திருக்குழந்தை மாதா நவநாள் செபம்.

தாவீதின் பெட்டகமே , திருக்குழந்தை மாதாவே , சம்மனசுக்களின் இராக்கினியே , இரக்கம் நிறை கிருபையின் அன்னையே, உம்மை என் முழுமனதோடே வணங்குகிறேன். என் வாழ்நாளெல்லாம் இறைவனை விசுவாசத்துடன் நேசிக்கும் கிருபையைப் பெற்றுத் தாரும். இறைவனின் அளவில்லாத அன்பின் அடையாளமான அன்னையே, உம்மையும் பக்தியுடன் வணங்கும் வரத்தைப் பெற்றுத் தாரும்.
அருள் நிறைந்த மரியே...

ஓ தெய்வீகத் திருக்குழந்தை மாதாவே, கபடற்ற புறாவைப் போல அமல உற்பவியாய் உதித்த அழகு நிறை அன்னையே, இறை ஞானத்தின் அதிசயமே, உம்மிலே என் ஆன்மா களிகூர்கிறது. பரிசுத்தத்தின் தெய்வீக நற்குணத்தை நான் எப்பாடுபட்டாயினும் பாதுகாக்கும் வரத்தைப் பெற்றுத் தாரும்.
அருள் நிறைந்த மரியே...

பரிசுத்தத்தின் அழகு நிறைந்த தெய்வீகத் திருக்குழந்தை மாதாவே, ஆன்மீக மகிழ்ச்சியின் நந்தவனமே, அமலோற்பவ நாளில் தோன்றிய வாழ்வின் விருட்சமே, உலகப் பிரகாரமான சிற்றின்பங்களையும், வீணான அதன் கனிகளையும் நான் புறம்பே தள்ள எனக்கு உதவி செய்யும். உமது திரு மகனின் வார்த்தைகளையும், புனிதத்துவத்தையும், திருச்சித்தத்தையும் என் இருதயத்தில் பதிக்க உதவி செய்யும்.
அருள் நிறைந்த மரியே...

போற்றுதற்குரிய தெய்வீகத் திருக்குழந்தை மாதாவே, மறைபொருளைக் கொண்ட ரோஜா மலரே, முத்திரையிடப்பட்ட நந்தவனமே, பரலோகத்தின் நேசமிகு பத்தினியே, பரிசுத்தத்தனத்தின் லீலி மலரே, தாழ்ச்சியை நேசிக்கவும் சுயத்தை வெறுக்கவும் எனக்குக் கற்றுத் தாரும். உமது துணையாளரின் கிருபையின் அழைப்புக்களுக்கு நான் செவிகொடுக்கும்படி என் ஆத்துமத்தை தயார்ப்படுத்தும்.
அருள் நிறைந்த மரியே...

பரிசுத்த திருக்குழந்தை மாதாவே, மறைபொருளின் விடியலே, பரலோக வாசலே, நீரே எனது நம்பிக்கை. ஆற்றல் மிகு பரிந்துரையாளரே, உமது கரங்களை நீட்டி என் வாழ்க்கைப் பாதையில் எனக்குத் துணை செய்யும். தீவிரத்தோடு மரணம் வரை ஆண்டவருக்குப் பணி புரிய எனக்கு உதவி செய்யும் . பரலோகில் உம்முடன் நான் ஆண்டவரைக் காண துணை செய்யும்.
அருள் நிறைந்த மரியே...

ஆமென்.