கருணை நிறைந்த பிதாவே! இரக்கம் நிறைந்த கர்த்தாவே, பாவத்தால் கெட்டழிந்த மனு சந்ததியை மீட்டு இரட்சிக்கும்படி உம்முடைய ஏக சுதன் கொடிய வேதனைப்பட்டுச் சிலுவையில் உயிர்விடத் திருவுளமானதுமல்லாமல் அவர் சிலுவையில் உமக்கு ஒப்புக்கொடுத்த பலி தேவரீருக்கு என்றென்றைக்குஞ் செலுத்தப்படவும், நாங்கள் அதனால் அடைய வேண்டிய பலனை இடைவிடாது அடையவும் இந்தப் பூசைப்பலி எந்நாளும் திருச்சபையில் நிறைவேறும் படிக்குச் சித்தமானீரே! உமது மட்டற்ற வல்லபமும், அளவற்ற ஞானமும், குறையற்ற நன்மைத் தனமும் விளங்கு கிற ஆச்சரியமான இந்தப் பூசையில் அடியேன் சமாதானத்தோடும், பயபக்தியோடும் இருக்கவும், உதிரம் சிந்தாத இந்தப் பலியைக் கொண்டு சிலுவையில் செலுத்திய உதிரப் பலியின் பேறுகளைக் குறையில்லாமல் கைக்கொள்ளவும் அநுக்கிரகம் பண்ணியருள வேண்டிக் கொள்கிறேன்.
ஆ! மட்டற்ற பிரதாபமுடைத்தான பிதாவே அடியேன் தேவரீருடைய கிருபாகடாட்சத்துக்கு அபாத்திரவானாயினும் உம் நேச குமாரன் எனக்காகச் சிந்தின விலைமதியாத திரு இரத்தத்தைப் பார்த்து எனக்குத் தயை செய்தருளும்.
ஆராதனைக்குப் பாத்திரமான கர்த்தாவே, உமது திவ்ய பூசையின் பலியைக் காண வேண்டுமெனறு உமது பீடத்தை அண்டி வருகிறேன். இந்த திவ்ய பலியால் அடியேனுக்கு வர வேண்டுமென்று தேவரீர் சித்தமாயிருக்கிற நன்மைகள் யாவையும் நான் குறைவில்லாமல் அடையவும், அதற்கு விக்கினமாக என்னிடமுள்ள குற்றங்களையெல்லாம் பரிகரிக்கவும் தேவரீர் சித்தம் வைத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகறேன்.
என் திவ்விய சேசுவே! தேவரீருடைய இனிய கருணையைப் பெற என் இருதயத்தைத் தக்க தாக்கி, என் பொறிகளை நன்னெறியில் நிறுத்தி பாவியான என் பாவங்களை உம் திரு உதிரத்தால் போக்கி என் ஆத்துமத்தைப் பரிசுத்தப்படுத்தி யருளும்.
தயாபரரான சர்வேசுரா! தேவரீர் அடியேனுடைய பாவங்களை மன்னியும். தேவரீருக்குப் பொருந்தாதென்பதால் அவைகளை முழுவதும் வெறுத்துத் தள்ளுகிறேன். யாராகிலும் எனக்குப் பொல்லாப்பு செய்திருந்தால் அவர்களது குற்றங்களை நான் நல்ல மனதோடு பொறுத்துக் கொண்டு தேவரீரும் அடியேனுடைய பாவங்களைப் பொறுத்தருள வேணுமென்று மகா தாழ்ச்சியுடனே வேண்டிக்கொள்ளுகிறேன்.
என் மதுர சேசுவே, தேவரீர் அடியேனுக்காக முழுதும் உம்மைப் பலியாகத் தந்தீரே. அவ்வண்ணமாய் உம் திருவுளத்தோடு என் கருத்தையும் ஒன்றுபடுத்தி அடியேனை முழுவதும் உமக்குப் பலியாகக் கொடுக்கிறேன்.
ஆமென்.