செப்டம்பர் 08

அர்ச். தேவமாதா பிறந்த திருநாள்.

எந்த ஒரு தேசத்திலும் பட்டத்துக் குழந்தை பிறக்கும் நாளில் வெகு சந்தோஷமும் கொண்டாட்டமும் உண்டாவது சகஜமே. ஜென்மப் பாவமின்றி உற்பவித்து, சுதனாகிய சர்வேசுரனுக்கு மாதாவாக சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட திருக்குழந்தை பிறந்த நாளில், பூலோகத்தில் மாத்திரமல்ல பரலோகத்திலும் சந்தோஷக் களிப்பு உண்டானது. தங்களுக்கு அரசியானவள் பிறந்ததினால் சம்மனசுக்கள் சந்தோஷித்து மகிழ்ந்தார்கள். தங்களை மீட்டு இரட்சிக்கும் கர்த்தருடைய தாயாரின் பிறப்பைப்பற்றி பூவுலகிலுள்ள பிதாப் பிதாக்களும் புண்ணியவாளரும் சந்தோஷித்து ஆறுதல் கொண்டார்கள்.  ஆனால் தன் தலையை நசுக்கித் திரளான ஆத்துமங்கள் மோட்சத்திற்குப் போவதிற்கு காரணமான ஸ்திரீயின் பிறப்பால் நரகம் பயந்து நடுங்கியது.

மேலும் இன்றையத் தினம் ஆரோக்கியமாதா திருவிழாவென்று கூறப்படுகிறது.  அதெப்படியெனில் பாவமாகிற நித்திய மரணத்திற்கு உள்ளான மனித ஜென்மத்தை மீட்டு இரட்சித்தவர் சுதனாகிய சர்வேசுரனே. ஆகையால் பாவ வியாதிக்கு அவரே ஞான ஆரோக்கியம். இப்படிப்பட்ட ஆரோக்கியத்தை உடையவரைப் பெற்றெடுத்தவளை ஆரோக்கிய மாதா என்று கூற நியாயம் உண்டல்லவா? ஆகையால் இப்பேர்ப்பட்ட மகாநாளில் நாமும் ஞான சந்தோஷங் கொண்டு நம்முடைய ஆன்ம சரீர வியாதியைப் போக்கி ஆரோக்கியம் அடைந்தருளும்படி ஆரோக்கிய மாதாவை நோக்கி மன்றாடுவோமாக    

யோசனை

சர்வேசுரன் தேவமாதாவை நமக்குத் தாயாராகக் கொடுக்கச் சித்தமான இந்த மகா நாளில் அவருக்கு நன்றி கூறி துதிக்கக் கடவோம்.