அர்ச். ஸ்டீபன்.
ஹங்கேரி தேசத்துப் பிரபுவின் குமாரரான ஸ்டீபன் சிறுவராய் இருந்தபோதே, புண்ணிய வழியில் வெகு கவனத்துடன் வளர்க்கப்பட்டார். இவருடைய தந்தை இறந்தபின், ஸ்டீபன் அரசராகி தேசத்தை சிறப்பாக ஆண்டு வந்தார்.
தன் தேசத்திலுள்ள அஞ்ஞானத்தைப் போக்கி, குருட்டு பக்தியுள்ள கெட்ட வாடிக்கைகளையும் போக்கினார். தன் தேசத்தில் 10 மறைமாவட்டங்களை ஸ்தாபித்து, அவைகளுக்கு வேண்டிய மானியங்களையும் அளித்தார். திருச்சபைத் தலைவரான பரிசுத்த பாப்பரசருக்கு ஒரு குழந்தை போல கீழ்ப்படிந்து நடந்துவந்தார். தேவதாயார் மீது மிகவும் பக்தி வைத்து, தம் தேசத்தைப் பரமநாயகியின் ஆதரவில் ஒப்புக்கொடுத்தார்.
அநேக கோவில்களையும் சத்திரங்களையும் கட்டி, சத்தியவேதம் செழித்தோங்கும்படி செய்தார். ஏழைகள் மட்டில் இவர் இரக்கங்கொண்டு அவர்களுக்கு ஏராளமாய் தர்மம் கொடுப்பார். இரவு வேளையில் இவர் மாறுவேடமிட்டு எளியவர்களிருக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்களுக்கு உதவி செய்வார்.
இவர் இறந்தபின் இவர் சரீரம் அழிந்தபோதிலும் இவருடைய வலது கை அழியாமலிருந்தது. இவருடைய மூத்த குமாரன் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டு, சிறு வயதிலிருந்தே அர்ச்சியசிஷ்டவரானார். இந்த தர்ம இராஜா விதித்த தேச சட்டங்களில் சகலரும் ஞாயிறு வாரங்களை அனுசரித்து, விபசாரம், சூது முதலிய பாவங்களை விட்டொழிக்கும்படி ஏற்பாடு செய்தார். அப்படி மீறினவர்களைத் தண்டிக்கும்படியான சட்டங்களை ஏற்படுத்தினார்.
இந்த உத்தம இராஜா இடைவிடாமல் ஜெப தபங்களைப் புரிந்து தேவ உதவியை மன்றாடி, தன் கடைசி காலம் நெருங்கிவிட்டதை அறிந்து, தன் தேசத்துப் பிரபுக்களை வரவழைத்து, திருச்சபைக்கு எப்போதும் கீழ்படிந்து சத்திய வேதத்தைப் பாதுகாக்கும்படி புத்திமதி கூறி, அவர் மிகவும் வணங்கி நேசித்த தேவமாதா மோட்சத்திற்குப் போன திருநாளன்று பாக்கியமான மரணமடைந்து, மோட்ச இராச்சியத்தில் சேர்ந்தார்.
யோசனை
நாம் எப்போதும் திருச்சபைக்குக் கீழ்படிந்து வருவோமாக.