அர்ச்சியசிஷ்ட சின்னப்பர் மனந்திரும்பிய திருநாள் ஜெபம்

(திருநாள் : ஜனவரி 11)

சர்வேசுரனுடைய விசேஷ கிருபையால் மனந்திரும்பி வீரத்துவமான புண்ணியங்களாலும், மட்டற்ற தேவசிநேகத்தாலும் விளங்கின அர்ச்சியசிஷ்ட சின்னப்பரே, உம்மை வணங்கிப் புகழ்ந்து, உமக்கு நமஸ்காரம் செய்கிறேன். எத்தனையோ ஆயிரம் நமஸ்காரம் செய்கிறேன்.  

எத்தனையோ  ஆயிரம் புறவினத்தார், பதிதர், பிரிவினைக்காரர் நடுவில் நான் ஒருவன் விசேஷ வகையாய் கடவுளின் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறபடியால், நான் யாவற்றையும் வெறுத்து, அவருடைய ஊழியத்தில் கிரமமாய் நிலைத்திருக்க எனக்காக ஆண்டவரை மன்றாடும்.  

தீயோர் கெட்டுப் பெருந்தீயில் நரகில் வேதனைப்படுவதை நான் கண்டறிந்து, என் ஆத்துமத்தைப் பிடிக்க எங்கும் கண்ணிகளை வைத்திருக்கும் பசாசுகளுக்கும், மாய்கையால் ஆத்தும சத்துவங்களில் இருளை யேற்றும் உலகத்திற்கும், எண்ணப்படாத பாசங்களால் அறிவைக் கெடுக்கும் என் ஆகாத ஆசை களுக்கும், உலகில் சாதாரணமாய்க் காணப்படும் துர்மாதிரிகைகளுக்கும் பயப்படுகிறேன். 

நன்றாயிருந்தவன் பாவியாவானேயாகில் அவனுக்கு கனமான மோசம் வருமென்றும், தப்பி நரகில் போன பின் ஒருக்காலும் அதை விட்டு வர இயலாது என்பதையும் கண்டு கலங்குகிறேன். ஒரு கனியின் ஆசையால் வந்த பாவம் தீர, நரதேவன் கொடிய வேதனைப்பட்டு மரித்தார் என்பதை யோசித்து நடுநடுங்குகிறேன். 

எல்லா நன்மைகளையும் செய்து, எல்லாத் தீமைகளையும் நீக்கி, நித்திய பாக்கியம் கொடுக்கிற சர்வ இலட்சண சுவாமியை அடுத்து அவரை அண்டியிருப்பதற்கு என்ன வருத்தம்? ஆ! அர்ச். சின்னப்பரே, தேவரீர் மனந்திரும்பிய பின் உலக வாழ்வைச் சட்டை பண்ணாமல்  நிந்தை அவமானங்களுக்கும், நிஷ்டூரருடைய கண்டனங்களுக்கும் உட்பட்டு, மரணபரியந்தம் தேவசிநேகத்தில் நிலைபெற்றிருந்தீரே. அதைப் பார்த்து, நான் உலக தந்திர மாய்கையாலும், உடலின் தொந்தரவுகளாலும் என்னை உண்டு பண்ணி இரட்சித்த சுவாமியை இழக்காதிருக்க ஆண்டவரை மன்றாடும்.  

ஒரு கனிக்காக தேவனை எதிர்த்ததும், உலக வாழ்வுக்காக எட்டுப் பேர் தவிர எல்லா மனிதர்களும் நீர்ப்பிரளயத்தில் செத்ததும், நரகம் நித்தியமென்று அறிந்தும், அநேகர், புறவினத் தார், பதிதர், பிரிவினைக்காரராயிருப்பதையும் யோசிக்கையில் என் நெஞ்சு கலங்குகின்றதே. 

சாவுக்கும், நிந்தை அவமானங்களுக்கும் அஞ்சாமல் வெளியில் திரிந்து அநேகரை ஈடேற்ற வழியில் கொண்டு வந்த அர்ச்சியசிஷ்ட சின்னப்பரே, தேவனைப் பற்றி உயிரைத் தர விரும்பிய கோடானுகோடி வேதசாட்சிகளில் நானும் ஒருவனாயிருந்தால் அல்லோ எனக்கு ஆனந்தம்?  ஆங்காரம், காமம், கர்வம், அகந்தை, இடும்பை என்னை ஆட்கொள்ளாமல், தேவபயம், மோட்ச ஆசை, புண்ணிய விருப்பம் என்னை ஆட்கொள்ள உதவி செய்யும். என் மனோவாக்குக்கெட்டாத உன்னதக் கடவுளை நான் உட்கண்ணால் பார்த்து மகிழ மாட்டேனா?  

