“மரியாயின் உற்பவம், பிறப்பு, வாழ்வு, உயிர்ப்பு, பரலோக ஆரோபணம் ஆகிய வாழ்வின் திருநிகழ்ச்சிகளில் ஏறக்குறைய எல்லா மனிதரிடமிருந்தும் தேவமாதாவை சர்வேசுரன் மறைத்து வைக்கக் கிருபை கூர்ந்தார். பிந்திய காலங்களில் மாதா வகிக்கும் பாகம் தலைசிறந்ததாக இருக்கும். மற்றெல்லாக் காலங்களையும் விட இக்காலங்களில் மாதா இரங்குவதிலும், வல்லமையிலும், வரப்பிரசாதம் வழங்குவதிலும் அதிகமாக விளங்கித் துலங்க வேண்டும். மாதா வழியாகவே உலகத்தின் மீட்பு ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் வழியாகவே அது முற்றுப்பெறவும் வேண்டும். மாமரி இதுவரை இருந்ததை விட அதிகமாக அறியப்படவும், அதிகமாக நேசிக்கப்படவும், அதிகமாக மதிக்கப்படவும் வேண்டும் என கடவுள் விரும்புகிறார்” என்று மரியாயின் சுவிசேஷகர் அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் கூறுகிறார்.
“உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள். நீயோ அவள் குதிங்காலைத் தீண்ட முயல்வாய்” (ஆதி. 3:15).
சர்வேசுரன் ஒரேயயாரு பகையைத்தான் ஏற்படுத்தினார். அது சமாதானத்திற்கு வர முடியாதது. சிங்காரவனத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பகை உலக முடிவில் பயங்கரமாயிருக்கும். சாத்தானின் தலை நசுக்கப்படும். சர்வேசுரன் வெற்றி பெறுவார். கடவுள் மாதாவை வைத்தே உலக சிருஷ்டிப்பை ஆரம்பித்தார். அதுபோல் மாதாவை வைத்தே முடிப்பார். மாதாவின் மகிமை துலங்கும் இப்பிந்திய காலம் “மரியாயின் யுகம்” என்றழைக்கப்படும். சமீப நூற்றாண்டுகளில் சர்வேசுரன் பல காட்சிகள், வெளிப்படுத்தல்கள் மூலமாக மாதாவைப் பற்றியும், இறுதிக் காலத் தைப் பற்றிய பல உண்மைகளை மாதா வழியாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆன்மாக்களுக்கு பரலோக வரப்பிரசாத மழையைப் பொழிந்த அற்புத சுரூபக் காட்சி யுடன் இணைந்த வல்லமையுள்ள கன்னிகையின் காட்சி 1830-ல் அர்ச். கத்தரீன் லாபோருக்கு அருளப்பட்டது.
1846-ல் சலேத் நகரில் மெலானிக்கு மாதா மாபெரும் தீர்க்கதரிசனக் காட்சியளித்தார்கள். 1858-ல் லூர்து நகரில் அர்ச். பெர்னதத்தம்மாளுக்கு மாதா 18 முறை ஜெபமாலை ஏந்தியவர்களாய்த் தரிசனையானார்கள். 1917-ல் பாத்திமாவில் லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா ஆகிய மூன்று சிறுவர்களுக்கு முன்னறிவித்தபடி, உலகமே அதிசயித்த சூரிய அற்புதத்தை நிகழ்த்தினார்கள். 1943-ல் இத்தாலியிலுள்ள மோன்டிசியாரியில் தேவ இரகசிய ரோஜாவாகக் காட்சி தந்து மறக்கப்பட்டு மறைக்கவும்பட்ட பாத்திமா காட்சியின் செய்தியை ஞாபகமூட்டினார்கள். எனவே மரியாயின் யுகம் என்று அழைக்கப்படுகிற இக்காலத்தில் நாம் மாதாவை நோக்கி மன்றாடி அவர்களுடைய பாதுகாப்பையும், வரப்பிரசாதங் களையும் பெற்றுக் கொள்வோமாக.
அற்புத சுரூபம் மற்றும் வல்லமையுள்ள கன்னிகையின் காட்சி
தேவ நீதியின் கரம் மட்டுமிஞ்சிய மனித பாவங்களால் நிறைந்துள்ள மனுக்குலத்தை திருத்த வரும் என்று எதிர்பார்க்கப்படுகிற இவ்விறுதிக் காலங்களில் நம்மைப் பாதுகாக்கும் கேடயமாக மாதாவின் அமலோற்பவத்தை ஆண்டவர் நமக்குத் தரச் சித்தம் கொண்டார். 1830-ல் அர்ச். கத்தரீன் லாபோர் வழியாக “வல்லமையுள்ள கன்னிகையாக” மாதா தன்னையே நமக்குத் தந்துள்ளார்கள். மாதாவின் அமலோற்பவ ஆடையை நாம் அணிந்திருக்கும் போது பசாசின் தாக்குதல்களிலிருந்தும் உலகத்தின் அழிவுகளிலிருந்தும் பாதுகாக்கப்படுவோம்.