ஓ மகாப் பெரிய அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே! கன்னியான வேதசாட்சியே! எங்கள் காலங்களின் புதுமை வரத்தியே! எனக்கு ஆத்தும சரீர தூய்மையையும் இருதயமான பரிசுத்தத்தையும் நினைவிலும், நேசத்திலும் புனிதத்தையும் பெற்றுத் தாரும். மிகுதியான வேதனைகளின் நடுவில் நீர் அனுசரித்த பொறுமையினால், கடவுள் எனக்குச் சித்தங்கொள்ளும். சகல துன்பங்களையும் பணிவுடன் ஏற்றுக் கொள்ளும் வரத்தை எனக்கு அடைந்து தாரும். உம்மை வதைத்தவனின் கட்டளையால் நீர் எறியப்பட்ட தைபர் நதி நீரிலிருந்து நீர் இரட்சிக்கப்பட்டது போல, நாங்கள் ஆத்தும சேதமின்றி தப்ப உதவி புரியும். இந்த உபகாரங்களுடன், ஓ சேசுவின் பிரமாணிக்கமுள்ள பத்தினியே! நான் ஆர்வத்துடன் இப்போது உம்மிடம் எடுத்துக் கூறும் வேண்டுதலையும் கேட்டருளும்படி மன்றாடுகிறேன்.
தூய்மையுள்ள கன்னிகையே, பரிசுத்த வேதசாட்சியே, மோட்சத்திலிருந்து ஒரு இரக்கப் பார்வையை உம் பிரமாணிக்கமுள்ள ஊழியன் மீது பொழிவீராக. என் துயரத்தில் எனக்கு ஆறுதலாயிருப்பீராக. ஆபத்தில் என்னைக் காப்பாற்றும். எதற்கும் மேலாக என் மரண வேளையில் எனக்கு உதவியாக வாரும். கடவுளுடைய திருச்சபையின் காரியங்களைக் கருத்தாய்க் காத்தருள்வீராக! அதன் உயர்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் மன்றாடும். விசுவாசம் விரிந்து பரவும்படியாகவும் பாப்பரசருக்காகவும் தேவ ஊழியர்களுக்காகவும், நீதிமான்கள் நீடித்து நிலைக்கும்படியாகவும், பாவிகள் மனந்திரும்பவும் உத்தரிக்கிற ஆன்மாக்கள் விசேமாய் நான் நேசிக்கிறவர்கள் ஆறுதல் பெறவும் வேண்டிக் கொள்ளும். ஓ பெரிய அர்ச்சியசிஷ்டவளே! உம்முடைய வெற்றியை பூமியில் நாங்கள் கொண்டாடுகிறோம். உமக்கு மோட்சத்தில் சூட்டப்பட்ட மகிமையின் மகுடத்தை நான் ஒருநாள் தரிசிக்க எனக்குத் தயைபுரிவீராக. சர்வேசுரன் தம்முடைய அன்பிற்காக இக்குறுகிய வாழ்வில் அனுபவிக்கப்படும் வேதனைகளை நித்திய வெகுமானத்தால் தாராளமாய் சன்மானிக்கிறாரே. அவரை முடிவில்லாமல் நான் மோட்சத்தில் வாழ்த்தும்படி எனக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆமென்.