(திருநாள் : ஆகஸ்டு 11)
இக்கன்னியின் சிறப்பு
கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். பிலோமினம்மாளின் பூசிதமான அருளிக்கங்கள் உரோமை சுரங்கக் கல்லறைக்குள் 1500 ஆண்டுகள் மறைவிற்குப்பின், 1802-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி கிறீஸ்தவர்களின் சகாயமாதா திருநாளன்று கண்டெடுக்கப்பட்டன. 35 ஆண்டுகள் கழித்து இந்தக் கிரேக்க அரச குமாரி அர்ச்சியசிஷ்ட பட்டமளிக்கப்பட்டு பீட வணக்கத்திற்கு உயர்த்தப்பட்டாள். 19-ம் நூற்றாண்டின் புதுமை வரத்தி என்று போற்றப்பட்டாள். அத்தனைக்கதிக பிரபலமான புதுமைகள் அவளுடைய வல்லமை யுள்ள மன்றாட்டினால் நடந்தன. உலகமெங்கும் அவளுடைய மகிமைக்காக சேத்திரங்களும் பீடங்களும் நினைவாலயங்களும் எழுப்பப்பட்டன. அர்ச். பிலோமினம்மாள் கடவுளிடம் வல்லமை பெற்றிருக்கிறாள்.
தனிச் சிறப்பு
நம்முடைய இந்த அல்லது அந்த தேவைகளில் நமக்கு உதவும்படி மற்ற அர்ச்சியசிஷ்டவர்களுக்கு அருளப்பட்டிருந்தால் அர்ச். பிலோமினம்மாளுக்கு நம் எல்லாத் தேவைகளிலும் உதவி செய்ய வரம் அருளப்பட்டது. ஞான உதவிகளையும் இலெளகீக உதவிகளையும் அவள் செய்கிறாள். பெரும் நம்பிக்கையுடனும் அன்புடனும் விசுவாசத்துடனும் நாம் அவளை அணுகிச் செல்வோமாக! அவள் சேசுவுக்கும், மாதாவுக்கும் பிரியமுள்ள மகளாயிருக்கிறாள். அவளுக்கு எதுவும் மறுக்கப்படுவதில்லை.
“என் பிள்ளைகளே! அர்ச். பிலோமினம்மாள் கடவுளிடம் பெரும் வல்லமை படைத்திருக்கிறாள். அவள் வீர வைராக்கியமான வேதசாட்சியத்தை ஏற்றுக்கொண்டதில் அவளிடம் விளங்கிய கன்னிமையாலும் தாராள குணத்தாலும் எந்த அளவிற்கு அவள் கடவுளுக்குப் பிரியப்பட்டாளென்றால், நமக்காக அவரிடம் அவள் எதைக் கேட்டாலும் கடவுள் அதை மறுக்க மாட்டார்” என்றுரைக் கிறார் அர்ச். வியான்னி அருளப்பர் (கூரேதார்ஸ்).
பாப்பரசர் 13-ம் சிங்கராயர் அர்ச். பிலோமினம்மாளை “மகா பெரிய அர்ச்சியசிஷ்டவள்” என்று கூறுகிறார்.
முத்திப்பேறு பெற்ற பவுலின் ஜாரிக்கோ “பிலோமினம்மாள் என்னும் இப்பெரிய அர்ச்சியசிஷ்டவளிடம் முழு நம்பிக்கை வையுங்கள். நீங்கள் கேட்பதையெல்லாம் அவள் பெற்றுத் தருவாள்” என்கிறாள்.
ஒரு பேயோட்டும் சடங்கில் பசாசுக்கள் இவ்வாறு கூறியுள்ளன: “எங்களுடைய சபிக்கப்பட்ட எதிரி இப்பெரிய கன்னி வேதசாட்சியான அர்ச். பிலோமினாதான். அவள்மேல் ஏற்பட்டு வருகிற பக்தி நரகத்திற்கே ஒரு பயங்கரப் புதுப் போராட்டமாயிருக்கிறது.”
பிலோமினம்மாளுக்கு எதுவும் மறுக்கப்படுவதில்லை. (பரிசுத்த மரியன்னை)