11-ம் பத்திநாதர் பாப்பானவர் அதுவரையில் சிலுவைப்பாதைக்குள்ள பலன்களையெல்லாம் எடுத்துவிட்டு அவைகளுக்குப் பதிலாய் கீழ்க்கண்ட பலன்களைப் புதிதாய் அளித்திருக்கிறார். தனது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு தனியாக அல்லது மற்றவர்களோடு சேர்ந்து:
1. சிலுவைப்பாதை செய்யும் ஒவ்வொரு முறையும் (Toties quoties) ஒரு பரிபூரணப் பலன்.
2. சிலுவைப்பாதை செய்யும் அதே நாளில் திவ்விய நன்மை வாங்கினால் ஒரு பரிபூரணப் பலன். அல்லது பத்துமுறை சிலுவைப் பாதை செய்தபின் ஒரு மாதத்துக்குள் திவ்விய நன்மை வாங்கினால் ஒரு பரிபூரணப் பலன்.
3. சிலுவைப்பாதை செய்துகொண்டிருக்கும் போது யாதாமொரு நியாயமான காரணத்தை முன்னிட்டு அதை முடிக்கக் கூடாமற்போனால், அது வரையில் சந்தித்த ஸ்தலம் ஒவ்வொன்றுக்கும் 10 வரும் 10 மண்டலத் தனிப் பலன்கள்.
4. நோயாளிகள், பிரயாணிகள், சிறையிலிருப்பவர்கள், அஞ்ஞான நாடுகளில் வசிப்பவர்கள், நியாயமான காரணத்தை முன்னிட்டு, சிலுவைப்பாதை செய்யக் கூடாதவர்கள் சிலுவைப் பாதைப் பலன் ஸ்தாபிக்கப்பட்ட பாடுபட்ட சுரூபத்தைக் கையில் பிடித்துக் கொண்டு 20 பர. 20 அருள், 20 திரி. செபித்தால் பரிபூரண பலன் அடையலாம். அதாவது ஸ்தலத்துக்கு 1 பர. 1 அருள். 1 திரி. ஆக 14 பர. 14 அருள். 14 திரி. செபங்களும், நமது ஆண்டவரின் ஐந்து திருக் காயங்களுக்குத் தோத்திரமாக 5 பர. 5 அருள். 5 திரி. செபமும் பாப்பானவர் கருத்துக்காக 1 பர. அருள். திரி. செபமும் செபிக்க வேண்டும். நியாய மான காரணத்தினிமித்தம் இப்படி 20 முறை செபிக்க முடியாதவர்கள் எத்தனை பர. அருள். திரி. செபங்களை செபிக்கிறார்களோ அத்தனை தடவை 10 வரும் பத்து மண்டலப் பலனடையலாம்.
5. அதிக வியாதியாயிருந்து இந்த செபங்களை செபிக்கக்கூடாதவர்கள் பலன் ஸ்தாபிக்கப் பட்ட பாடுபட்ட சுரூபத்தை முத்தி செய்தாவது அன்புடன் அதைப் பார்த்தாவது திருப்பாடுகளை நினைத்து ஒரு சிறு மனவல்லய செபம் செய்தால் பரிபூரண பலனடையலாம்.