அர்ச்சியசிஷ்ட அவிலா தெரேசம்மாளுக்கு ஜெபம்

(திருநாள் : அக்டோபர் 15)

பூலோகத்திலே பேரின்ப தியானத்தின் சந்தோஷத்தைக் கொண்ட அர்ச்சியசிஷ்ட அவிலா தெரேசம்மாளே! உலக அநித்திய வஸ்துக்கள் எல்லாவற்றையும் முற்றும் வெறுத்துப் பூரண விசுவாசத்தோடும், அனலுள்ள தேவ சிநேகத்தோடும் பதினெட்டு வருஷ காலம் முள்ளடர்ந்த காடுகளிலேயும், சறுக்கலுள்ள கணவாய்களிலேயும் தேவனைத் தேடினதுபோல, வறட்சியிலும், கடுமையிலும் அவரைத் தேடிக் கண்டடைந்து ஆனந்தப் பரவசத்தில் உயர்ந்திருந்த உத்தம கன்னிகையே!  சத்துவங்களைத் தேர்ச்சியாக்கி, ஐம்புலன்களை ஒடுக்கி, மாய்கைகளைத் தள்ளிப் பரம ஞானத்தில் பிரவேசித்து, ஆத்துமத்தின் உட்கோட்டையில் சாங்கோபாங்கத்துக்குக் கொடி போட்ட அரும் தபசியே!  நான் இந்தப் பிறவிப் பெருங்கடலில் நீந்தி அலுத்து, தேவ மணமும், ஏட்டுக்கெட்டா இன்பமும் கொண்ட கடவுளின் திருப்பாதங்களை உத்தமப் பிரகாரம் நமஸ்காரம் செய்துகொள்ள அறியாமல் தடுமா றும் இவ்வேளையில், எனக்குச் சகாயமாக வாரும்.  இந்த அழிவுள்ள உலகத்தை ஏன் இவ்வளவு சிநேகித்தேன்?  நான் பைத்தியக்காரனைப் போல வாடிப்போகிற பூக்களையும், காய்ந்து போகிற புற்களையும், நீங்கிப் போகிற நிழலையும் தேடி னேன்.  அதற்காக கஸ்தி வாதைகளையும், துக்க கவலைகளையும், அலைச்சல்களையும் வீணாகக் கொண்டேன்.  ஐயோ! மெய்ஞானியாகிய அர்ச்சியசிஷ்ட தெரேசம்மாளே! நில்லாமல் ஓடிப் போன சாலமோன் இராஜா மகிமை இப்போது எங்கே?  இராஜ கன பிரபுக்களுடைய மகத்துவம் எங்கே போனது? தேவன் தம்மைக் கனம் பண்ணுகிறவர்களைத் தாம் கனம் பண்ணுகிறார் என்று அறிந்திருந்தும் மோசம் போனேனே!  உலக சங்கை எவனைப் பின்சென்றது?  சர்வேசுரன் செய்யும் சங்கையே சங்கையல்லோ!  ஆ சாங்கோ பாங்கத்தை அடைந்த கன்னிகையே!  கபிரியேல் என்னும் சம்மனசானவர் தானியேலைப் பார்த்து, “நீ மகா பிரியமானவன்” என்றது போல, தேவ னால் வரும் கீர்த்தியை விட சர்வேசுரனுக்காகப் படும் நிந்தை அவமானங்களை நான் அதிகமாய் மதித்தால் அல்லோ தாவிளை.  ஆ! அன்பால் தெய்வத்தை நேருக்கு நேராய்க் கண்ட அர்ச்சிய சிஷ்டவர்களே, ஒருக்காலும் என்னை விட்டு நீங்காத நித்திய ஆஸ்திகளை நான் கண்டடைய எனக்காக மன்றாடுங்கள்.  உலக வெகுமானங்கள் எனக்கில்லாது போனாலும், அதனால் வரும் நஷ்டம் ஒன்றுமில்லையே.  நரகத்திலிருப்பவர்கள் எல்லாக் காரியமும் தங்களுக்குக் கடந்து போனமையால் புலம்பித் தவிக்கிறார்களே.  ஆகையால் கார்மேல் சபைக் கன்னிகையே, என் ஆண்டவரும், நித்திய ஆஸ்தியுமாகிய சேசுகிறீஸ்து வையும், அவருடைய இராச்சியத்தையும் நான் நித்தியம் சம்பாதித்துக் கொள்ளத்தக்கதாக, புகைபோல் நீங்கும் எல்லாக் காரியங்களையும் நான் சட்டை பண்ணாதிருக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும்.  நீர் நரகத்தைக் காட்சியால் பார்த்து, ஆயுசுபரியந்தம் அதன் நினைப்பு வரும்போதெல்லாம் உள்நடுக்கம் கொண்டீரே. பாவியாயிருக்கிற நான் எம்மாத்திரம் அதை நினைத்து நடுங்க வேண்டியவனாயிருக்கிறேன்!  நித்திய ஆனந்த மோட்ச சந்தோஷத்தை உணர்ந்து, அநேக மணி நேரம் பேச்சற்று ஆனந்தப் பரவசத்தில் இருந்தீரே.  வாக்குக்கெட்டாத இந்த சந்தோஷமடைய நான் எம்மாத்திரம் அருமை யான தபசு செய்ய வேண்டியவனாயிருக்கிறேன்!

