பரிசுத்தத்திற்காக இளைஞரின் மன்றாட்டு.

எல்லாம் வல்லவரும், அனைத்தையும் காண்கிறவருமான இறைவா, என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு அனுக்கிரகம் செய்தருளும்.

நமது ஆலயத்தை யாராவதொருவன் அசுத்தப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று திருவுளம்பற்றினீரே, சுவாமி! உமது அருள் வாக்கின்படியே என் உடலே உமது தேவாலயமாயிற்று, இதிலே உமது திருவருளினால் தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம் கொண்டதுமன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகிய இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து இதனை அர்ச்சித்தருளினார்.

ஆகையால் தூய்மையின் உருவான இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர் மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை வரவிடாதேயும். தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என் ஆத்துமத்திலாவது உடலிலாவது உண்டாகாதபடி கிருபை செய்தருளும்.

என் திவ்விய இரட்சகரான இயேசுவே! இந்த விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது சிறப்பான உதவி வேண்டியிருக்கிறதினால், தூய்மையை விரும்புகிறவரும் கன்னியர்களுக்கு நிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர் பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன்.

உம்முடைய வரப்பிரசாதத்தினால் எத்தனையோ பேர்கள் இவ்வுலகில் தேவதூதர்களைப் போலத் தூயவர்களாய் நடந்தார்கள்! அவர்களும் என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள், ஆகையால் என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப்போக நியாயமில்லை.

மனத்திடம் கொடுக்கிறவராகிய கர்த்தாவே! தேவரீர் அவர்களை உறுதிப்படுத்தினது போல் என்னையும் தூய நெறியில் உறுதிப்படுத்தியருளும். அவர்களால் ஆனது போல் உம்மைக் கொண்டு எந்நாளும் எல்லா நலமும் ஆகக்கூடும்.

உமது தோத்திரத்துக்கும் என் இரட்சணியத்துக்கும் விரோதியாகிய சத்துரு தன் சோதனையால் என்னை மயக்கி என் மீது வெற்றி கொண்டு விடாதபடி அடியேன் இடைவிடாமல் சுறுசுறுப்போடே வேண்டிக்கொள்ளவும், என்மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே நடக்கவும் தயைபுரியும்.

நான் என் பத்தி நினைவைத் திடமாய் ஒழுங்குபடுத்தி என் பொறிகள் ஐந்தினையும் எந்நேரமும் அடக்கிப் பாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி என்னை அசுத்தப்படுத்துவதான எல்லாவற்றையும் மகா அருவருப்புடனே ஆலோசித்து ஓர் அர்ப்பக் குற்றத்தின் சாயலுக்கு முதலாய் அஞ்சி நுணுக்கமான பக்தியுடன் சுமித்திரையாய் நடந்து மிகப் பச்சியமும் மழுங்குவதற்கு எளிதுமாகிய இந்தப் பண்ணியத்தைப் பழுதில்லாமல் காப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும்.

தூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே, எனக்கு அடைக்கலமாயிரும். அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடியருளும். என் காவல் தூதரே, சோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும்.

ஆமென்.