ஓ, ஏக சர்வேசுரனாகிய மகா பரிசுத்த தமத் திரித்துவமே, எங்கள் ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துநாதரால் கடைசி இராப்போஜனத்தின் போதும், திருச்சிலுவையாகிற பலிபீடத்தின்மீதும் ஒப்புக்கொடுக்கப்பட்ட மிகவுன்னத திவ்ய பலியோடும், இந்நாள் வரை உலகெங்கும் ஒப்புக் கொடுக்கப்பட்டவையும், இனி ஒப்புக்கொடுக்கப் படப் போகிறவையுமான சகல பூசைப்பலிகளோடும் ஒன்றித்து, இப்போது உமது தகுதியற்ற ஊழியனாகிய அடியேன், உமது பரிசுத்த ஊழியராகிய குருவின் கரங்களால் தேவரீருக்கு ஒப்புக் கொடுக்க விரும்புகிற எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதரின் திருச்சரீரம் திரு இரத்தம் ஆகியவற்றின் இந்த பரிசுத்த பலியை ஏற்றுக்கொள்ளத் தயை செய்வீராக. இப்பலியை அடியேன் ஆழ்ந்த பக்திப்பற்றுதலோடும், உமது எல்லையற்ற நன்மைத் தனத்தின் மட்டில் பரிசுத்த நேசத்தோடும், எங்கள் ஆண்டவராகிய அதே கிறீஸ்துநாதருடை யவும், எங்கள் பரிசுத்த தாயான திருச்சபை யினுடையவும் பரிசுத்த கருத்துக்களோடும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
ஓ சர்வ வல்லவரும், தயையுள்ளவருமான சர்வேசுரா, இந்தப் பரிசுத்த பலியின் வழியாக எங்களுக்கு சந்தோஷத்தையும், சமாதானத்தையும், இன்னும் அதிக பரிசுத்தமான ஒரு ஜீவியத்தையும், எங்கள் பாவங்களுக்கு முழுமையாகப் பரிகாரம் செய்வதற்குப் போதுமான காலத்தையும், வரப்பிரசாதத்தையும், உம் திவ்ய இஸ்பிரீத்து சாந்துவின் ஆறுதலையும், நற்கிரியைகளில் நிலைமை வரத்தையும் தந்தருள்வீராக.
ஆமென்.