துவக்குகிற வகையாவது
அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற சர்வேசுரா சுவாமி! நீச மனுருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள், மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலே இருந்து ஜெபம் பண்ண பாத்திரம் ஆகாதவர்களாயிருந்தாலும் தேவரீருடைய அளவில்லாத தயையை நம்பிக்கொண்டு தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும், அர்ச்சியசிஷ்ட தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணி ஜெபம் பண்ண ஆசையாயிருக்கிறோம்; இந்தச் செபத்தைப் பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி.
சகலமான புண்ணியங்களுக்கும் விசுவாசமென்கிற புண்ணியம் அஸ்திவாரமா யிருக்கிறபடியினாலே முந்த முந்த விசுவாச மந்திரம் சொல்லுகிறது. (விசுவாச மந்திரம்)
மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதர் சுவாமி படிப்பித்த பரலோக மந்திரம் சொல்லுகிறது. பர...
பரிசுத்த கன்னியாஸ்திரீயாயிருக்கிற தேவமாதாவினுடைய பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று பிரதான புண்ணியங்களைக் கேட்கிற வகையாவது:
பிதாவாகிய சர்வேசுரனுக்குக் குமாரத்தியாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ விசுவாசம் என்கிற புண்ணியம் உண்டாகிப் பலன் அளிக்கும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். அருள்...
சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாராயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலேதேவ நம்பிக்கை என்கிற புண்ணியம் உண்டாகி வளரும்படிக்கு உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். அருள்...
இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ளவர்களாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ சிநேகம் என்கிற புண்ணியமுண்டாகி அதிகரிக்கும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். அருள். பிதாவுக்கும்...
ஜெபமாலைத் தேவ இரகசியங்கள்
சந்தோஷ தேவ இரகசியங்கள்
1 வது கபிரியேல் சம்மனசு தேவமாதாவுக்கு மங்களவார்த்தை சொன்னதைத் தியானித்து தாழ்ச்சி என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக.
2 வது தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்தித்து வாழ்த்தியதை தியானித்து உத்தம பிறர்சிநேகம் என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக.
3 வது கர்த்தர் பிறந்ததைத் தியானித்து மனத் தரித்திரம் என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக.
4 வது சேசுநாதர்சுவாமி கோவிலில் காணிக்கை யாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை தியானித்து கீழ்ப் படிதல் என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக.
5 வது பன்னிரண்டு வயதில் காணாமல்போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டு களிகூர்ந்ததை தியானித்து சர்வேசுரனுடைய சித்தத்தைத் தேடும் வரத்தைக் கேட்போமாக.
துக்க தேவ இரகசியங்கள்
1 வது சேசுநாதர் சுவாமி பூங்காவனத்தில் இரத்த வேர்வை வேர்த்ததைத் தியானித்து சர்வேசுரனுடைய சித்தத்துக்கு அமைந்து நடக்கும் வரத்தைக் கேட்போமாக.
2 வது சேசுநாதர் சுவாமி கற்றூணில் கட்டுண்டு அடிபட்டதை தியானித்து சகலத்திலும் பரித்தியாகம் செய்யும் வரத்தைக் கேட்போமாக.
3 வது சேசுநாதர்சுவாமி திருச்சிரசில் முள்முடி சூட்டப்பட்டதை தியானித்து நிந்தை அவமானங்களைப் பொறுமையுடன் சகிக்கும் வரத்தைக் கேட்போமாக.
4 வது சேசுநாதர்சுவாமி சிலுவை சுமந்து கொண்டு போனதை தியானித்து நீடித்த பொறுமை என்கிற வரத்தைக் கேட்போமாக.
5 வது சேசுநாதர்சுவாமி சிலுவையில் அறையப் பட்டு மரித்ததைத் தியானித்து, உத்தம மனஸ்தாப வரத்தைக் கேட்போமாக.
மகிமை தேவ இரகசியங்கள்
1 வது சேசுநாதர்சுவாமி உயிர்த்தெழுந்ததைத் தியானித்து தேவ விசுவாசம் என்கிற புண்ணியத் தைக் கேட்போமாக.
2 வது சேசுநாதர்சுவாமி பரலோகத்துக்கு ஆரோகணமானதைத் தியானித்து தேவ நம்பிக்கை என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக.
3 வது தேவமாதாவின்பேரிலும், அப்போஸ்தலர்கள்பேரிலும், இஸ்பிரீத்துசாந்துவானவர் எழுந்தருளி வந்ததை தியானித்து உத்தம தேவ சிநேகத்தைக் கேட்போமாக.
4 வது தேவமாதா தமது ஆத்தும சரீரத்தோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை தியானித்து பரிசுத்த கற்பு என்கிற புண்ணி யத்தைக் கேட்போமாக.
5 வது தேவமாதா பரலோக பூலோக இராக்கினியாக அர்ச்சியசிஷ்ட தமத்திரித்துவத்தினால் முடிசூட்டப்பட்டதை தியானித்து மாதாவுக்கு நம்மை முழுவதும் அர்ப்பணிக்கும் வரத்தைக் கேட்போமாக.
ஒவ்வொரு 10 மணி முடிவிலும் சொல்ல வேண்டிய ஜெபம்
ஓ! என் சேசுவே, என் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். சகல ஆத்துமங்களையும் விசேமாய் யார் அதிக தேவையிலிருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும்.
முடிக்கிற வகையாவது
அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேலே, தேவதூதர்களான அர்ச்சியசிஷ்ட கபிரியேலே, இரபேலே, அப்போஸ்தலர்களான அர்ச்சியசிஷ்ட இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே, நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணிச் செபத்தையும் உங்கள் தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி அர்ச்சியசிஷ்ட தேவமாதாவின் திருப்பாதத்திலே பாதகாணிக்கையாக வைக்க உங்களைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.
ஜெபமாலை ஒப்புக்கொடுத்தல்
பாப்பரசருடைய சுகிர்த கருத்துக்களுக்காகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற்காகவும், நம் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், சேசு, மரிய இருதயங்களுக்கு நிந்தைப் பரிகாரமாகவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காகவும் இந்த ஜெபமாலையை ஒப்புக்கொடுத்து வேண்டிக்கொள்வோம். 1 பர. 1 அருள். 1 திரி.
ஆமென்.