சூசை முனிவரே! அருளிலும் வரப்பிரசாதத்திலும் உமக்குச் சமானமுள்ளவன் யார்? பிதாவாகிய சர்வேசுரனின் பொருட் காப்பாளர் நீர்; சுதனாகிய சர்வேசுரனை வளர்த்த தந்தை நீர்; இஸ்பிரீத்துசாந்துவிட மாய்த் தமது பத்தினிக்கு விரத்த நிழலானவர் நீர்; பரம திரித்துவத்தால் திவ்ய இரகசியங்களின் சஞ்சிதக்காரராய்த் தெரிந்து கொள்ளப்பட்டவர் நீர்; சர்வமும் சிருஷ்டித்தவருடைய மாதாவுக்கு உத்தம பத்தாவானவர் நீர்; இப்படிப்பட்ட உமது மகிமையை வாழ்த்த தேவ தூதர்களுக்கும்கூட அரிதாயிருக்க, அடியேனுக்கு இயல்வதெப்படி? ஆனால் என் ஆசையும் பக்தி யும் நிறைவேறத்தக்கதாக இயன்ற வரை உம்மைத் துதிக்கக்கடவேனாக. தாயின் உதரத்திலே தேவ வரப்பிரசாதத்தால் அலங்கரிக்கப்பட்டதால், பாக்கியவாளன் நீர் வாழ்க, வாழ்க! பாவ உலகில் நீர் பிறந்து, பாவப் பழுதில்லாமல் ஜீவித்ததால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! தண்ணீரில் உற்பவித்த புஷ்பம் தண்ணீரோடு கலவாமலிருப்பது போல, பெண் குடும்ப வாசத்தில் வாழ்ந்து, பெண் ணோடு உறவின்றி இருந்ததால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! சுகிர்தவாளனென்று முதன் முதல் தேவ வாக்கியத்தில், சுவிசேத்தில் நிரூபிக்கப்பட்டதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! பழுதற்ற கன்னிதானத்தோடு விவாக சரணத்தின் பலனாகிய புத்திர பலனை இஸ்பிரீத்து சாந்துவால் அடைந்ததால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! இருபத்தேழு வரும் தேவமாதா வோடு உரையாடி, அவர்களது புண்ணியங்களின் பின்சென்றதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! கிறீஸ்துநாதருக்குக் காவலான தேவதூத ராக உம்மைக் கையேற்றுக் கொண்டதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! சேசுநாதருக்கு உமது கையால் உணவு ஊட்டி, உடுத்தி, சீராட்டி, கையில் ஏந்திப் பணிவிடை செய்ததால் பாக்கிய வாளன், நீர் வாழ்க, வாழ்க! தேவ குமாரன் உம்மைப் பிதாவென்று கூப்பிட்டதால் பாக்கிய வாளன், நீர் வாழ்க, வாழ்க! அறுபது வயது ஆகும் வரை தேவகுமாரனுக்கும் மாதாவுக்கும் துணை செய்து சாகிற வேளையில் அவர்களும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போது, உமது சுகிர்தம் நிறைந்த ஆத்துமத்தை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்ததாலும், அவர்கள்தாமே உம்மை அடக்கம் செய்ததாலும் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! மோட்ச இராச்சியத்தில் தேவ மாதாவுக்குப் பிறகு எல்லாரிலும் அதிக மோட்ச மகிமையை அடைந்திருப்பதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! தேவமாதா உம்மை மெய்யான பத்தாவாகவும், தேவசுதன் உம்மை கைத்தாதை யாகவும் வெகுமானித்து, நீர் கேட்டதெல்லாம் செலுத்துவதால், பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! நீர் பழுதற்ற கன்னித்தானன் ஆனதினால், கன்னியருக்குத் தஞ்சம்; மெய்யான விவாக சரணனு மானதால் விவாக சரணருக்குத் தஞ்சம்; திவ்ய பாலனான சேசுவைக் காத்ததால், தாய் தந்தை இல்லாத சிறுவருக்குத் தஞ்சம்; தேவமாதாவை யும், குமாரனையும் கொண்டு அநேக தூரம் பரதேசியாய் வழிநடந்ததினால் பரதேசிகளுக்கும் தஞ்சம்; இப்படியே யாவரும் உமது தஞ்சத் தையும், அடைக்கலத்தையும் நம்பியிருக்கிறபடி யால், நானும் என்னை உமக்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கிறேன். சேசு மரியாயோடு நீரும் என்னை அடிமையாகக் கையேற்றுக்கொண்டு, உமது திருச்சித்தத்தின்படியே நடப்பித்து, பரகதி யில் என் ஆத்துமம் சேரும்படி கிருபை செய்தருளும்.
ஆமென்.