சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களுக்காக.
"இன்று வெது வெதுப்புள்ள ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து, எனது இரக்கத்தின் ஆழத்தில் மூழ்க விடு. இவ்வான்மாக்கள் எனது உள்ளத்தை மிகவும் நோகச் செய்கிறார்கள். இந்த வெதுவெதுப்புள்ள ஆன்மாக்களாலேயே நான் ஜெத்சமனிப் பூங்காவில் பயங்கர வேதனைகள் அனுபவித்தேன். அவ்விடத்தில், பிதாவே, உமக்கு சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு அகலட்டும் என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்கள்தாம். இவர்களுக்கு என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவது ஒன்றுதான் மீட்பின் கடைசி நம்பிக்கை" என்றார் நமதாண்டவர்.
மிகவும் இரக்கமுள்ள சேசுவே! நீர் கருணையே வடிவானவர். கருணை மிகுந்த உமது இருதய வீட்டில் இந்த வெது வெதுப்புள்ள ஆன்மாக்களை அழைத்து வருகிறேன். உம்மை இத்தனை துயரத் தில் ஆழ்த்திய நடைப்பிணம் போன்ற, பக்தியற்ற இவ்வான்மாக்களின் உள்ளங்களை, உமது தூய அன்பின் அக்கினி, மறுபடியும் கொழுந்து விட்டு எரியச் செய்வதாக. கருணை மிகுந்த சேசுவே, உமது இரக்கத்தின் வல்லமையைப் பயன்படுத்தி, உமது அன்பின் அனலுக்குள் இவர்களை இழுத்து, புனித அன்பாகிய கொடையை இவர்களுக்கு அருள்வீராக. உமது வல்லமைக்கு அப்பாற் பட்டது எதுவுமேயில்லை.
நித்திய பிதாவே! கனிவு மிக்க சேசுவின் இருதயத்தில் கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ள இந்த வெதுவெதுப்புள்ள ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். இரக்கத் தின் தந்தாய்! உமது திருக்குமாரனின் கசப்பான பாடுகளைப்பற்றியும், சிலுவையில் மூன்று மணி நேரமாக அவர் அனுபவித்த கடின மரண வேதனையைப் பற்றியும் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். இவர்களும் உமது எல்லையற்ற இரக் கத்தை மகிமைப்படுத்துவார்களாக.
ஆமென்.