(குறிப்பு: ... புள்ளியிட்ட இடங்களில் சற்று நேரம் நிறுத்தி மனதில் தியானிக்க வேண்டும்.)
சேசுநாதர்: ஆத்துமமே, நீ நமக்குப் பிரியப் படத்தக்கதாக அநேக காரியங்களை அறிந்திருப்பது அவசரமல்ல. நம்மை உருக்கமாய்ச் சிநேகிப்பதே போதும். உன் பிரிய சிநேகிதனோடு சம்பாஷிப்பதுபோல இப்போது நம்மோடு பேசுவாயாக. யாரைப் பற்றியாவது நம்மிடத்தில் மனுப் பேச வேண்டியதுண்டா? உன் உற்றார் உறவின் முறையார் சகோதரர் சகோதரிகளுடைய பேரென்ன?...
அவர்களில் ஒவ்வொருவருக்கும் நாம் என்ன செய்ய வேண்டுமென்கிறாய்?...
அவர்களுக்கு வேண்டிய காரியங்களையயல்லாம் நம்மிடத்தில் கேள். ஏனென்றால் தங்கள் சுயநலத்தை மறந்து புறத்தியாருடைய நன்மையை நாடியிருக்கிற தயாள சற்குணமுள்ள ஆத்துமங்கள் நமக்கு மிகவும் பிரியம்...
எந்த ஏழைக்கு நாம் இரக்கஞ் செய்ய வேணுமென்கிறாய்? அங்கே ஒரு வியாதியஸ்தன் மிகவுந் துன்பப்படுகிறதாக நீ பார்த்தாயே. அவனார்? எந்தப் பாவி மனந் திரும்ப வேணுமென்று கேட்கிறாய்? ...
யாரோடே இப்போது நீ சமாதானமாய்ப் போக வேணுமென்கிறாய்? அவர்களுக்காக இப்போது சற்று நேரம் பக்தியோடு வேண்டிக்கொள்...
இருதயப் பற்றுதலோடே செபிக்கப்படும் செபங்களையெல்லாம் கேட்டருளுவோமென்று நாம் வாக்குறுதியாகத் திருவுளம்பற்றியிருக்கிறோமே. அப்படியே சிநேகிதர் ஒருவரொருவருக்காக ஒப்புக்கொடுக்கிற செபம் இருதய உருக்கம் அமைந்த செபம் அல்லவா? இதற்கு நாம் இரங்காதிருப்போமா? உனக்காக ஏதாவது நன்மை வரப்பிரசாதம் நீ கேட்க வேண்டியதில்லையா? ...
உனக்குப் பிரியமானால் உன் ஆத்துமத்திலுள்ள குறைகளையயல்லாம் எழுதிக் கொண்டு வந்து நமது சமூகத்தில் வாசித்துக் காட்டு ...
ஆசாபாசம், அகந்தை, பொருளாசை, சுயபட்சம், கோழைத் தனம், சோம்பல் முதலிய துர்க்குணங்கள் மட்டில் நீ எவ்வளவு மனசார்புள்ளவனாய் இருக்கிறாய்?...
இந்தத் துர்க்குணங்களையயல்லாம் நீ ஜெயிக்கத் தக்கதாக, நாம் உன்னிடத்தில் எழுந்தருளி வந்து உனக்கு உதவி செய்ய வேணுமென்று மன்றாடக் கடவாய். நிர்ப்பாக்கியமான ஆத்துமமே வெட்கப்படாதே! ஏனென்றால் முதலில் இப்பேர்ப்பட்ட துர்க்குணங்களுக்குள்ளாயிருந்த அநேகர் உருக்கமாய் மன்றாடிக் கேட்டுக்கொண்டபடியால், நமது உதவியைக் கொண்டு அவர்கள் அந்தக் குற்றங்களைக் கொஞ்சங்கொஞ்சமாய் ஜெயித்து ஜெயசீலராகி, இப்போது முத்தி முடிதரித்த அர்ச்சியசிஷ்டவர்களாக மோட்ச இராச்சியத்தில் வீற்றிருக்கிறார்கள்.
