நீ நன்மை வாங்குகிறதற்கு முன் ஆத்தும ஒறுத்தல், சரீர ஒறுத்தல் செய். நல்ல விதமாக சுவாமியை உட்கொள்ளும்படிக்கு அவர் தாமே உன் இருதயத்தைச் சுத்தம் செய்து தேவ வரப் பிரசாதங்களினால் உன் ஆத்துமத்தை அலங்கரிக்க வேண்டுமென்று மன்றாடு. தேவமாதாவையும், காவலான சம்மனசையும், நீ பக்தி வைத்திருக்கும் அர்ச்சியசிஷ்டவர்களையும் வேண்டிக்கொள்.
தேவ நற்கருணை வாங்குகிறபொழுது அந்த அர்ச்சியசிஷ்டவர்களுக்கு இருந்த பக்தி உனக்கும் வர உதவி செய்ய வேண்டுமென்று மன்றாடு. அந்த நினைவோடு நித்திரை செய்து விழித்தவுடனே உன்னிடத்தில் சேசுநாதர் சுவாமி எழுந்தருளி வரப் போகிறாரென்றும், அதனால் உனக்கு எத்தனை பாக்கியமும் நன்மையும் வருகிறதென்றும் நினைத்து அந்த நினைவோடு கோவிலுக்கு பயபக்தியுடன் சென்று விசுவாசம், ஆராதனை, நம்பிக்கை, தேவ சிநேக முயற்சிகளைச் செய்வாயாக.
பின்பு நன்மை வாங்கும் தருணத்தில் நீ எழுந்திருந்து கிராதிக்குச் சமீபத்தில் அடக்கவொடுக்க வணக்கத்துடனே போய் முழங்காலிலேயிருந்து குரு தேவ நற்கருணையைத் தம்முடைய கையில் எடுத்துக்கொண்டு ஒரு செபத்தை மூன்று விசை சொல்லும்போது நீயும், சுவாமி உனக்காகப் பட்ட பாடுகளைத் தியானித்துக் கொண்டு, “இதோ உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே, ஆண்டவரே! என்னிடம் தேவரீர் எழுந்தருளி வர நான் பேறுபெற்றவன் அல்ல; தேவரீர் ஒரு வார்த்தை மாத்திரம் திருவுளம்பற்ற என் ஆத்துமம் ஆரோக்கியம் அடையும்” என்று அவரோடு நீயும் மூன்று விசை சொல்லி வெகு வணக்கத்தோடும், இருதய நேசத்தோடும், சற்பிரசாதத்தை உட்கொண்டு, வெகு மேரை மரியாதையோடும், தாழ்ச்சி பக்தியோடும் அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்து, முன்னிருந்த இடத்துக்குத் திரும்பி தாழ்ச்சி, பயம், நம்பிக்கை முதலிய முயற்சிகளைச் செய்யக் கடவாய்.
அந்த நாளில் மற்ற நாளைப் பார்க்கிலும் அதிக ஒடுக்க வணக்கமாயிருந்து ஞான புஸ்தகங்களை வாசித்து, சாயங்காலம் கோவிலுக்குப் போய் தேவ நற்கருணையைச் சந்தித்து வணங்கி மீண்டும் தாழ்ச்சி, சிநேகம் முதலான முயற்சிகளைச் செய்யக் கடவாய்.