அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் சத்துரு சங்கார மாலை.

தூத்துக்குடி ஆயர்ரோச் ஆண்டகை சே.ச.அவர்களின் அனுமதி பெற்ற காப்பு

மூவா முதல்வனை நாளும் போற்றி
பாவாலும், பூவாலும் . பரணை ஏற்றி
தேவாதி தேவன் திரு அடியராய்
சீவிய நாளெல்லாம் தவத்துடன் வாழ்ந்த
அந்தோனி முனியே வந்துதவுவீரே

1. பதுவைப் பதியர் வேதிய மேதை
புதுமை வள்ளல் - சங்கார மாலையை யாத்திட அருள்வாய்

2. பீடத்தடியில் பேயைக்கட்டிய வீரச்சிறுவா
ஓடச் செய்வீர் வாட்டும் அலகையை

3. சிலுவை வரைந்துமாற்றானை ஓட்டிய மாதவனே .
நாலு பக்கமும் பிசாசு வெட்கி ஓடச் செய்வீர்

4. பாலனை கரத்தில் ஏந்திய சீலா
ஞானத்தோடெம் துயர் நீக்க வாரும்

5. சாத்தான் வாட்டியே துறவியைக் காத்திட
போர்த்தினீர் (உம்) மேலாடை - நீங்கியது நோயும்

6. மறையுரை மேடையை இடித்தது
பேயும் குறையேதுமிலாது காத்தீர் மக்களை

7. கழுத்தை நெரித்து பேயை ஓட்டினீர்
பழுவாமல் வருந்தும் பலரைக் காத்தீர்

8. வருவீர்! அருள் தருவீர்! கருணை பொழிவீர்
சருகென சாத்தான் பறந்திடச் செய்வீர்

9. நச்சு உணவை நலதாக்கி உண்டீர் -
நச்சு சஞ்சலம் நின்றெமை காப்பீர்

10. பில்லி சூனியம் செய்து ஏவிய பேய்களை
வல்லமை மிகுநீர் ஓட்டிடும் விரைவாய்

11. உருவஞ் செய்து உருவேற்றி பேயை அதனுள் ஏவி விட்டு
கருவறுக்கும் பகைவரை மாய்த்திடுவாய்

12. மாவைக் குழைத்து பல்லயத்தில் பூசைவிட்டு
எனைக்கொல்ல ஏவிவிடும் பேயை ஓட்டிடுவாய்

13. சக்கரத்தில் உருவேற்றி - முட்டையையும் படைத்து
திக்காரம் ஊட்டிய பேயை ஓட்டிடுவீர்

14. கருவை எடுத்து - மந்திரமோதி பேருரைத்து
உருவேற்றி விட்ட பேயை துரத்திடுவீர்

15. ஆறு, ஐந்து, எண்பத்தொன்று, இரண்டு, எட்டு, இருபத்தேழு
எழுத்துக்களால் ஏவின பேய்களை வெருண்டோடச் செய்வீர்

16. சுடலையில் உருவம் வைத்து - ஏவல் செய்து
அடித்தல் ஆணியின் தீங்கினை எரிப்பீர்

17. சாராயம் - கள் - மதுபானம் பொரி - கறி சோற்றிற்கும் ஆடும்
கோரப் பேய்தனை ஓட்டி, நலந்தனை அருளும்

18. காளி, காட்டேரி, மாடன், கூளி, கருப்பன் வயிரவன் போன்ற
பேய்க கணங்களை ஓட்டி கருணை புரிவீர்

19. கலயத்தில் தகட்டினை இட்டு - மந்திரம் ஓதிக்கெடுவும் இட்டு
நிலத்தில் புதைத்த - நிமித்தங்கள் நீக்கும்.

20. பித்துப் பிடித்திட செய்த - பிணி வந்திட செய்திட்ட ஏவலும்
சத்தற்றுப் போகச் செய்வீர் முனிபுங்கவா

21. ஆடும் பேயையும் ஓடும் பேயையும்
சாடும் பேளையும், வையும் பேயையும்
பாடும் பேயையும் , பகடிப் பேயையும்
நொண்டிப் பேயையும் ஒட்டுவீர் மாமுனியே.

22. ஓ! வென அலறும் பேயை ஒளிப்பீர்
இ இ என இளிக்கும் பேயை சிதைப்பீர்

23. இடியோசை இட்டு பிடி பிடி என்றிடும் பேயினை
இடி இடி என இடித்து உதைத்திடும்

24. பருதி முன் எதிரி போல், பகைவனை ஓட்டும் ,
பூனை முன் எலி போல் கீரி முன் பாம்பு போல்,
பேயை நடுங்கச் செய்யும்

25. சிங்கம் போல் சீறி எமை மாயத்திட -
இங்கு வந்திடும் பேயை வீழ்த்தும் எரிநரகில்

26. உம் நாமம் ஓதும் எம்மையே எந்நாளும் ஆளும்
இம்மையில் தேற்றி அம்மையும் தாரும்

ஐயனே புனித அந்தோனியாரே

ஆமென்.