இடைவிடா சகாயத்தாயிடம் குழுவினர் விசுவாசம்.

ஓ! இடைவிடா சகாயத்தாயே, நீர் அருள் நிறைந்தவள். தாராள குணமும் உடையவள். இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே! பாவிகளின் நம்பிக்கை நீரே! அன்புள்ள அன்னையே, உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும். உமது கரங்களில் இரட்சண்யம் உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறோம்.

நாங்கள் உமது பிள்ளைகள். அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும். ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான சேசுக்கிறீஸ்துநாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது, நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம்.

சோதனை வேளையில் உமது சகாயத்தைத் தேட அசட்டை செய்வதால் எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். ஓ இடைவிடா சகாயத்தாயே, எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், கிறிஸ்துநாதரிடம் அன்பையும், இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும், என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும், உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும்.

ஆமென்.