(திருநாள் : மே 22)
அவசரத்தில் இருப்பவர்களின் பரிபாலினியாகிய அர்ச். ரீத்தம்மாளே! சர்வேசுரனிடத்தில் நீர் கேட்கும் மன்றாட்டுகள் ஒருபோதும் தடுக்கப் படாததாலும், உம்மை நோக்கி மன்றாடுகிறவர்களுக்கு நீர் பொழிகிற ஏராளமான உபகாரங்களுக்காகவும், நீர் நம்பிக்கையற்றவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் பரிபாலினி என்று அழைக்கப்படுகிறீர். அர்ச். ரீத்தம்மாளே! தாழ்ச்சி, பரிசுத்ததனம், ஒறுத்தல், பொறுமை முதலிய புண்ணியங்களிலும் சிலுவையில் அறையுண்ட சேசுவின்பேரில் கொண்ட அத்தியந்த இரக்க நேசத்திலும், நீர் அதிகரித்திருக்கின்றீராதலால், நீர் அவரைக் கேட்பதெல்லாவற்றையும், அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியவராய் இருக்கிறீர். இதனிமித்தம் நம்பிக்கையுடன் உம்மை அண்டிவந்து, நாங்கள் கேட்கும் எல்லா உதவியையும் பெற நாங்கள் பாத்திரவான்களாய் இல்லாவிட்டாலும், ஆறுதலையாவது பெறுவோம் என்று எதிர்நோக்குகிறோம். உம்மை நோக்கிப் பிரார்த்திக்கிறவர்களுக்காக சர்வேசுரனிடத்தில் உமக்குள்ள வல்லபத்தைக் காட்டி, எங்கள் மன்றாட்டுக்கு அனுகூலமாயிரும். சர்வேசுரனுடைய பெரு மகிமைக்காகவும், உம்முடைய பக்தி பரவுவதற்காகவும், உம்மிடத்தில் நம்பிக்கை வைக்கிறவர்களின் ஆறுதலுக்காகவும், அநேக ஆச்சரியமான வியங்களில் நீர் உதவி புரிந்ததுபோல் இப்பொழுதும் எங்களுக்கு உமது உதவியை ஏராளமாய்ப் பொழிந்தருளும். எங்கள் வேண்டுதல் தந்தருளப்படுமாகில், நீர் செய்த உபகாரத்தை வெளிப்படுத்துவதால் உம்மை மகிமைப்படுத்தி உமது புகழ்ச்சியை என்றென்றைக்கும் பாடிப் புகழ வாக்களிக்கிறோம். சேசுவின் திரு இருதயத்திடம் உமக்குள்ள வல்லமை பேறுபலன் மட்டில் நம்பிக்கை வைத்து உம்மை நோக்கி வேண்டிக் கொள்ளுவதேதெனில், (இவ்விடத்தில் நீ கேட்கும் மன்றாட்டைச் சொல்லிக் கொள்ளவும்.) இந்த மன்றாட்டைத் தயவோடே எனக்குப் பெற்றுத் தந்தருள உம்மை மன்றாடுகிறேன்.
ஆமென்.