செப்டம்பர் 17

அர்ச். பிரான்சிஸ்குவின் ஐந்துகாயத் திருநாள்.

அசிசி நகரத்தில் பிறந்த பிரான்சிஸ்கு, அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசைக் குறித்து 40 நாள் ஒருசந்தி பிடித்து, அந்த நாட்களை ஜெபத் தியானத்தில் செலவழிப்பார். ஒரு நாள் இவர் சேசுநாதருடைய திருப்பாடுகளின் மேல் மிகவும் பக்தி வைத்து அவற்றைப் பற்றி உருக்கத்தோடும் துக்கத்தோடும் தியானித்துக் கொண்டிருக்கையில், சடுதியில் ஒரு பக்திச்சுவாலகர் ஆறு சிறகுகளுடன் தம்மை நோக்கி வேகமாய்ப் பறந்து வருவதைக் கண்டு அதிசயித்தார். அந்த தரிசனம் சிலுவையில் அறையுண்ட பிரகாரம் ஆகாயத்தில் நிற்கையில், அதன் இரு கை கால்களிலும், விலாப்பக்கத்திலும் ஐந்து காயங்கள் காணப்பட்டன. அப்படிக் காணப்பட்ட ஐந்து காயங்களிலிருந்து ஐந்து கதிர்கள் புறப்பட்டு அர்ச்சியசிஷ்டவருடைய இரு கரங்களிலும், பாதங்களிலும், விலாவிலும் காயங்களை உண்டாக்கின. மேலும் சதைகளாலான ஆணிகள் அக்காயங்களில் காணப்பட்டு, அவைகளால் இவர் மிகவும் வேதனைப்பட்டார்.  அதற்குப்பின் அத்தரிசனம் மறைந்தது. இதைக் குறித்து இவர் ஐந்துகாயப் பிரான்சீஸ்கு என்று அழைக்கப்படுகிறார். அந்த காயங்களினின்று இரத்தம் புறப்படும். அப்போது இவருக்கு உண்டாகும் வேதனையைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வார். தாழ்ச்சியினிமித்தம் அந்த காயங்களை இவர் மறைக்கப் பார்த்தும், இவராலே அது கூடாமற் போய், அதனால் அநேக புதுமைகளும் நடந்தன. இந்த அற்புத சம்பவத்தைக் குறித்து இன்று திருநாள் கொண்டாடப் படுகிறது.        

யோசனை

கர்த்தருடைய திருப்பாடுகளையும் அவருடைய காயங்களையும் அடிக்கடி தியானித்து வருவோமாகில், மரண நேரத்தில் அத்திருக்காயங்களை முத்தி செய்து உயிர் விடும் பாக்கியம் பெறுவோம்.