அர்ச். கன்னிமரியாயின் ஏழு வியாகுலங்களைக் குறித்து ஜெபம்

1. வியாகுல மாதாவே, உமது ஆத்துமத்திலே வியாகுல வாள் ஊடுருவப்படுமென்று சிமியோன் தீர்க்கதரிசனம் சொன்னதைக் கேட்டு மிகுந்த வியாகுலப்பட்டீரே.  அந்த வியாகுலத் தைப் பார்த்து நான் இவ்வுலக சீவியத்தை சட்டை பண்ணாமல் பரலோக சீவியத்தை அடையும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ள உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

2. வியாகுல மாதாவே, நீர் ஏரோதென்பவ னுக்குப் பயந்து உமது திருக்குமாரனை எடுத்துக் கொண்டு எஜிப்து தேசத்துக்கு ஓடிப் போகிற போது நீர் மிகுந்த வியாகுலப்பட்டீரே.  அந்த வியாகுலத்தைப் பார்த்து நான் பசாசின் தந்திரங் களுக்குத் தப்பிப் பரலோக வழி தவறாமல் நடக்க உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

3. வியாகுல மாதாவே, உமது திருக்குமாரன் பன்னிரண்டு வயதில் மூன்று நாள் காணாமல் போனதால் மிகுந்த வியாகுலப்பட்டீரே.  அந்த வியாகுலத்தைப் பார்த்து நான் பாவத்தினால் அவரை இழந்து போகாதபடிக்கு உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

4. வியாகுல மாதாவே, உமது திருக்குமாரன் பாரமான சிலுவையைச் சுமந்து போகிறதைக் கண்டு நீர் மிகுந்த வியாகுலப்பட்டீரே.  அந்த வியாகுலத்தைப் பார்த்து, பாவத்தினால் எனக்கு வருகிற கஸ்திகளை இம்மையில் நான் பொறுமை யோடு சகிக்கவும் மறுமையில் ஈடேற்றம் அடையவும் உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

5. வியாகுல மாதாவே, உமது திருக்குமாரன் எண்ணிக்கையில்லாத கஸ்தி வேதனைப்பட்டுச் சிலுவையிலே மரணம் அடைந்ததைக் கண்டு நீர் மிகுந்த வியாகுலப்பட்டீரே. அந்த வியாகுலத்தைப் பார்த்து அவருடைய திருப்பாடுகளையும் வேதனை களையும் நான் நினைத்து நல்ல மரணமடைய உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

6. வியாகுல மாதாவே, உமது திருக்குமார னுடைய திருச்சரீரத்தை உமது திருக்கரங்களில் வளர்த்தி அதைக்கட்டி மினவிக் கொண்டபோது மிகுந்த வியாகுலப்பட்டீரே, அந்த வியாகுலத் தைப் பார்த்து அவருடைய மரண நினைவு என்னிருதயத்தில் பதிந்திருக்கவும், நான் என் பாவங்களுக்காக எப்போதும் கண்ணீர் சொரிந்து அழவும் உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

7. வியாகுல மாதாவே, உமது திருக்குமார னுடைய திருச்சரீரத்தைக் கல்லறையில் அடக்கின பிற்பாடு நீர் மிகுந்த வியாகுலப்பட்டீரே, அந்த வியாகுலத்தைப் பார்த்து நான் ஒருபோதும் சர்வேசுரனை விட்டுப் பிரிந்து தனிமையாயிராத படிக்கு உம்மை மன்றாடுகிறேன்.  அருள்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங் களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, மிகவும் வியாகுலமுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவே, தேவரீர் பாடுபடும் வேளையில் உமது திருமாதாவின் ஆத்துமம் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டதே.  அந்தத் தாயாராகிய பரிசுத்த கன்னிமரியம்மாள் எப்போதும் எங்கள் மரணநேரத்திலும் உமது இரக்கத்தினிடமாக எங்களுக்காக மனுப்பேசும்படி அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.  பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலம் சீவியராய் இராச்சிய பரிபாலனம் செய்துவரும் உலக இரட்சகராகிய சேசுக்கிறீஸ்துவே, இந்த மன்றாட்டை எங்க ளுக்குத் தந்தருளும். 

ஆமென். 

(300 நாள் பலன்.)