வேளாங்கண்ணி மாதாவுக்கு நவநாள் ஜெபம்.

பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக! ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக, ஆமென்.

மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட மணியே! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமானபோதும் ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசு அணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், ஜெபங்களினாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும், கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்.

துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெரு மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறவர்களுக்கு நீர் வாக்களித்த விசேஷ உதவியையும் பாதுகாப்பையும் எனக்காக இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின்போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுக்கள் கடவுளுடைய விருப்பத்திற்கு மாறானவையாக இருந்தால், எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.

(வேண்டுதலை உறுதியோடு கேட்கவும்) 

தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான் செய்யும் இந்த நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையைக் காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திருஉள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து வணக்கமாக நான் செய்யும் இந்த நவநாளையும் இப்போது நான் செய்யப்போகும் 'அருள் நிறை' ஜெபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.

(அருள் நிறை ஜெபத்தை 9 முறை சொல்லவும்)

கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே, 'அருள் நிறைந்தவள்' என்று கபிரியேல் தூதர் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துதல்களைக் கூறுகிறேன், ஏற்றுக் கொள்ளும். நீர் அணிந்திருக்கும் முடியில் என் ஜெபங்கள் அத்தனையும் விண்மீன்கள் எனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு, உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திருமகனும் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும், அது போன்ற உமதன்பையும் பார்த்து, ஏழையான எனது ஜெபத்தை ஏற்று, என் மன்றாட்டை அடைந்து தந்தருளும் தாயே! ஆமென்.


வேளாங்கண்ணி மாதாவிடம் வல்லமையுள்ள மன்றாட்டு.


அருள் மழை பொழியும் ஆரோக்கிய தாயே! துன்பப்படுவோரின் துயர் துடைக்கும் தயை மிகு தாயே! இதோ அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம்.

உமது வல்லமையுள்ள மன்றாட்டினால் எங்களை கரம்பிடித்து வழி நடத்தும் தாயே! எல்லாவற்றிற்கும் மேலாக இறை இயேசுவையே அன்பு செய்யவும் அவருக்காகவே வாழவும் எங்களுக்கு துணை செய்வீராக!

ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் அன்னையே!எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கின்ற நீர் சக்தி மிக்கவளாய் இருக்கின்றீர் அம்மா நாங்கள் கேட்பதை தட்டாமல் தருகின்ற அன்புத் தாயே! துன்ப துயரங்களிலிருந்து எங்களை காப்பாற்றும்.

தீராத வியாதி வருத்தங்களிலிருந்து விடுவித்தருளும் வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும் அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும் வாழ்வதற்கு அறியாது வருந்தும் எங்களுக்கு வாழ வழி காட்டும். எங்கள் குடும்பங்களையும், தொழிலையும் ஆசீர்வதித்து பாதுகாத்தருளும் தாயே! ஆமென்.


வேளாங்கண்ணி மாதாவிடம் வல்லமையுள்ள மன்றாட்டு.


அருள் மழை பொழியும் ஆரோக்கிய தாயே! துன்பப்படுவோரின் துயர் துடைக்கும் தயை மிகு தாயே! இதோ அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம்.

உமது வல்லமையுள்ள மன்றாட்டினால் எங்களை கரம்பிடித்து வழி நடத்தும் தாயே! எல்லாவற்றிற்கும் மேலாக இறை இயேசுவையே அன்பு செய்யவும் அவருக்காகவே வாழவும் எங்களுக்கு துணை செய்வீராக!

ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் அன்னையே!எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கின்ற நீர் சக்தி மிக்கவளாய் இருக்கின்றீர் அம்மா நாங்கள் கேட்பதை தட்டாமல் தருகின்ற அன்புத் தாயே! துன்ப துயரங்களிலிருந்து எங்களை காப்பாற்றும்.

தீராத வியாதி வருத்தங்களிலிருந்து விடுவித்தருளும் வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும் அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும் வாழ்வதற்கு அறியாது வருந்தும் எங்களுக்கு வாழ வழி காட்டும். எங்கள் குடும்பங்களையும், தொழிலையும் ஆசீர்வதித்து பாதுகாத்தருளும் தாயே! ஆமென்.


