(1930 முதல் 1938 வரையிலும் போலந்து நாட்டில் சகோதரி பவுஸ்தீனா மேரிக்கு சேசுநாதர் பல தடவை காட்சியளித்து தமது அளவில்லா இரக்கத்தை வெளிப்படுத்தினார். உலகத்தை அச்சுறுத்தும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் கேடயமாக தம் இரக்கத்தின் பக்தி இருக்கிறதென அறிவித்தார். உலகம் அவருடைய இரக்கத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டால் தாம் அதைக் காப்பாற்றுவதாக வாக்களித்துள்ளார்.)
சேசு தம் இரக்கத்தை உணர்த்த சகோதரி பவுஸ்தீனா வழியாக உரைத்த சில வார்த்தைகள்
“என் இருதயம் இரக்கமயமானது. இந்த இரக்கக்கடலிலிருந்து வரப்பிரசாதவெள்ளம் உலகமெங்கும் பாய்கிறது. என்னிடம் வந்த எந்த ஆத்துமமும் ஆறுதல் அடையாமல் போன தில்லை. என் இரக்கத்தில் எல்லாத் துன்பங்களும் மறைந்துவிடுகின்றன. இரட்சிக்கும் அருளும் அர்ச்சிக்கும் அருளும் இவ்வூற்றிலிருந்தே சுரக் கின்றன.”
“என் இரக்கத்தில் நம்பிக்கை வைப்பதற்கு மிகப்பெரும் உரிமை, மிகப் பெரும் பாவிக்கு உள்ளது... மற்றெல்லாரையும் விட ஒரு ஆத்துமம் அதிக பாவியாயிருந்தாலும், அது என் இரக்கத் தையும் தயாளத்தையும் தேடுமானால் அதை என்னால் தண்டிக்க இயலாது. அளக்கக்கூடாததும் கண்டுபிடிக்க முடியாததுமான என் இரக்கத் தினால் நான் இந்த ஆத்துமத்தை நியாயப்படுத்தத் தேடுகிறேன்.”
“என்மேல் நம்பிக்கை இல்லாதிருப்பது என் இதயத்தை கிழியச் செய்கிறது. என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நம்பிக்கையின்மை மற்ற அனைத்தையும்விட அதிகமாக என்னை வேதனைப்படுத்துகின்றது. என் சிருஷ்டிகள் என்னை நம்ப வேண்டுமென்று ஆசிக்கிறேன்.”
1936 மார்ச் 25 மங்கள வார்த்தை திருநாள் அன்று மாதா பவுஸ்தீனாவுக்குக் காணப்பட்டு, “நான் ஒரு மீட்பரை உலகிற்குக் கொடுத்தேன். அவருடைய இரக்கத்தை நீ உலகிற்கு பறைசாற்றி அவருடைய இரண்டாம் வருகைக்கு உலகைத் தயார் செய். இன்னும் நேரம் இருக்கும்போதே ஆன்மாக்களிடம் இப்பெரும் இரக்கத்தைப் பற்றிப் பேசு” என்று கூறினார்கள்.