அமலோற்பவ கன்னிகையே, அர்ச்சியசிஷ்ட செபமாலையின் அரசியே , விசுவாசம் தளர்ந்து, அவிசுவாசம் வளர்ந்தோங்கும் இக்காலத்திலே அஞஞானிகளிடமிருந்து மறைந்து போன பொம்பே என்னும் அபூர்வ நாட்டில், இராக்கினிக்கு உரியதும், மாதாவுக்குரியதுமாகிய உமது ஆசனத்தை ஸ்தாபிக்கக் கிருபை புரிந்தருளினதுமல்லாமல், விக்கிரகங்களையும் பேய்களையும் வணங்கி வந்த அவ்விடத்திலேயே நீர் எழுந்தருளி, தேவ வரப்பிரசாதங்களின் தாயாராய்ப் பரம கிருபாகரப் பொக்கிஷத்தை ஏராளமாய் எங்கும் பொழிந்தருளுகிறீர்!
ஆ! மரியாயே! அவ்வித கிருபாகரியாய் அரசாளும் அச் சிம்மாசனத்தில் நின்று அடியேனையும் உமது கிருபைக் கண்கொண்டு நோக்கி, உமது உதவி சகாயம் அத்தியந்த அவசியமாக இருக்கிற அடியேன் பேரில் இரக்கமாயிரும்!.
எத்தனையோ பேருக்கு நீர் மெய்யான இரக்கத்தின் தாயாராகக் காண்பித்தருளினது போல் எனக்கும் காண்பித்தருளும். என் முழு இருதயத்தோடு உம்மைத் துதித்து, என் ஆண்டவரும் திருச்செபமாலை இராக்கினியுமென்று உம்மைக் கூப்பிடும் இத்தருணத்தில் எனக்கு மாதாவாகக் காண்பித்தருளும்.
(கிருபை தயாபத்து ஜெபம் சொல்லவும்).
ஆமென்.