வேளாங்கண்ணி மாதாவை நோக்கி மன்றாட்டு.


கன்னி மரியாயே! ஆரோக்கிய அன்னையே! வேளாங்கன்னியில் இரக்கத்தின் அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் ஆண்டவளே! எங்களின் ஆன்ம, உடல் நோய்களை அகற்றி, எங்களுக்கு ஆறுதலாயும் அடைக்கலமாயும் இருந்தருளும். உமது பேருதவியால் எண்ணற்ற பிணியாளர் நலமடைந்துள்ளனர்.

உமது வல்லமையையும், தயவையும் நம்பிக் கொண்டு உம்மை நாடி வந்துள்ளோம். உம் திருமகனையும், உம்மையும் அன்பு செய்து இறைத் தொண்டர்களாக நாங்கள் விளங்குமாறு செய்தருளும். எங்களின் ஆன்ம அருள் வாழ்வை வளப்படுத்தி அருளும். உலக துன்பங்களாலும், மன வேதனைகளாலும் அல்லலுறுகின்றவர்களுக்கு அருகிலிருந்து உமது தாயன்புடன் ஆறுதலளியும்.

இறைவனின் திருவுளத்திற்கு ஏற்புடையதானால் அத்தகைய துன்ப வேதனைகளினின்று அவர்களைக் காத்தருளும். பாவச் சேற்றில் சிக்குண்டவர்களை உமது அருள் நீரால் கழுவி புனிதராக்கியருளும். இதயத் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ள இறைமகனை ஈன்றெடுத்த தாயே! உமது உதவியை நாடியவர் எவராகிலும் உம்மால் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லையே! எங்களுடைய துயர வேளைகளில் எங்களின் தஞ்சமாயிருப்பீர் என்று நாங்கள் உறுதியாயிருக்கிறோம்.

ஏனெனில் ஆறுதல் அளிக்க விரைந்திடும் விண்ணகத்தாய் நீரே! இம்மண்ணகத்தில் கசிந்த கண்களையும் அவற்றினின்று வழிந்தோடும் துன்பக் கண்ணீரையும் கண்டு இரக்கமுடன் எங்களை அரவணைத்துக் கொள்வீராக. இறை மக்களுக்கெல்லாம் சகாயம் புரிந்து வரும் ஆரோக்கிய மாதாவே! நீர் எல்லாம் வல்ல இறைமகன் கிறிஸ்துவின் அன்னையாகையால் எவ்வுதவியையும் எங்களுக்கு அடைந்து கொடுக்கக்கூடியவள் அன்றோ!

எல்லா ஆபத்துகளினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். எங்களைப் பற்றியுள்ள தீமைகளை அகற்றியருளும். இறை அன்பில் வளர்ந்திட, நலமும், வரமும், அருளும் பெற்று நாங்கள் ஒவ்வொருவரும் உம்மோடு கூடி என்றென்றும் இறைபுகழ் பாடி அவரை வாழ்த்துவோமாக. ஆமென்.


வேளாங்கண்ணி மாதாவிடம் ஆன்ம உடல் தேவையில் மன்றாட்டு.


என் ஆண்டவளே, இறைவன் எனக்களித்த உண்மையான ஆறுதலே, இடுக்கண்களில் இளைப்பாற்றியளிக்கும் விண்ணக பத்தினியே! பாவ இருளில் அகப்பட்டுத் தவித்திடும் ஆன்மாவுக்கு ஒளிச் சுடரே! திருப்பயணத்தில் வழிகாட்டியே! பலவீனத்தில் வலிமையே! ஏழைகளின் ஆறுதலே! நோயுற்றவர்களின் அமிழ்தமே! பாவிகளின் தஞ்சமே! என் மீட்பின் நம்பிக்கையே, எல்லையற்ற முறையில் அன்பு செய்யும் இறைவனுக்கு நீர் தாயாகையால் உமது மேலான மகத்துவத்திற்கேற்ப என் மீது இரக்கம் காட்டியருளும்.