ஆ, கார்மேல் சபைக் கன்னிகையே!  என் உடலை விட்டு உயிர் பிரியுமுன்னே, காணப்பட்ட யாவற்றையும் நான் துறந்துவிட்டு, அட்சயத்தையும், வரம்பெற்ற சந்தோஷங்ளையும் கொண் டிருக்கிற சர்வேசுரனுக்கு நான் முழுதும் சொந்தமாயிருக்க மன்றாடும்.  உம்முடைய மனதுக்கு எப்போதும் விரோதம் செய்து, இன்பமானவைகளை விட்டுத் துன்பமானவைகளையும், மகிமையானவைகளை விட்டு இழிவானவைகளையும் விரும்பிக் கொண்ட அர்ச்சியசிஷ்ட தெரேசம்மாளே!  நான் என்னைப் பகைத்து, என் சொந்த மனதுக்கு இடறு பண்ணி, துன்பம், பிணிகள், வியாதிகள்,சோதனைகள், தரித்திரம், நிந்தைகள், ஒறுத்தல், தபசு, இடைவிடாச் செபம் முதலிய காரியங்களில் விருப்பம் கொண்டு, தெய்வத்தைக் கைவசம் செய்து கொள்ளும் வரத்தை நான் அடையச் செய்யும். தேவனே மனிதனாகித் தம்மை வெறுமையாக்கி, அடிமையின் வே­ம் எடுத்தபோதே, நான் உலகிற்கு எறிந்து விடப்பட்ட பொருளாகி, ஈனத்தை விரும்பி ஆங்காரத்தை அழித்தல்லோ தெய்வவழியில் செல்ல வேண்டும்!  தயையின் ஆண்டவர் தலைசாய்க்க இடங்கொள்ளாமல், “ஒருவன் நமது அண்டைக்கு வந்து, தன் சுய சீவனைப் பகையாதே போனால், நமக்குப் பிரியமானவனாய் இருக்க மாட்டான்” என்று திருவுளம்பற்றினாரே. ஆகையால் அர்ச்சியசிஷ்ட தெரேசம்மாளே, சுவாமியை விட எனக்கு வேறொரு காரியத்திலும் பிரியமில்லாதிருக்கவும், அவரை மாத்திரம் முழு மனதோடும், முழு புத்தியோடும், முழு ஞாபகத்தோடும் சிநேகித்து, நித்திய காலம் அவரோடு வாழ எனக்காக ஆண்டவரை வேண்டிக் கொள்ளும். 

ஆமென்