புத்தி, ஞாபகம், தேர்ச்சி, உடல் நலம் முதலிய பிரபஞ்ச நன்மைகளையும் நம்மிடத்தில் கேட்க நீ கூச்சப்படாதே. அவை களை எல்லாம் நாம் கொடுக்கச் சித்தமாயிருக்கிறோம். அவைகளால் உன் ஆத்துமம் அதிக பரிசுத்தமாகக் கூடுமானால் அவைகளை உனக்குக் கட்டளையிட்டருளுவோம்.
ஆத்துமமே இன்றைக்கு உனக்கு என்னென்ன வேணும்? உனக்கு நன்மை செய்ய நாம் எவ்வளவோ ஆசைப் படுகிறோம்!
உனக்கு ஓயாத கவலையை உண்டுபண்ணு கிற அலுவல் ஏதாவது உண்டா? அதை நமக்கு விவரமாய்ச் சொல் ...
அந்த அலுவலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? ...
அதில் என்னென்ன பிரயோசனம் வருமென்று நம்பி இருக்கிறாய்? உன் உற்றார், உறவினர், முறையார், பெற்றோர், பெரியோருக்குப் பிரியப்படுகிறதற்காக எதைச் செய்கிறாய்? அதனால் அவர்களுக்கு என்ன நன்மை செய்யலாமென்று எண்ணியிருக்கிறாய்?
நமக்காக நீ ஏதாகிலும் செய்ய மாட்டாயா? உன் உறவின் முறையார் சிநேகிதர் நம்மை மறந்து போகிறார்களே! அவர்களுடைய ஆத்துமங்களுக்கு வேண்டிய நன்மை செய்ய உனக்கு மனதில்லையா? எந்த விஷயத்தில் அதிக அக்கறையாய் அல்லது கரிசனத்தோடு உழைத்து வேலை செய்கிறாய்? எந்தெந்த முகாந்தரத்தைப் பற்றி நீ அதிலே ஓயாத சிந்தனையாயிருக்கிறாய்? அதற்காக நீ பிரயோகித்துக் கொள்ள நினைக்கும் உபாயங்கள் என்ன?
உனது சுக துக்கங்களையும் சலிப்புச் சஞ்சலங்களையும் நமக்குச் சொல்லிக் காட்டு. அவற்றின் காரணத்தை உனக்கு விளக்கிக் காண்பிப்போம். உன் ஏற்பாடு பிரயத்தனங்களில் யாருடைய உதவியை நீ கோரியிருக்கிறாய்? சகல இருதயங்களுக்கும் எஜமான் நாம் அல்லவா? நமது இஷ்டம் போல் அவைகளை படிப்படியாய் இளக்கி வசப்படுத்துவோம். உன் கோரிக்கை பிரயத்தனங்களுக்கு உதவியானவர்களை உன் கிட்டக் கொண்டு வந்து விடுவோம்.
ஆத்துமமே! உனக்கு ஏதாவது தொல்லை தொந்தரவுகள் உண்டா? அதன் விபரத்தை நமக்கு வெளிப்படுத்து...
நீ ஏன் சலிப்பாய் இருக்கிறாய்? உனக்குக் கஸ்தி வருவித்தது யார்? உன்னை நிந்தித்து வேதனைப்படுத்தியதார்? உன் அகந்தையைக் குத்திக் காயப்படுத்தினது யார்? அப்படிப் பட்டவர்கள் எல்லாருக்கும் நீ பொறுத்தல் கொடுக்கிறாயென்றும் அந்தக் குறைகளை முழுவதும் மறந்து விடுவாயென்றும் உறுதியாய்ச் சொல்லி அவர்களுக்காக வேண்டிக்கொள். நாமும் உன்னை ஆசீர்வதிப்போம்.
உனக்குக் கலக்கம் வருவிக்கிற தந்திர சோதனைகள் ஏதாவது உண்டா? காரணமில்லாத பயம் சில விசை உன் இருதயத்தைக் கலங்கடிக்கிறதா?...
ஆத்துமமே பயப்படாதே. நமது பேரில் நம்பிக்கையாயிரு...
நாம் உன்னிருதயத்தில் வாசம் பண்ணுகிறோம். அங்கே நடக்கிற விசேங்களையயல்லாம் நாம் அறிந்திருக் கிறோம். நாம் உனக்கு உதவி செய்வோம். தைரியமாயிரு. உன் சிநேகிதரென்று வெறும் பேர் படைத்து குறை பேசி உனக்கு வஞ்சனை செய்கிறவர்கள் உண்டா?...
