எங்களுக்காக மனிதனாய்ப் பிறந்து, எங்கள் மேல் வைத்த அன்பினால் சிலுவையில் அறையுண்டு உயிர்விட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
எங்களுடைய பாவச்சுமையை தேவரீர் சுமந்து, அதன் கனத்தால் தேவரீருடைய இருதயம் நைந்து, மரணமட்டும் துக்கமாய் உம்முடைய சரீரம் இரத்த வியர்வையில் தோய்ந்து, ஜெத்சமனித் தோட்டத்தில் கடின அவஸ்தைப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
பூங்காவனத்தில் மிகுந்த துக்கப்பட்டு ”பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கடவது” என்று பிதாவை வேண்டிக்கொண்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
உம்முடைய அப்போஸ்தலர்களால் கைவிடப்பட்டு, முத்தமிட்ட துரோகியாகிய யூதாஸ் என்பவனால் யூதருக்குக் கையளிக்கப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சங்கிலிகளாலும், கயிறுகளாலும் கட்டப்பட்டு வழியில் தேவ தூஷனை சொல்லி அடிக்கப்பட்டு ஒரு குற்றவாளி போல நீசமான மரணத் தீர்ப்புப்பெற இழுத்துக்கொண்டு போகப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
அன்னாஸ், கைப்பாஸ், பிலாத்து, ஏரோது இவர்கள் முன்னால் அவமானமாய் கொண்டுபோய் நிறுத்தப்பட்டு, அநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு, கன்னத்தில் அறையப்பட்டு, நிந்திக்கப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
திருமுகம் மூடப்பட்டவருமாய், சட்டைகள் கழற்றப்பட்டவருமாய், கற்றூணில் கட்டுண்டு மிகுந்த நிஷ்டூரத்தோடு அடிக்கப்பட்ட இயேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
முள்முடி தரிக்கப்பட்டு, திருமுகத்தில் துப்பப்பட்டு, திருச்சிரசில் மூங்கிற்றடியினால் அடிக்கப்பட்டு, ஓர் பரிகாச இராஜாவாக அவமானப்படுத்தி நிந்திக்கப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
உம்முடைய திருச்சரீரமெல்லாம் அடிகளால் கிழிக்கப்பட்டு, திருஇரத்தம் வெள்ளமாய் ஓட, யூதர்களுடைய கோபம் தீரும்படியாய் பிலாத்து என்பவனால்”இதோ மனிதன்” என்று யூதர்களுக்குக் காட்டப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
தேவரீர் அவர்களுக்கு எண்ணிறந்த நன்மைகளைச் செய்திருந்தும், இருதயம் வெடிக்கும்படி தேவரீருடைய திருச்சரீரம் கிழியுண்டிருந்ததைக் கண்டும், உம்மை விட்டுக் கொலைகாரனான பரபாசைத் தெரிந்துகொண்டதைப் பார்த்தும் அதிக துயரமடைந்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பு பெற்ற சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
நிந்தையும் அவமானமுமான சிலுவையைச் சுமந்து மிகவும் சாதுள்ள ஓர் செம்மறிப் புருவையைக் கொலைக்களத்துக்கு இழுத்துக் கொண்டு போகிறதுபோல கொண்டு போகப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
அகோர வேதனையினாலும், தேகத்தில் இரத்தமெல்லாம் குன்றிப்போனபடியாலும், சிலுவையின் பாரத்தால் அநேகதரம் கீழே விழுந்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவையைச் சுமந்து செல்லும் பாதையில், தேவரீருடைய பரிசுத்த வியாகுல மாதாவை சந்தித்துப் பொறுக்க முடியாத கஸ்தியும், உருக்கமும் அனுபவித்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவையை சுமந்து கொண்டு போகத் தேவரீருக்கு உதவி செய்த சீரேன் நகர சீமோனின் இருதயத்தை தேவசிநேக அக்கினியால் மூட்டி எரியப்பண்ணின சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
வேற்றுருவாயிருந்த தேவரீருடைய திருமுகத்தை வெரோணிக்கம்மாள் துடைத்தபொழுது, அந்தத் துகிலிலே உம்முடைய திருமுகம் அற்புதமாய் பதியச் செய்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவையைச் சுமந்துகொண்டு போகையில் உம்மைப் பார்த்து அழுதப் பரிசுத்தப் பெண்களுக்கு ஆறுதல் சொன்ன சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
உம்முடைய காயங்களோடே ஒட்டியிருந்த ஆடைகள் உரியப்பட்டதினாலே அகோர வேதனையும் மானபங்கமும் அனுபவித்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
திருப்பாதங்கள் கொடூர இரும்பாணிகளாலே துளைத்து அறையுண்டு, இரு கள்வர் நடுவில் சிலுவையில் உயர்த்தப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவையில் தேவரீர் அனுபவித்த கடைசி மரண அவஸ்தை நேரத்தில் எங்கள் மேல் கொண்ட இரக்கத்தால் உம்முடைய திருமாதாவை எங்களுக்குத் தாயாகக் கையளித்து, அவருடைய தயாளமுள்ள மாதாவுக்குரிய அன்புக்கு எங்களை ஒப்புக்கொடுத்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
தேவரீரோடு சிலுவையிலே அறையுண்டு பச்சாதாபக் கள்ளனுக்கு மோட்ச இராச்சியத்தை அன்றே வாக்களித்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
தேவரீருடைய துக்க சாகரத்தில் உம்முடைய பரமபிதாவினால் கைவிடப்பட்டு, உம்முடைய தாகத்துக்கு மனிதர் கசப்பான காடியைக் கொடுக்க, அந்நேரத்தில் எவ்வித ஆறுதலும் இன்றித் தவித்த சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
சிலுவையில் மரித்த எங்களுடைய பாவப் பொறுத்தலுக்காக தேவரீருடைய உயிரைப் பரமபிதாவுக்குப் பலியாக்கின சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
எங்கள் மேல் சொரிந்த தேவசிநேகத்தினாலே உம்முடைய உயிரை எங்களுக்கு பலியாக்கின பின்னும், உயிரற்ற உமது திரு இருதயம் ஈட்டியால் குத்தப்பட்டுக் கடைசித்துளி இரத்தமும், தண்ணீரும் சிந்திய சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
தேவரீருடைய திருச்சரீரம் சிலுவையினின்று இறக்கப்பட்டு வியாகுலம் நிறைந்த உம்முடைய திருமாதாவின் மடியில் வளர்த்தப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
தேவரீருடைய திருச்சரீரமானது பரிமளத் தைலத்ததால் பூசப்பட்டு, பரிசுத்த கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட சேசுவே, எங்கள்பேரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
செபிப்போமாக.
மதுரமான சேசுவே! தேவரீருடைய பரிசுத்த பாடுகளினாலும், சிலுவை மரணத்தினாலும், திருக்காயங்களினாலும், திரு இரத்தத்தினாலும் எங்களைச் சடுதி மரணத்தினின்றும், நிர்ப்பாக்கிய சாவினின்றும் காப்பாற்றி, பாவத்தினின்றும், நித்திய நரகத்தினின்றும் இரட்சித்து, என்றென்றும் உமது திரு இருதயத்திற்குள் எங்களை வைத்துக் காப்பாற்றியருளும் சுவாமி.
ஆமென்.
ஆமென்.