உண்மையும் செழுமையும் பொருந்திய தேவ தாழ்ச்சிக் கொடியான சேசுவே! தேவதாழ்ச்சிக் குலையானது ஆலையில் அகப்பட்டு நைந்து இரசம் பொழிவது போலத் தேவரீர் தேவதாழ்ச்சியை மேற் கொண்டு சிலுவை என்கிற ஆலையில் அகப்பட்டு உமது திருத்தேகத்திலிருந்து பிரளயமாக இரத்தம் சொரிந்ததையும், உமது திருவிலாவில் ஒரு சேவகன் ஈட்டியின் வலிமையினால் குத்தித் திறந்தபொழுது உமது திருவுடலில் ஒரு துளிமுதலாய் தங்காமல் அதிலிருந்து இரத்தமும் நீரும் வெள்ளமாய் பெருகி ஓட அதை எங்களுக்குத் தேவாமிர்த பானமாகக் கட்டளையிட்டருளினதையும், காட்சியாய்த் தேவரீர் ஒரு மீறைச் செண்டு போல் சிலுவையில் உயர்த்தப்பட்ட பொழுது உமது திருத்தசை வேதனையால் நைந்து, திருவுள்ளம் வரண்டு, திவ்விய அஸ்தியின் மூளை வற்றிப்போனதையும் நினைத்தருளும் சுவாமி. ஆ, எனது நல்ல சேசுவே! எங்களுக்காக அனுபவித்த இந்த நிகரில்லாத நிர்ப்பந்தப் பாடுகளையும் சிந்தின திரு இரத்தப் பிரவாகத்தையும் பார்த்து எனக்குச் சாகுங்காலமாகி நான் ஏங்கி தவித்து கைவிடப்படுகின்ற அவஸ்தை வேளையில் என் ஆத்துமத்தைக் கையேற்றுக்கொண்டு இரட்சித்தருளும். என் மதுர சேசுவே! அன்பினாலும் தவத்தினாலும் நான் அல்லும் பகலும் அழுது விடும் கண்ணீரே எனக்கு ஆகாரமாயிருக்க என் இருதயத்தைத் திடப்படுத்தியருளும். என் இருதயம் உம்மில் நிலைகொண்டிருக்கவும், எனது வேண்டுதல் உமக்குப் பிரியமாயிருக்கவும், எனது முடிவு பாக்கியமான முடிவாயிருக்கவும், நான் மரித்தபின் மோட்ச இராச்சியத்தை அடைந்து அர்ச்சியசிஷ்டவர்களோடு உம்மை நித்தியத்திற்கும் வாழ்த்திக்கொண்டிருக்க கிருபை செய்தருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி. ஆமென்.
ஒரு பர., அருள்., திரி. ஆமென்.