நித்திய பிதாவே, உமது பிரிய மகளையும், மனுக்குல இரட்சகரே, உமது நேசத் தாயையும் சகலத்தையும் பரிபாலிக்கும் பரிசுத்த ஆவியானவரே. உமக்கு உகந்த பத்தினியுமாகிய புனித கன்னி மரியாயையும் நித்தியத்திலிருந்து நியமிக்கப்பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் விசேஷ விதமாய் மகிமைப்படுத்த தீர்மானித்தீரே, உமக்கே ஆராதனை!
திரியேக தேவனே, உமது நியமம்படி இப்பூமியில் ஒரு பகுதியாகிய இந்தியாவில் தமிழ்நாட்டில்., தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப் பள்ளியினருகில் உள்ள பூண்டி எனும் குக்கிராமத்தில் உமது விசேஷ அருள் மாரியால் அவ்வன்னை மூலமாய் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி இறைத்து வருகிறீரே உமக்கு ஸ்துதியும் ஸ்தோத்திரமும்!
பூண்டியில் எழுந்தருளியிருக்கும் புதுமை மாதாவே, இயற்கை சக்திக்கும் மனித வல்லமைக்கும் மேலாக உலக மக்களின் இக் கட்டு இடைஞ்சல்களைப் போக்கி அவர்கள் ஆசிக்கும் நன்மைகளை அபரிமிதமாய் அளிக்கும் உமது அன்பும் அனுக்கிரகமும் இப் பரந்த பாரத நாட்டில் மட்டுமேயன்றி உலகத்தின் பல பாகங்களிலும் பரவி இருக்கிறது. தேவனுக்கு அநவரத காலமும் ஸ்துதியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக!
இது சமயம் என் ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் அந்தஸ்திற்கும் ஏற்பட்ட கஷ்டத்தைப் போக்கவும் ஆசிக்கும் நன்மைகளை அடையவும் எப்பக்கமும் ஓடியாடி எவ்வித பயனுமின்றி, கடைசியாக பூண்டி புதுமை மாதாவே, நீரே தந்து மென்று உம்மைத் தேடி அடைந்து உமது பாதத்தில் விழுந்து கிடக்கிறேன்.
உமது வல்லமையுள்ள மன்றாட்டால் உமது அன்பு, அனுதாபம், நீதி, நியாயம், அனுசரணைகளை எமக்கு அளித்தருளும். என் ஆத்துமத்திற்கும் சரீரத்துக்கும் அந்தஸ்திற்கும் ஏற்பட்ட கஷ்டங்கள் முற்றிலும் விலகவும் எனக்குத் தேவையான நன்மைகளை நான் அடையவும் திரியேக இறைவன் சித்தப்படி எனக்கு அடைந்து கொடுத்தருளுங்கள் தாயே!
கடந்த காலக் குற்றங்களுக்கு மனஸ்தாபக் கண்ணீரோடு தக்க பரிகாரம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன் . மீதி யாயுள்ள என் வாழ்நாளை கடவுளின் மகிமைக்காகவும் என்னுடையவும் பிறருடையவும் நன்மைக்காகவும் செலவழித்த பின் இறுதியில் சமாதானத்தில் கண்ணை மூடி உம்முடன் சர்வேசுரனுடைய பேரின்ப பாக்கியத்தில் பங்கு பெற வரம் அடைந்து தாரும் தாயே!
ஆமென்.