அவர்களுக்காகவும் வேண்டிக்கொள். உன் மன ஆறுதலுக்கு அவசரமாகில் அவர்கள் மனதை மாற்றி எதார்த்தவாதி களாக்குவோம்.
நமக்கு சொல்லத்தகும் சந்தோஷ விசேஷம் ஒன்றுமில்லையா? உன்னோடே நாமும் மகிழத்தக்கதாக அந்த விசேங்களை நமக்குச் சொல்லக் கூடாதா? நேற்றைய தினமுதல் உனக்கு நேரிட்ட சந்தோ விசேங்களை நமக்கு வெளிப்படுத்து. நீ நினையாத சமயத்தில் உன்னைச் சந்திக்க வந்த ஒரு சிநேகிதரால் நீ அடைந்த சந்தோமும் உனக்கிருந்த அச்சம் சலிப்புகள் நீங்கி உனக்கு உண் டான ஆறுதல் அகமகிழ்ச்சியும், சிநேக மேரையாய் உனக்குக் கிடைத்த கடிதமும் சந்திப்புச் சாமான்களால் வந்த அக்களிப்பும் இவைகளெல் லாம் நம்மாலே தான் உனக்கு அனுப்பப்பட்டன.
ஆத்துமமே! இவைகளுக்காக நீ ஏன் நன்றியறிதல் காண்பிக்கிறதில்லை? “சுவாமி, நன்றியறிந்திருக்கிறேன், உமது திருநாமம் வாழ்த்தப்படக்கடவது” என்று ஏன் சொல்லுகிறதில்லை? நன்றியறிதல் அதிகமான நன்மையை விளைவிக்குமே. உபகாரம் மறக்கப்படாதிருப்பதைக் காண்பது உபகாரிக்கு அதிக உதார குணத்தை வருவிக்கு மல்லவா?
நமக்கு நீ செய்ய விரும்பும் வாக்குத் தத்தங்கள் ஏதாவது உண்டா? உன் இருதய அந்தரங்கமெல்லாம் நமக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது. பிறரை நீ ஏய்த்துப் போட்டாலும், உன் ஆண்டவராகிய நம்மை ஏய்க்க முடியாது. ஆகையால் ஆத்துமமே! உண்மை எதார்த்தத்துடன் நமது சமூகத்தில் சஞ்சரிப்பாயாக.
அந்தப் பாவ சமயத்தை விலக்கிவிடத் தீர்மானித்திருக் கிறாயா? உன் ஆத்துமத்துக்குப் பொல்லாப்பாயிருக்கிற அந்தப் பொருளை விட்டு விடுவாயா? உன் மன ரூபிகரத்தை வீணாய்க் குழப்பிக் கொண்டிருக்கிற அந்தக் கெட்ட புத்தகத்தை இனி வாசியாமல் தள்ளிப் போடுவாயா? உன் ஆத்தும சமாதானத்துக்கு விக்கினமாயிருக்கிற இன்னின்னாருடைய சகவாசத்தை விட்டு விடுவாயா? உனக்குப் பொல்லாப்பு செய்பவர்களுக்கு எப்படித் தயை சாந்தகுணம் காண்பிக்க வேணுமென்று நம்மிடத்தில் கற்றறிந்துகொள்.
ஆத்துமமே உனக்கு ஆசீர்வாதம். இப்போது நீ போய் உன் வேலைகளைச் செய். ஒழுங்குபோல் மெளனமாயிரு. அடக்க ஒடுக்கமாயிரு. கீழ்ப் படிதல் உள்ளவனாயிரு. பிறர்நேசமுள்ளவனாயிரு. அமலோற்பவ மாதாவை அதிமிக அன்போடு நேசித்திரு. நாளைக்குத் திரும்ப வா. வரும்போது உன் இருதயம் அதிகப் பக்திப் பற்றுதல் அமைந்ததாய் இருக்கும்படி பார்த்துக்கொள்.
இனி உன்னிருதயம் நன்மையில் சார்ந்ததுமாய் நன்மை செய்ய அதிக உறுதியான தீர்மானமுள்ளது மாயிருக்க வேண்டும். நாளைக்கு சில புது வரப் பிரசாதங்களையும் நன்மைகளையும் உனக்குக் கட்டளையிடச் சித்தமாயிருக்கிறோம்.