திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள் - (கி.பி. 629).
கி.பி. 614-ல் பெர்சியா தேசத்தின் அரசன் மூன்று பெரும்படையைத் திரட்டி மெசப்பொத்தேமியா தேசத்தில் சென்று அதை ஜெயித்து, கணக்கிலடங்கா கிறீஸ்தவர்களையும், குருக்களையும், கன்னியர்களையும் வதைத்துக் கொன்று, ஒரு இலட்சம் கிறீஸ்தவர்களையும் சிறைப்படுத்தி, யூதருக்கு விற்றுப் போட்டு, தேவாலயங்களைக் கொள்ளையடித்து, ஜெருசலேமிலிருந்த திருச்சிலுவையை எடுத்துக்கொண்டு தன் தேசத்திற்கு போனான். கொன்ஸ்தாந்திநோப்பிலுள்ள பக்தியுள்ள அரசனான எராக்ளியுஸ் என்பவர், அநேக நாட்கள் ஒருசந்தி இருந்து, ஜெபதபங்களை நடத்தி, பெர்சியா மேல் படையெடுத்துச் சென்று, அவர்களை ஜெயித்து, கி.பி. 627-ம் வருடம் திருச்சிலுவையை பகைவர்களிடமிருந்து மீட்டு வந்தார். அதை மறுபடியும் கபால மலையிலுள்ள திருச்சிலுவை கோவிலில் ஸ்தாபிக்கக் எண்ணினார். கி.பி. 629-ம் வருடம், குறித்த நாளில் கணக்கற்ற விசுவாசிகள் பெருங்கூட்டமாக சேர்ந்து, கபால மலைக்குச் சங்கீதங்களை பாடிக்கொண்டும் ஜெபித்துக்கொண்டும் பயபக்தியுடன் பவனியாக சென்றார்கள். அரசர் தமது இராஜ உடைகளைத் அணிந்துக்கொண்டு, திருச்சிலுவையைத் தமது தோளின் மீது சுமந்துகொண்டு நடக்க முயற்சித்தும் அவரால் முடியாமல் போனது. அப்போது ஆயரான சக்கரியாஸ் என்பவர் இராயனைப் பார்த்து: “அரசே, நமது கர்த்தர் நிந்தை அவமானத்துடன் சுமந்து சென்ற சிலுவையை நீர் நேர்த்தியான ஆடையணிந்து சுமப்பது தகாது” என்றார். அரசர் உடனே தமது இராஜ உடைகளையும், கிரீடத்தையும் களைந்துவிட்டு, ஏழைக்குரிய வஸ்திரம் தரித்து, சிலுவையை எளிதாக சுமந்துகொண்டு போய் தேவாலயத்தில் ஸ்தாபித்தார்.
யோசனை
நமது சிலுவையாகிய துன்பதுரிதம், வியாதி, தரித்திரம், குடும்பத் தொல்லை முதலியவற்றைப் பொறுமையுடன் சகிப்போமாகில், நமக்கு மனச் சமாதானமும் ஞான சந்தோஷமும் உண்டாகும்.