரிசுத்த மரியாயே, உம்முடைய இருதயம் இரக்கத்தின் இருதயமேயன்றி வேறு என்னவாயிருக்கிறது? இந்தக் கிருபையின் ஆசனத்திடமிருந்து அந்த வரப்பிரசாதத்தை மன்றாடிக் கேட்கும் யாருக்கும் அது மறுக்கப்படுவது எப்படி?

மிகுந்த கருணையும், தயவிரக்கமும் உள்ள மாதாவே, துன்பப்பட்டுள்ள ஓர் இருதயத்திற்கு உம்முடைய தயவும் ஆதரவும் எவ்வளவு அதிகமாய்த் தேவைப்படுகிறது என்பதை நீர் அறிந்திருக்கிறீர். ஏனெனில் மனுக்குலம் முழுவதும் ஒன்றாய்ச் சேர்ந்தாலும் அதனால் தாங்க முடியாத அளவுக்கு உமது துன்பங்களும், வேதனைகளும் மகா தீவிரமுள்ளவையா யிருந்தன.

ஓ, உமது நேசக் குமாரனின் உருக்குலைக்கப்பட்ட உருவத்தை நீர் கண்டு தியானித்தபோதும், சிதைக்கப்பட்டதும், உயிரற்றதுமான அவருடைய திருச் சரீரத்தை உமது கன்னிமைக் கரங்களில் தாங்கி, உமது தாய்க்குரிய இருதயத்தின் மீது மென்மையாகச் சேர்த்துக் கொண்டு, எண்ணற்ற தடவைகள் அதை அரவணைத்து, சுட்டெரிக்கும் கண்ணீர் வெள்ளத்தைக் கொண்டு அதை மூடி, இறுதியாக உமது சேசுவின் காயப்பட்ட நெற்றியின் மீது உமது வாதைப்பட்ட இருதயத்தைச் சாய்த்த போது, உமது ஆத்துமத்தை நிரப்பிய சொல்லிலடங்காத கசப்பை எந்த மனிதனால் உணரக் கூடும்!

இந்த வாக்குக் கெட்டாத உம்முடைய வேதனையை உமக்கு ஞாபகப்படுத்தி, என் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும்படியாக உம்மை மன்றாடுகிறேன். மரியாயே, இப்போது நீர் உமது கரங்களில் தாங்கியுள்ள சேசுவிடம் எனக்காகப் பரிந்து பேசியருளும்! ஓ சேசுவே! ஓ மரியாயே! உங்கள் சொல்லொணாத துன்பத்தைப் பார்த்து, நீசப் பாவியாகிய அடியேன் மீது தயவாயிருங்கள். ஓமிகுந்த நேசத்திற்குரிய சேசுவே, எனக்காக நீர் தாங்கிய சகல காயங்களையும், வேதனையையும் உமது பரலோகப் பிதாவுக்குக் காண்பித்தருளும். அளவற்ற இனிமையுள்ள திவ்விய கன்னிகையே, தேவரீர் என் நிமித்தமாக சிந்தின கண்ணீர் முழுவதையும் அவருக்குக் காண்பியும். ஓ திருச்சுதனே! ஓ மாதாவே! எனக்காக நீங்கள் அனுபவித்த எல்லா அவஸ்தைகளையும், எல்லா இருதய வாதையையும் அவருக்குக் காட்டுங்கள்.

மரியாயே, உமது வியாகுலங்களின் இந்த வேதனை மிக்க பரம இரகசியத்தின் வழியாக, பிதாவாகிய சர்வேசுரனிடமிருந்து எனக்கு இரக்கத்தைப் பெற்றுத் தாரும். உமது நேசப் பிரிய குமாரனின் நொறுக்கப்பட்டதும், உயிரற்றதுமாகிய திருச்சரீரத்தை உமது தாய்க்குரிய கரங்களில் எடுத்து, முன்பு நீர் செய்த அதே விதமாக இப்போது சேசுவின் குத்தித் திறக்கப்பட்ட திருவிலாவையும், உமது உடைந்த இருதயத்தையும், அவரது கசப்பான துன்பங்களையும், உமது வேதனையுள்ள தயாள இரக்கத்தையும், அவருடையவும், உம்முடையவும் சுட்டெரிக்கிற கண்ணீர்களையும், அவருடையவும், உம்முடையவும் பெருமூச்சுகளையும், ஒரே வார்த்தையில், சேசுவும் நீரும் இவ்வுலகில் அனுபவித்த சகல துன்பங்களையும் நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தருளும். இந்தத் துன்பங்களின் வழியாக, இரக்கத்தையும் மன்னிப்பையும் எனக்குப் பெற்றுத் தந்தருளும்.

ஆமென்.