நம் முன்னோர்களுக்கான செபம்.

(குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக வரும் வியாதிகள், தீமைகளிலிருந்தும், தீய கட்டுகளிலிருந்தும் விடுபட செபம்)

நான் உன் இறைவன் அநீதியைத் தண்டிப்பவர். என்னை அவமதிக்கும் குடும்பத் தலைவர்கள் செய்த தவறுகளுக்காக அவர்களுடைய பிள்ளைகளை மூன்றும், நான்கும் தலைமுறை வரை நான் தண்டிப்பேன். ஆனால் என்னை அன்பு செய்து என் கட்டளைகளைக் கடைபிடிப்பவர்களை ஆயிரம் தலைமுறைகள் வரை நான் அன்பு கூறுவேன் (யாத்திராகமம். 20: 5-6).

மீட்பரான இயேசுவே என் குடும்பத்திலிருந்து மரணமானவர்களுக்காகவும், தலைமுறைகளாக வியாதி, பாவம், பலவகைக் கட்டுகளில் சிக்கியிருக்கும் என் குடும்ப உறுப்பினருக்காகவும் நான் இவ்வளவு காலமும் செபிக்காமலிருந்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

என் குடும்பத்திலுள்ள தாய் தந்தை மரணமான குடும்ப உறுப்பினர்கள், உயிருடன் இருப்பவர்களுடையும் பதிலாளியாக என்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுகிறேன்.

என்னையும் என் குடும்பத்திலுள்ளவர்களையும் அழிக்கும்படி என்னிடமும் என் குடும்பத்திலும் தலைமுறை தலைமுறையாக இன்றுவரை ஏற்பட்டுள்ள எல்லா பாவங்கள் முக்கியமாக விக்கிர ஆராதனை, தீய நாட்டங்கள், காம இச்சைகள், கொலை, களவு, சிசு கொலை, இறை அடியார்களை பழித்தல், செயல்பட தவறின வாக்குறுதிகள், வேலைக்கு தகுந்த கூலி கொடாமலிருத்தல், வட்டி வாங்கினது, சண்டை, பகை, மன்னிக்காத, மனநிலை, இவைகள் அனைத்துக்காக நம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

எங்கள் மேல் இரக்கமாயிரும். இறந்த எங்கள் மூதாதையரும் குடும்பத்திலுள்ள அனைவரும் செய்த எல்லா தவறுகளுக்காகவும், மனம் வருந்தாமல் மரணமானதால் இன்னும் உம் திருமுகம் காண முடியாமல் வேதனையுறுவதாக இருந்தால் அவர்களுக்காக மன்னிப்பு கேட்கிறேன்.

இன்று உயிருடன் என் குடும்பத்திலுள்ள அனைவரையும் எல்லா தீமைகள், வியாதிகள், கட்டுகள், பாவங்களிலிருந்து விடுதலை தந்து, எங்களை தண்டனையிலிருந்து விடுவித்து ஆசிர்வதித்தருளும்.

இயேசுவே எங்கள் மீட்பரே! உம்முடைய திரு இரத்தத்தால் எங்களை கழுவி தூய்மைபடுத்தும். உம்முடைய தூய ஆவியால் நிரப்பியருளும்.

நாங்கள் ஒவ்வொருவரும் உம்மை நன்கு அறிந்து, அன்பு செய்து உம்முடைய இனிமையை உணர்த்திடவும் அருள்புரியும்.

எங்கள் கடந்த காலத்தவறுகள் எங்கள் வாழ்வில் மீண்டும் ஏற்படாமலிருக்க அருள்தாரும்.

உம்முடைய சிலுவை மரணம், உயிர்ப்பு வழி எல்லாப் பாவங்கள், சாபங்களிலிருந்து எங்களுக்கு விடுதலை தந்த இயேசுவே எங்களுக்கு உம்முடைய எல்லையற்ற அன்பைத் தந்து மீட்ட கிருபைக்காக நன்றி. துதி, ஸ்தோத்திரம் ஆராதனை.

இரட்சகரான இயேசுவே, காயப்பட்டவரே! காயத்தின் கொடுமையை உணர்ந்தவரே! உம்முடைய காயங்களிலிருந்து ஒழுகும் விலையற்ற இரத்தம் வழி என் மனக்காயங்கள் அகற்றியருளும்.

எல்லா நன்மைகளும், இரக்கம் நிறைந்தவரும் வாக்கு மாறாதவருமான இயேசுவே முழு நம்பிக்கையுடன் மன்றாடுகிறேன். விண்ணிலிருந்து உம் திருக்கரத்தால் எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து எங்களுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தந்தருளும். (3 முறை)

ஆமென். 


பரிசுத்த பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். (1 பர, 1 அருள், 1 திரி)

பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் காப்பாற்றி மீட்டவரே! உமக்கு நன்றி ஆண்டவரே.

ஆமென்.