தேவப் பிரகாசத்தை அடைய உலகில் குருடனாயிருக்க வேண்டுமென்றாற் போல, உமது கண்பார்வை மறைய தேவ ஒளியை உம்மில் தாக்கச் செய்த சேசுவை நீர் இரவும் பகலும் உய்த்துணர்ந்து இக்கட்டுகளில் அக்களிப்புக் கொண்டிருந்தீரே. நீர் முன் செய்திருந்த தவறுகளை நினைத்து அழுது கொண்டு, மகா வீரத்துவமான கிரியைகளைச் செய்து மூன்றாம் வானமட்டும் ஏறவும், தேவகாட்சியைக் காணவும் பேறுபெற்றதைப்பார்த்து, நான் ஞானயோகங்களால் சுவாமியில் நிலைத்து, அவரில் மகிழ்ந்திருக்கச் செய்தருளும். 

மகா தியானியானவரே, தந்திரங்கள், வறட்சி, சோதனைகளில் உட்பட்டும் உயிருள்ள விசுவாசத்தால் தேவனில் பிழைத்து, ஒன்றுக்கும் அஞ்சாமல் உறுதியான நம்பிக்கையில் தேர்ந்து உலக செல்வசுகங்களை முற்றும் வெறுத்த அப்போஸ்தலரே, வேதத்தைப் படிக்காமல் இஸ்பிரீத்துசாந்துவினால் அதை அறிந்த பெரிய சாஸ்திரியே, என்னை மூடிக் கொண்டிருக்கும் இருளிலிருந்து நான் நீங்கி, கிறீஸ்துவில் ஜீவிப்பதும், கிறீஸ்துவுக்காக மரிப்பதுமே பெரிய காரியமென்று நான் உணர தயைசெய்தருளும். 

ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனனியா என்னும் புனிதரால் ஞான ஸ்நானம் பெற்றபின், நல்ல சண்டை செய்து, ஜீவியம் முடிகிற காலம் வரையிலும் தவ ஒழுக்கம், செபம், ஞான வேலையில் முழு பக்தியோடு நிலைநின்ற போதகரே, நித்திய கிரீடம் எனக்கு ஸ்திரமாகுமளவும், சாவு வரைக்கும் சத்தியத்தைப் பிடித்துத் தெரிந்து கொண்ட பாத்திரமாய் நான் ஆகும் வரையிலும் ஞானப் போரிலும் தைரியமுள்ளவனாயிருக்க எனக்காக வேண்டிக்கொள்ளும்.  

நான் முன் செய்த பாவங்களுக்குத் தாராள பரிகாரம் செய்யவும், மேன்மேலும் வரப்பிரசாதங்களில் உயர்ந்து, தேவ சிநேகத்தில் உறுதியுள்ளவனாயிருக் கவும் ஒத்தாசை செய்தருளும். நிர்ப்பந்தங்களில் சந்தோஷம் கொண்டு சுவாமியின் இடத்திலிருந்து அருமையான பேச்சுகளைக் கேட்க வரம் பெற்ற அர்ச். சின்னப்பரே, என் நினைவு, ஆசைகள் எல்லாம் மோட்ச பாக்கியங்களில் இழுக்கப் பட்டுப் பரிபூரண சந்தோஷத்தை மாத்திரம் நாடியிருக்கச் செய்தருளும். 

உமது திருநாளைக் கொண்டாடுகிற நாங்கள் அனைவரும் பாவப் பாதையை விட்டு மேலான நித்திய இன்பங்களில் ஆவல் கொண்டு, தானம், தவம், பொறுமை, சாந்தம், பாவத்தை வெறுத்துத் தள்ளுதல் இவை முதலிய புண்ணியங்களில் ஓங்க சர்வேசுரனை வேண்டிக் கொள்ளும்.  

ஆமென்.