பராபர வஸ்துவாயிருக்கிற சர்வேசுரா சுவாமி! தேவரீர் ஆண்டவர், நான் நீசனாயிருக்கிற அடிமை. இவ்வடிமை அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற தேவரீரைச் சட்டை பண்ணாமல் தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே சுவாமி! தேவரீருக்கேற்காத துரோகங்களை நினைத்தேனே சுவாமி! நான் செய்த பாவங்களினாலே, தேவரீரைச் சிலுவையிலே அறைந்தேனே சுவாமி. தேவரீருடைய திருக்காயங்களை நிஷ்டூரமாய் அநேக முறை நோகப் பண்ணினேனே சுவாமி. தேவரீர் படாத பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைகிறதற்குப் பாவி நான் காரணமாயிருந்தேனே சுவாமி.
நான் செய்த பாவங்களினாலே என் ஆத்துமத்தைக் கெடுத்துப் பசாசுக்கு அடிமையாய்ப் போய் நரக பாதாளத்திலே விழுந்து என்றென்றைக்கும் இப்பொழுதும் எப்பொழுதும் ஊழியுள்ள காலம் ஆறாத நெருப்பில் அவியாத கட்டையாய்க் கிடந்து வேகிறதற்கு என் பேரிலே அளவில்லாத கடனைச் சுமத்திக் கொண்டேனே சுவாமி. இதனாலே நரகத்துக்குப் போவேனென்கிற பயத்தைப் பார்க்கவும், மோட்சமிழந்து போவேனென்கிற சேதத்தைப் பார்க்கவும், அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற தேவரீரைச் சட்டை பண்ணாமல் தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேன் என்கிறதினாலேயும், தேவரீருக்கு ஏற்காத துரோகங்களை நினைத்தேன் என்கிறதினாலேயும் மிகவும் மனம் நொந்து உத்தம மனஸ்தாபமாயிருக்கிறேன். எனக்கிதுவே மனஸ்தாபமில்லாமல் வேறே மனஸ்தாபமில்லை; எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை. இந்தப் பாவங்களையெல்லாம் அறியாமலும் என் பலவீனத்தினாலும் செய்தேன். என் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி, அறிந்தும் துரோகமாய்ச் செய்தேன். என் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.
இனிமேல் ஒருக்காலும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லையென்று கெட்டியான மனதோடே பிரதிக்கினை பண்ணுகிறேன். பின்னையும் என் பலம் போதாதென்கிறதினாலே, சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தத்தின் பலன்களைப் பார்த்து, என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு மோட்ச பாக்கியம் தந்தருளுவீர் என்று முழு மனதோடே நம்பியிருக்கிறேன்.
இவையெல்லாம் என் பலத்தினாலே கூடாதே. அர்ச்சியசிஷ்ட தேவமாதாவே, எனக்காக உம் திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும்.
ஆண்டவராயிருக்கிற சேசுக்கிறிஸ்துவே உலகத்தினுடைய பாவங்களைப் போக்குகிறவரே, எங்கள் பேரில் தயவாயிரும்.
(அதற்குப் பின் ஒரு பரலோக, அருள் நிறைந்த. விசுவாச மந்திரம் சொல்லவும்.)
ஆமென்.