அர்ச். அம்புரோஸ் - ஆயர் - (கி.பி. 397).
உரோமை சக்கரவர்த்திக்குப் பிரதான மந்திரிபோலிருந்து, அநேக மாகாணங்களுக்கு அதிபதியாயிருந்த மகா பிரபுவிடத்தினின்று அமிர்தநாதர் என்று சொல்லப்படும் அம்புரோஸ் பிறந்தார். இவருடைய மிகுந்த திறமையையும், கல்வியறிவையும் குறித்து, இவர் மிலான் நகருக்கு தேசாதிபதியானார். அந்நகருக்குப் புதிய ஆயர் நியமிக்கப்பட்டபோது, ஆரிய பதிதரால் பெருங் கலகமுண்டாயிற்று. இதைக் கேள்விப்பட்ட அம்புரோஸ், கலகத்தை அடக்கும்படி அவ்விடத்திற்குச் சென்றார். கலகம் அடங்கியபின், அந்நகரத்தார் இவரை அப்பட்டணத்திற்கு ஆயராக தெரிந்துகொண்டபோது, இவர் அதற்குச் சம்மதித்து, ஞானஸ்நானம் முதலிய தேவதிரவிய அனுமானங்களைப் பெற்று, ஆயர் அபிஷேகம் பெற்றார். இவர் இந்த உந்நத பட்டத்திற்கு உயர்த்தப்பட்டபின், தமக்கிருந்த திரண்ட செல்வத்தை ஏழைகளுக்கும், நிலங்களை கோவிலுக்கும் கொடுத்தார். அடிக்கடி ஒருசந்தியிருந்து, இடைவிடாமல் ஜெபம் செய்து, தமது பிரசங்கத்தாலும் புத்திமதியாலும் கணக்கற்ற பதிதரையும், பிற மதத்தினரையும் சத்திய வேதத்திற்கு மனந்திருப்பினார். சிறந்த வேதசாஸ்திர நூல்களை எழுதியதால், இவருக்கு திருச்சபையின் வேதபாரகர் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. தேவ கட்டளை விஷயத்தில் முகத்தாட்சணியமின்றி நடந்து வந்தார். ஒருமுறை ஒரு கோவிலை ஆரிய பதிதருக்கு கொடுப்பதற்காக இராணி செய்த முயற்சியெல்லாம் இவரால் வீணானது. அச்சமயம் தெயதோசியுஸ் சக்கரவர்த்தி தன் தேசத்திலுண்டான கலகத்தில் குற்றமற்றவர்களையும் தண்டித்ததினால், அம்புரோஸ் தெயதோசியுஸை திருச்சபையிலிருந்து விலக்கி, தகுந்த பரிகாரம் செய்யும்படி கட்டளையிட்டார். இந்த ஆயர் தேவநற்கருணை மீதும் தேவதாயார் மீதும் மிகுந்த பக்தி வைத்து, அதை மற்றவர்களும் பின்பற்றும்படி செய்தார். இவருடைய விடாமுயற்சியால் தெய்வ பக்தியின்றி திரிந்த அர்ச். அகுஸ்தீன் மனந்திரும்பினார். இவர் திருச்சபைக்காக சிரத்தையுடன் உழைத்தபின், வியாதியுற்று, சேசுநாதரைத் தரிசிக்க பாக்கியம் பெற்று, அவர் கையில் தமது ஆன்மாவை ஒப்புக்கொடுத்தார்.
யோசனை
நாமும் இந்த மகா அர்ச்சியசிஷ்டவரைக் கண்டுபாவித்து, வேத விஷயத்தில் முகத்தாட்சண்யம் பாராமல் நடப்போமாக.