(அர்ச்சியசிஷ்ட மார்கரீத் மரியம்மாள்)
சேசுநாதருடைய திரு இருதயத்துக்கு அடியேன் (நான்) என்னை முழுதும் கையளித்து ஒப்புக்கொடுக்கிறேன். என்னிலுள்ளதும், எனக்குள்ளதுமான சகலமும் அத்திரு இருதயத்தையே சிநேகித்து ஸ்துதித்து வணங்கும்படியாக, என்னையும் என் சீவன் உயிரையும் என் கிரியைகள் முதல் எனக்கு வரும் துன்ப வருத்தங்கள் சகலமும் அத்திரு இருதயத்துக்குப் பாதகாணிக்கையாக வைக்கிறேன். திவ்விய இருதயத்துக்கு முழுதும் சொந்தமாயிருப்பதும், அதற்கு மனத்தாங்கல் வருவிக்கக்கூடிய சகலத்தையும் என் முழு மனதோடே அருவருத்துத் தள்ளி அத்திரு இருதயத்தின் மட்டில் எனக்குள்ள சிநேகத்தை காண்பிக்கச் சகலமும் செய்வேனென்பதும் இதுவே சற்றும் மாறாத என் தீர்மானமாமே.
ஓ! மதுரமான சேசுவின் திரு இருதயமே! இனிமேலாக நீரே என் சிநேகத்துக்கெல்லாம் முற்றும் உரியவர். நீரே, என் உயிரின் ஏக காவல், எனது இரட்சண்ணியத்தின் தளராத நம்பிக்கை நீரே. நீரே என் பலவீனத்தைத் தாங்கும் அவிழ்தம். என் சீவிய நாட்களில் நான் செய்த குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. நீரே என் உயிர் பிரியும் வேளையில் எனக்கு ஸ்திரமான அடைக்கலம்.
ஓ! தயாளம் நிறைந்த சேசுவின் திரு இருதயமே! உமது பிதாவின் சமூகத்தில் நீரே எனக்காக மனுப்பேசி அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடி தடுத்தருளும். ஓ! சிநேகப் பிரளயமான சேசுவின் திரு இருதயமே! என் பலவீனத்தைப் பார்க்கையில் எனக்கு முற்றும் பயமும், உமது தயாளத்தை நினைக்கையில் எனக்கு முழு நம்பிக்கையும் வருவதினாலே என் நம்பிக்கை யாவும் உமது பேரில் வைக்கிறேன்.
ஆனதினால் உமக்குப் பிரியமற்றதும் விரோதமுமானது எதுவும் என்னிடத்தில் இருந்தால் அதை உமது சிநேக அக்கினியினால் சுட்டெரித்தருளும். நான் உம்மை என்றும் மறவாமலும் உம்மை விட்டு என்றும் பிரியாமலும் இருக்கும்படி உமது தூய சிநேகத்தை என் இருதயத்தில் பதிப்பித்தருளும். நான் உமது சொந்த அடிமையாகச் சீவிப்பதும் சாவதுமே என் சர்வ பாக்கியமாகச் செய்ய ஆசிப்பதினாலே என் பெயரை உமது திரு இருதயத்தில் எழுதி வைத்தருளுவீரென்று உமது தயாள இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறேன் சுவாமி.
ஆமென்.
(300 நாட் பலன்).