ஏழு வேதசாட்சிகள் - (கி.பி. 297)
உரோமை சக்கரவர்த்தியான மாக்ஸிமியன் பெர்சியாவை ஜெயித்து உரோமைக்குத் திரும்புகையில், சமோசாற்றா நகரில் பிரவேசித்து, அவ்விடத்தில் பொய்த் தேவர்கள் பெயரால் ஒரு பெருந் திருநாள் கொண்டாடும்படி கட்டளையிட்டான். அந்நகரில் தனவந்தரும், உயர்ந்த குடும்பத்தாரும், அந்நகரின் பிரதான நடுவர்களுமான இப்பார்க்கஸ், பிலோத்தேயுஸ் என்னும் இருவர் சத்தியவேதத்தில் சேர்ந்து, வேத கட்டளைப்படி நடந்து வந்தார்கள். இவர்கள் இராயன் கட்டளையிட்ட அஞ்ஞான திருவிழாவுக்குப் போகவில்லை. அந்நாட்களில் உயர்குடி மக்களான ஐந்து பேர் மேற்கூறப்பட்ட நடுவர்களைச் சந்திக்கச் சென்றபோது, அவர்கள் கூறிய புத்திமதியைக் கேட்டு ஞானஸ்நானம் பெற்றார்கள். மேற்கூரிய இரு நடுவர்களும் திருவிழாவுக்கு வராததைப்பற்றி கேள்விப்பட்ட இராயன் அவர்களைத் தன் முன் கொண்டுவந்து நிறுத்தும்படி கட்டளையிட்டு, கிறீஸ்தவ வேதத்தை மறுதலித்து தன் தேவர்களுக்குப் பலியிடும்படி பயமுறுத்தினான். அவர்கள் அதற்கு இணங்காததினால், அவர்களை கொடூரமாய் உபாதிக்க கட்டளையிட்டு, புதிதாய் ஞானஸ்நானம் பெற்ற அந்த ஐவரையும் சிறையிலடைக்கும்படி கட்டளையிட்டான். பிறகு இராயன் அந்த ஏழு பேரையும் தானே நேரில் விசாரணை செய்தபோதும், அவர்கள் கிறீஸ்தவ வேதத்தை மறுதலிக்காததினால் கோப வெறிகொண்டு, அவர்களை சித்திரவதை செய்து, சிலுவையில் அறைந்து கொல்லும்படி தீர்ப்பளித்தான். அந்த 7 வேதசாட்சிகள் சற்றும் பயப்படாமல் கொலைக்களத்திற்குச் சென்று, கொடுங்கோலனுடைய கொடூரத் தண்டனையைத் தைரியத்துடன் ஏற்று, சேசுநாதருக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்து, மோட்ச முடியைப் பெற்றுக்கொண்டார்கள்.
யோசனை
சத்திய வேதத்தை அறியாதவர்களுக்கு காலத்திற்கு தகுந்தாற்போல நல்ல புத்திமதியாலும், ஆலோசனையாலும், விசேஷமாக நமது நன்னடத்தையாலும் அவர்களுக்கு வேத சத்தியத்தை புகட்டுவோமாக.