அப்போஸ்தலரும், சுவிசேஷகருமான அர்ச்சியசிஷ்ட அருளப்பர் ஜெபம்

(திருநாள் : டிசம்பர் 27)

சகல புண்ணியங்களுக்கும் அஸ்திவாரமும், வேருமாகிய தாழ்ச்சி என்கிற புண்ணியத்திற்குத் துணையாயிருக்கிற கற்பென்கிற புண்ணியத்தை மகா ஆசையோடு அனுசரித்துக் கொண்டு வந்த அர்ச். அருளப்பரே, சுவாமியானவர் வெகுவாய் சிநேகிக்கும் அந்தப் புண்ணியம் எனக்கு அகப்படும்படியாய்த் தயை செய்தருளும்.  

கன்னிமையினால் அல்லவா நீர் சுவாமியின் அருகிலிருக்கப் பேறுபெற்றீர்!  அதனாலல்லவா மற்ற அப்போஸ்தலர் அறியக் கூடாத தேவன் சமூகத்தைக் கடலருகில் கண்டு கொண்டீர்! உலகத்தின் சகல ஆஸ்தி பாஸ்திகளை விடவும், இன்ப சுகங்களை விடவும், மகிமை பெருமையை விடவும், நான் அதிகமாய் விரும்புகிற அந்தக் கற்பென்கிற புண்ணியம் எனக்குக் கிடைக்கும்படியாய் ஆண்டவரை எனக்காக மன்றாடும்.  

கற்பில் பிசகிப் போகிறதை விட நான் என் உயிரை விட்டு விடுவேன்.  சர்வேசுரன் கற்புள்ளோரை அணுகி அவர்களுக்கு வெகு அருமையான வரங்களைக் கொடுக்கிறார் என்பதினாலும், மகா ஆனந்த பாக்கியம் கற்பில் அடங்கியிருக்கிறபடியாலும் அதை எனக்கு அடைந்து தர உமது பாதத்தில் விழுந்து உம்மை வெகு ஆவலோடு மன்றாடுகிறேன். 

தேவ சிநேகத்தை எழுப்புகிறதும், உலக மாய்கைகளை அகற்றுகிறதும், தன்னை அறிய உதவியாயிருப் பதும் அந்தப் புண்ணியமானதால் அர்ச். அருளப்பரே, அதை எனக்கு அடைந்தருளும். பாத்மோஸ் என்னும் தீவிலேயிருந்து தேவன் உத்தரவுப்படி வரப்போகிற காரியங்களைத் தெரிவித்த தீர்க்க தரிசியே, நான் உலகையும் உடலையும் வெறுத்து, இன்ப சுகங்களை வெறுமையாய் எண்ணி, பொருட்களை உபயோகம் பண்ணுதலில் விமரிசையுள்ளவனாகி, இரும்பு காந்தத்தை நோக்கித் தாவுவது போல் என் இருதயம் கடவுளை நோக்கித் தாவப் பண்ணும். 

உலக சாஸ்திரங்களும், சிருஷ்டிப்புகளும், கீர்த்திகளும் பெரும் வாழ்வும் என்னை விட்டகலும் என்பது நிச்சயமானபடி யால், எல்லாக் கிரியைகளிலும் சீர்கொண்டு, நினைப்புகளைக் கிரமத்தில் அமைத்து, கற்பில் உயர்ந்து, கார்மெல் பர்வதமாகிய ஞான ஏகாந் தத்தில் நான் உயரப் பண்ணும். பூலோகத்திலேயே மோட்ச பாக்கியத்தை அனுபவித்த அப்போஸ்தலரே,  என் நல்ல தகப்பனாரே, எல்லாவித தந்திரங்களிலும், மாய்கைகளிலும், துர்இச்சைகளிலும், என்னைச் சேராத காரியங்களிலும் செல்கிற என் மனது கற்பினால் எனக்குள் ஒடுங்கியிருக்கப் பண்ணும்.  

எல்லாவற்றையும் விட வெகு ஆசை யோடு சுவாமியை அண்டிக் கொண்டிருந்த அப்போஸ்தலரே, நான் என் ஐம்புலன்களால் கூடியமட்டும் உள்ளிந்திரியங்களை நாட சக்தியுள்ள மட்டும் என் பலம் கொண்டமட்டும் ஆவலோடும், கற்போடும், சுவாமியைத் தேட எனக்காக வேண்டிக் கொள்ளும்.  

சர்வ தேவ இலட்சணங்களையும், வாக்குக் கெட்டா இன்பங்களையும், சகல திரவியங்களை யும் கொண்டிருக்கிற சுவாமியைத் தேடுகிறதை விடப் பின் யாரை நான் தேடுவேன்?  மாம்சத்தை ஒடுக்கி, விகார சிந்தனைகளை அடக்கி, தகாத ஆசைகளைத் தகர்த்து, இடுக்கமான தேவ வழியில் நான் கற்போடு நடக்க எனக்காக வேண்ட உம்மை மன்றாடுகிறேன்.  

ஆமென்.