செப்டம்பர் 13

அர்ச். மவுரீலியுஸ் - ஆயர் - (கி.பி. 453).

தனவந்தரான மவுரீலியுசுடைய பெற்றோர் இவரை ஒரு துறவற மடத்தில் புண்ணிய சாஸ்திரங்களைக் கற்கும்படி சேர்த்தார்கள். இவர் படிப்பை முடித்து பிரான்சு தேசத்திற்கு போய், அவ்விடத்தில் பெயர் பெற்ற அர்ச். மார்த்தீனுக்கு சீஷனாகி புண்ணியத்திலும் நன்னடத்தையிலும் நன்கு பிரகாசித்தார். இவர் குருப்பட்டம் பெற்றபின் பிறருடைய ஆன்ம இரட்சண்யத்திற்காக வெகுவாக முயற்சி செய்து, பிறமதத்தினர் அநேகரை மனந்திருப்பி, சத்திய வேதத்தில் சேர்த்தார். ஒரு நாள் இவர் ஒரு பெரிய பேய் கோவில் அருகே நின்றுகொண்டு, அது நிர்மூலமாகும்படி ஆண்டவரைப் பார்த்து வேண்டிக்கொள்கையில், ஆகாயத்தினின்று அக்கினி புறப்பட்டு வந்து அதைச் சுட்டு சாம்பலாக்கி விட்டது. ஆவேஷம் ஏறின ஒரு குருட்டுப் பெண்பிள்ளையைக் குணப்படுத்தி, சிலுவை அடையாளத்தினால் அவளுக்குப் பார்வையும் கொடுத்தார். ஒருவனிடத்தில் அடிமையாயிருந்த ஒரு சிறுவனை அடிமைத்தனத்தினின்று விடுதலை செய்யும்படி மவுரீலியுஸ் கூறியதற்கு அவன் சம்மதிக்கவில்லை. பிறகு அவன் அந்த இரவிலே இறந்தபடியால், அவனுடைய உறவினர்கள் இவரைக் கேட்டுக்கொண்டதின் பேரில், இவர் அவனுக்கு புதுமையாக உயிர் கொடுத்தார். உறுதிப்பூசுதல் பெறாமல் ஒருவன் இறந்தபடியால் இவர் துக்கப்பட்டு மறைமாவட்டத்தை விட்டு வேறு தேசத்திற்கு போய் விட்டார். மற்றவர்களுடைய வேண்டுகோளினால், இவர் தமது மறைமாவட்டத்திற்கு திரும்பி வந்து, இறந்து போனவனுக்கு இவர் வேண்டுதலால் உயிருண்டாகி உறுதிப்பூசுதல் பெற்றான். இப்படியே இவர் அநேக புதுமைகளையும் புண்ணியங்களையும் செய்து 90-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவராகக் காலஞ் சென்றார்.       

யோசனை

நமது கடமையை அசட்டை செய்திருப்போமாகில் அதைத் திருத்திக்கொள்ள பிரயாசைப்பட வேண்டும்.