அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரிடம் 13 - மன்றாட்டுக்கள் - பாடலும் செபமும்.

1. தேவபாலனை கரம் ஏந்திய மாசீலா
ஆவலாய் எமக்கருள் தா 

முதல் மன்றாட்டு: பதுவைப் பதியரே! தூய அந்தோனியாரே! அமல கன்னியின் அடைக்கலத்தில் பிறந்தவரே சிலுவை அடையாளத்தால் பேய்களை பயந்தோடச் செய்தவரே! மரியன்னையின் பக்தி உள்ளவரே! பிசாசின் எல்லா மாயைகளிலிருந்து எங்களைக் காத்து வழிநடத்திடும் (!பர.அரு.பிதா)

2. அற்புத போதா! கற்பின் மா தூயா!
உற்பன்ஞான தாதா! தற்காப்பாய் தனயரெமை 

இரண்டாம் மன்றாட்டு: உலகின் செல்வத்தையும், மகிமையையும் விட்ட பெரும் துறவியாக வாழ்ந்தீர். நாங்களும் இவ்வுலக ஆசாபாசங்களில் சிக்கி உழலாமல் நல்வாழ்வு நடத்திட இயேசுவை மன்றாடும். (!பர.அரு.பிதா)

3. தாழ்ச்சியால் மாட்சியுற்ற மாதவ மாதவனே!
வீழ்ச்சியூட்டும் ஆவணத்தை நீக்குவாய் எமில் 

மூன்றாம் மன்றாட்டு: தாழ்ச்சியின் கண்ணாடியான, தூய அந்தோனியாரே! இவ்வுலக புகழ்ச்சி, பதவி, செல்வங்களால் நாங்கள் மோசம் போகாது தயவாய் எம்மை காத்தருளும். (!பர.அரு.பிதா)

4. பேதகம் ஒட்டிய போருட் போதா
தீதுகள் நீக்கி காத்திடும் எம்மை 

நான்காம் மன்றாட்டு: பேதகத்தினரின் சம்மட்டியே! நாத்தீகரை நல்வழிப்படுத்தியவரே! தவறான போதனைகளால் நாங்கள் கதி இழக்காமல் எங்களை நாளும் காத்திடும். (!பர.அரு.பிதா)

5. நஞ்சுணவூட்டி மாய்த்திட அழைத்தவர்
அஞ்சிட உண்டு - பிழைத்தவர் அருள்வாய் 

ஐந்தாம் மன்றாட்டு: உம்மைக் கண்டு பொறாமை கொண்ட தீயவா உமக்கு நஞ்சு உணவளித்தும், நீர் தேவன் அருளால் அதனை உண்டும் பிழைத்தீர். தீயவர்களின் சதித்திட்டங்களில் நின்று எங்களைக் காத்தருளும்.
(!பர.அரு.பிதா)

6. நற்கருணை நாதரை - பணிந்தது கழுதை
அற்பன் திருந்தினான் - அடியவர்க்கருள்வாய் 

ஆறாம் மன்றாட்டு: நற்கருணை நாதரின் மீது பக்தியற்ற பதிதன், தன் கழுதை அவரை தெண்டனிட்டு ஆராதித்ததைக் கண்டு மனம் திரும்பச் செய்தீர். நாங்களும் நற்கருணை நாதர் மீது பக்தி கொண்டு அடிக்கடி திருப்பலியில் அமரும் ஆர்வத்தைத் தாரும். (!பர.அரு.பிதா)

7. மறையுரை கேட்டிடா - மானிடர் நாணிட உம்
மறையுரை கேட்டன மச்சங்கள் - அருள்வாய் 

ஏழாம் மன்றாட்டு: உம் மறையுரையைக் கேட்க மனமற்ற மக்கள் வெட்கப்படும் படி மச்சங்களுக்குப் போதித்தீர். நாங்கள் செபம் செய்தல் போன்ற ஞான காரியங்களில் கவலையின்றி இராது காத்து கரை சேர்த்தருள்வீர். (!பர.அரு.பிதா)

8. வெட்டிய காலை ஒட்டிய மா நோயால்
வெட்டிடும் எம் வினைகளை - நாளும் 

எட்டாம் மன்றாட்டு: வாலிபன் வெட்டிய காலை சிலுவை அடையாளமிட்டு நலமாக்கினீரே! எம்மிடையில் தோன்றும் மாய வினைகள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தியருளும். (!பர.அரு.பிதா)

9. கழுத்தை நெரித்த பேயை ஒட்டிய பேருளா
இழுக்கியும் அலகையை ஓட்டிக் காத்திடுவீர். 

ஒன்பதாம் மன்றாட்டு: உமது கழுத்தை நெரித்த துஷ்டப்பேயை தேவ அருளால் துரத்தி வெற்றி கண்டீரே! நாங்களும் தேவ நம்பிக்கையிலும், பராமரிப்பிலும் தளராது என்றும் வளர்ந்திட உதவி புரியும். (!பர.அரு.பிதா)

10. தந்தையை மீட்டாய் கொலை இழுக்கினின்று எந்தையே
எமையும் மீட்பாய் இழிநிலை நின்று

பத்தாம் மன்றாட்டு: குற்றமற்ற உம் தந்தையை பொய்யான கொலைக் குற்றச்சாட்டிலிருந்து மீட்டவரே! எங்களையும் வீண் குற்றச்சாட்டுக்கள், பழிகள், சதிகளிலிருந்து காத்தருளும். (!பர.அரு.பிதா)

11. ஊமைகளைப் பேசவைத்த உத்தமரே என்
தீமைகளைக் களைந்து காப்பீரின்றும்

பதினோராம் மன்றாட்டு: ஊமையைப் பேசச் செய்தவரே! நாங்கள் உண்மைக்கு சாட்சி கூறுவதில் ஊமையர்களாய் இராமல் மனவலிமையுடன் செயலாற்ற மனத்திடனை அருளும். (!பர.அரு.பிதா)

12. நாவழியா நற்றவனே! கொற்றவனே!
பாவ வழியினின்று காப்பாய் - நாளும்

பன்னிரண்டாம் மன்றாட்டு: இறைவனின் புகழை உலர்ந்த உம் நாவு அழியா வரம் பெற்றது. நாங்களும் தீயவைகளைப் பேசாமலும், பிறர் மீது பழி சொல்லாமலும், இறைவனைப் புகழவும் அருள்தாரும். (!பர.அரு.பிதா)

13. கோடி அற்புதா ஈடில்லா பொற்குணாளா
நாடிடும் மைந்தர்க்கு நலங்களெல்லாம் அருளிடுவாய்.

பதின்மூன்றாம் மன்றாட்டு: கோடி அற்புதரரெனப் புகழப்பட்ட தூய அந்தோனியாரே! உம்மை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களுக்கு செவி கொடுத்தருளும். எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன் களை எங்கள் ஆண் டவராகிய இயேசுவிடமிருந்து பெற்றுத் தாரும் (!பர.அரு.பிதா)

ஆமென்.

(இதனை செவ்வாய், ஞாயிறு நாட்களில் சொல்லலாம்)