என் சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சேசுவே! மெய்யான தேவனும் மெய்யான மனிதனுமாகிய ஆண்டவரே, என் முழு இருதயத்தோடே தேவரீரைச் சிநேகித்து வணங்கி ஆராதிக்கிறேன். திருப்பீடத்தில் மறைந்து வசிக்கும் தேவனாகிய உமக்கு விரோதமாய் நான் நன்றி நாணமின்றிக் கட்டிக் கொண்ட தோஷ துரோக அநாச்சாரங்களுக்கு உத்தரிப்புப் பலியாகவும் மற்றும் மனுக்குலத்தோரால் செய்யப்பட்டதும், இனி செய்யப்படுவதுமாகிய பாவ அக்கிரமங்களுக்குப் பரிகாரமாகவும், அடியேனுடைய ஆராதனை வணக்கத் தோத்திரங்களைக் கையேற்றுக் கொள்ள கிருபை புரிந்தருளும். தேவரீருக்கு அடியேன் செலுத்த வேண்டிய ஆராதனை வணக்கத் தோத்திரங்களை உமது மகிமைப் பிரதாபத்துக்கு யோக்கியமான பிரகாரமாய் நான் செய்யக் கூடாதிருந்தாலும், என்னாலியன்ற தாழ்ச்சி நேசப் பற்றுதலோடே அவைகளை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
இதன்றியே புத்தியுடைத்தான ஜீவ ஜந்துக்களின் இருதய கமலங்களில் எவ்வளவான சிநேகப் பெருக்கம் அடங்கக் கூடுமோ அவ்வளவான பூரண அன்பு ஐக்கியத்தோடே தேவரீரை சிநேகிக்க ஆசைப்படுகிறேன். தேவரீரை அறியாமலும் சிநேகித்து சேவியாமலுமிருக்கிற கத்தோலிக்க கிறீஸ்தவர்களுடைய குற்றங்குறைகளைப் பரிகரிக்கவும் பாவிகள், பதிதர், பிரிவினைக்காரர், யூதர், நாஸ்தீகர், தேவதூஷணிகள், மந்திரவாதிகள் முதலிய அவிசுவாசிகள் எல்லோரும் மனந்திரும்பி வரவும் நான் ஆசைப்படுகிறேன். என் நேச சேசுவே! தேவரீருடைய தெய்வீகம் இப்பூலோகமெங்கும் பிரபலியமாய் ஆராதிக்கப்படவும், திவ்விய சற்பிரசாதத்தில் தேவரீருக்கு இடைவிடாத தோத்திரம் செலுத்தப்படவும் கடவதாக.
ஆமென்.
(200 நாட் பலன்).