என் தேவைகளை எல்லாம் அறிந்துள்ள உம்மிடம் என் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிக்கிறேன்   விண்ணக மண்ணக அரசியே! கருணை நிறைந்த மரியே! பாவிகளின் தஞ்சமே! பாவக்கடலில் அமிழ்ந்தவர்களுக்குத் தெப்பமே! உலகத்திற்கெல்லாம் தயாபரியே! அடிமையானவர்களை மீட்கின்ற கிரயமே! நோயாளிகளுக்கு ஆரோக்கியமே! உள்ளம் வேதனைப் படுகிறவர்களுக்கு ஆறுதலே! இவ்வுலக வாழ்வுக்கான இருப்பிடமே! தஞ்சமென்று நாடி வந்திருக்கும் அடியேனைப் புறக்கணிக்காது, நான் கேட்கின்ற சகாயத்தை அடைந்து தந்தருள உம் திருமகனிடம் மன்றாடும் தாயே! ஆமென்.


ஆரோக்கிய மாதா மன்றாட்டு மாலை.


சுவாமி, கிருபையாயிரும் 2.
கிறிஸ்துவே, கிருபையாயிரும் 2.
சுவாமி, கிருபையாயிரும் 2.

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜென்மபாவமில்லாமல் உற்பவித்த அர்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகம் படைக்கப்படுமுன் சர்வேசுரனால் தேர்ந்து கொள்ளப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இன்ப வனத்தில் ஆதிப் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவ இருளை அகற்றுகின்ற ஞான ஒளியான புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விடிவெள்ளி என இறைவாக்கினரால் போற்றப்படும் புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனுக்குலத்துக்கு அருள்மழை பெறுவிக்கும் மேகமான புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எல்லா நன்மைத்தனத்துக்கும் பாத்திரமான ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாப்பிதாக்களால் பரிசுத்தமானவள் என்று அழைக்கப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அகங்காரப் பேயின் தலையை மிதித்த புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்ராயேலரின் பதினாறு அரச குலங்களுள் சிறப்புற்ற குலத்தில் உதித்த புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பேறுபெற்ற அன்னம்மாள் சுவக்கீனின் திருமகளாகப் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர்களின் வேண்டுதல்களாலும் நற்செயல்களாலும் இறைவனின் அன்புக் குழந்தையாகப் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தூதர், புனிதர் அனைவருக்கும் மேலாக நிறைந்த அருள் ஒளியோடு பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

படைப்புப் பொருட்கள் அனைத்திற்கும் மேலாக இறைவனுக்கு மகிமையளிக்கப் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விண்ணுலகும் மண்ணுலகும் போற்றிடும் அழகுடன் பிறந்த புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கடவுளின் கொடைகளை எல்லாம் பெறுவிக்கும் இறைகுலக் கொழுந்தான புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நித்தியமும் இறைவனின் திருமுன் தேர்ந்தெடுக்கப் பெற்றவளாக விளங்கிடும் புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தூய்மையின் வழியில் எல்லாப் புனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறப்பின்போது விண்ணக ஒளியால் சுடர்விட்ட புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனுக்குலத்தின் மகிழ்ச்சியாக விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறந்தவுடன் விண்ணகத் தந்தைக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது அழகுக்கேற்ப மரிஎன்னும் புதிய பெயர் சூட்டப்பெற்ற புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

என்றும் கன்னிகையாக விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆலயத்தில் அனைவருக்கும் ஆசிரியையாக விளங்கிய ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நோயுற்றோரின் துன்பத்தை அகற்றி நலமருளும் புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியான புனித ஆரோக்கிய அன்னையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனிதர்களின் விண்ணக முடியென விளங்கும் புனித ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக:

விண்ணகத் தந்தையே! பரிசுத்த கன்னிகையாகிய புனித மரியாளை எல்லா  அருட்கொடைகளாலும் அலங்கரித்து உமது திருக்குமாரனைப் பெற்று அமுதூட்டி வளர்க்கும் தாயாக நித்தியந்தொட்டு தெரிந்து கொண்டீரே; அந்த உத்தமத் தாய் எங்களுக்காக மன்றாடிக் கேட்கும் விண்ணப்பங்களை நாங்கள் அடைந்து வறுமை, பிணி போன்ற துன்பங்களிலிருந்து பாதுகாக்கப்படுவோமாக.  அத்தாயின் வழியாக ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற்றவர்களாய் தூய்மையின் வழி நடந்து விண்ணக முடியைப் பெற்றுக் கொள்ள அருள் கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஆமென்.